மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் தமிழக அரசு உள்ளது- டி.டி.வி. தினகரன்
- தி.மு.க.வினரின் ஆசியோடு குற்றங்கள் நடப்பதை யாராலும் மறுக்க முடியாது.
- தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாள்தோறும் அரங்கேறுகிறது.
நெல்லை:
தமிழகத்தை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக தி.மு.க. அரசு மாற்றிவிட்டதாக கூறி அதனை கண்டித்தும், போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக்கோரியும் மகளிர் தினமான இன்று நெல்லை மாநகர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கி கலந்து கொண்டு கண்டன உரையாற்றி பேசியதாவது:-
தமிழகத்தில் பெண்கள் முதல் வயதான மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. சட்டம்-ஒழுங்கை சரி செய்யுங்கள். பால்வாடிக்கு செல்கின்ற பால் முகம் மாறாத பெண் குழந்தைகள் முதல் கல்லூரிக்கு செல்கிற மாணவிகள், பள்ளிகளுக்குச் செல்கிற சிறுமிகள், வேலைக்கு செல்கிற பெண்கள், வீட்டிலே இருக்கிற பெண்கள், மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுவதை தடுக்க ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர்.
மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். மாதராய் பிறக்க மாதவம் செய்ய வேண்டும் என்ற பேசப்பட்ட தமிழகத்தில் பெண்களாய் பிறந்ததற்கு அச்சப்படும் நிலை உள்ளது. பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பாதுகாக்கும் ஆசிரியர்கள் தவறு செய்கின்றனர். பாலியல் வன்கொடுமை, போதை பொருள் நடமாட்டம், கனிமவள கொள்ளை என எந்த குற்றமாக இருந்தாலும் தி.மு.க.வுக்கு நேரடி அல்லது மறைமுக தொடர்பு இருக்கிறது.
தி.மு.க.வினரின் ஆசியோடு குற்றங்கள் நடப்பதை யாராலும் மறுக்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் ரவுடிகள் ஓடி ஒழிந்தார்கள். இப்போது தி.மு.க கொடி பொறித்த வண்டியில் வந்து ரவுடிசம் செய்யும் நிலை உள்ளது. பெண்கள் பாலியல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டால் புகார் அளிக்க கூடாது என அவர்கள் அளித்த புகார்கள் லீக் செய்யப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் காவல் துறை ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகமான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். அதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். அவரது ஆட்சி காலத்தில் தான் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது.
தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாள்தோறும் அரங்கேறுகிறது.
பாலியல் வன்கொடுமை செய்து பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். பள்ளிக்கு பெண் குழந்தைகளை அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பை கட்டிகொண்டு இருக்கும் அவலம் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சரால் பெண் முன்னேற்றத்திற்கு கொண்டு வந்த நல்ல திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் மூடுவிழா காணப்படுகிறது.
மீதம் இருக்கும் ஓராண்டினை பாவமன்னிப்பு பெறும் ஆண்டாக எடுத்து விழித்து கொள்ளுங்கள். இந்த ஆட்சியாளர்கள் 4 ஆண்டுகளாக கமிஷனை தவிர வேறு எதன் மீதும் அக்கறை இல்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக தமிழக அரசு செயல்படுவதை பார்த்து சந்தி சிரிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.