பாசிஸ்ட்டுகளுக்கு எரிச்சல் வரும் என்றால் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்! - உதயநிதி
- அமித் ஷாவின் கருத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும்.
சென்னை:
பாராளுமன்ற நேற்றைய கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.
இந்த கருத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமித் ஷாவை கண்டித்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்" என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும்.
அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்!
வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்! என கூறியுள்ளார்.