திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: 2-ம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
- திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது.
- ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவே 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
தற்போது கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது. இதனால் வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் வருகிற 30, 31, ஜனவரி 1-ந்தேதிகளில் கன்னியாகுமரியில் நடக்கிறது.
இதில் 30, 31-ந்தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
30-ந்தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்ணாடி இழை கூண்டு பாலத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு முதலமைச்சர் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறுகிறது.
"திருக்குறளின் பயன்கள் தனி மனிதருக்கா, சமுதாயத்திற்கா?" என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்திற்கு பிரபல பேச்சாளர் சுகிசிவம் நடுவராக இருப்பார். "தனி மனிதருக்கு" என்ற தலைப்பில் ராஜாராம், மோகன சுந்தரம், மதுக்கூர் ராமலிங்கம் பேசுகின்றனர். "சமுதாயத்திற்கு" என்ற தலைப்பில் ராஜா, புலவர் சண்முகவடிவேல், பேராசிரியர் பர்வீன் சுல்தானா உரையாற்றுகின்றனர்.
2-ம் நாள் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா மலரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிடுகிறார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை அவர் தொடங்கி வைப்பதுடன் ஏற்கனவே நிறைவு பெற்றுள்ள திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார். பிற்பகல் 11.30 மணிக்கு கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கத்திற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்குகிறார். "சமகாலத்தில் வள்ளுவர்" என்ற தலைப்பில் பேராசிரியர் கருணானந்தம் பேசுகிறார். "திருக்குறளும் சங்க இலக்கியமும்" என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பால கிருஷ்ணன் பேசுகிறார்.
இதேபோல் "வள்ளுவம் போற்றும் சமய நல்லிணக்கம்" என்ற தலைப்பில் புலவர் கவுதமன் பேசுகிறார். "வள்ளுவம் போற்றும் சமத்துவம்" என்ற தலைப்பில் வக்கீல் அருள் மொழியும், "வள்ளுவம் காட்டும் அறம்" என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் பழனியப்பனும், "திருக்குறளில் இசை நுணுக்கம்" என்ற தலைப்பில் பேராசிரியர் விஜயசுந்தரியும் உரையாற்றுகின்றனர். மாலை 4 மணி முதல் 7 மணி வரை தமிழ்நாடு கலை பண்பாட்டு துறையின் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஜனவரி 1-ந்தேதி புதன் கிழமை காலை 9 மணிக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், திறந்து வைக்கப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் உலக அளவில் வெற்றி பெற்றவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தலைமை தாங்குகிறார். தொடர்ந்து கலை பண்பாட்டுத் துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.