தமிழ்நாடு

ஃபாசிச அணுகுமுறைகளை யார் கையிலெடுத்தாலும் த.வெ.க. தீர்க்கமாக எதிர்க்கும் - விஜய்

Published On 2025-02-16 12:46 IST   |   Update On 2025-02-16 12:46:00 IST
  • மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?
  • அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?

புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து தமிழ் நாடு அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழ் நாட்டில் கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன?

ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது. பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன?

மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.

ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News