தமிழ்நாடு

இன்று நடைபெற இருந்த த.வெ.க. மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

Published On 2025-01-27 11:53 IST   |   Update On 2025-01-27 11:53:00 IST
  • இன்று தொடங்கும் ஆலோசனை கூட்டம் அடுத்த 4 நாட்களுக்கு நடைபெறும் எனவும் தகவல் வெளியானது.
  • இன்று தொடங்கும் ஆலோசனை கூட்டம் அடுத்த 4 நாட்களுக்கு நடைபெறும் எனவும் தகவல் வெளியானது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கட்சி தொடங்கி ஒர் ஆண்டு நிறைவு பெற இருப்பதை ஒட்டியும், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையிலும் கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். கட்சி தொடங்கிய பிறகு களத்தில் அரசியல் பயணத்தை தொடங்கும் வகையில், பரந்தூர் விமான நிலையம் அமைவதற்கு எதிராக போராடி வருவோரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து இருந்தார்.

இதை தொடர்ந்து தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்தும் வகையில், 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில், கட்சி பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் பணிகளை மேற்கொண்டார். அதன்படி மாவட்ட அளவில் கட்சி பணிகளை செய்வதற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் வலுவான அணியை விஜய் உருவாக்கி வருகிறார்.

மாவட்ட செயலாளர் தலைமையில் இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணை செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட கட்சிப் பணிகளை மேற்கொள்வார்கள். இந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வாகி வருகிறார்கள்.

234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். அதில் முதல் கட்டமாக விஜய் தமிழக வெற்றிக்கழகத்துக்கு புதிதாக 19 மாவட்ட செயலாளர்களை அறிவித்தார்.

இதையடுத்து, இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டது. இன்று தொடங்கும் ஆலோசனை கூட்டம் அடுத்த 4 நாட்களுக்கு நடைபெறும் எனவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட உள்ளோர் DD-களை பெற தாமதம் ஏற்பட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News