கவர்னர் மாளிகை முன்பு காங்கிரஸ் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை உட்பட 300 பேர் கைது
- இந்தியா முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து அதானி தொழிலை நடத்தி வருகிறார்.
- உலக நாடுகளுக்கெல்லாம் சுற்றுலா செல்லும் பாரத பிரதமர் மணிப்பூர் செல்லாததற்கான காரணம் என்ன?
சென்னை:
அதானியின் ஊழல் மோசடிகள் குறித்தும், மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பிரதமர் மோடி நேரில் சென்று சந்திக்காதது உள்ளிட்ட முக்கிய பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், முன்னிலையில் இன்று கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது, மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-
அதானி இந்திய அதிகாரிகளுக்கு எத்தனை ஆயிரம் கோடிகளை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதானி தொழில் எந்தவிதத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
அதானி தொழில் நியாயமான முறையில் நடக்கிறதா, எத்தனை அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்துள்ளார். மத்திய அரசு அதானி என்ற ஒற்றை நபருக்காக தேசத்தை அடகு வைக்கிறது.
பங்குச்சந்தை ஊழலுக்கு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். அதானி பெரிய ஊழல் நடத்தியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என அந்நிய நாடுகள் சொல்லும் போது ஏன் இந்தியா மறுக்கிறது.
இந்தியா முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து அதானி தொழிலை நடத்தி வருகிறார்.
உலக நாடுகளுக்கெல்லாம் சுற்றுலா செல்லும் பாரத பிரதமர் மணிப்பூர் செல்லாததற்கான காரணம் என்ன?
மணிப்பூர் இந்தியாவின் மாநிலம் தானே? தமிழக அரசு நிதி கேட்டால் கொடுக்க மறுக்கிறீர்கள். தமிழக அரசு கொடுக்கும் வரி பணத்தில் எங்கள் பங்களிப்பை தாருங்கள் என்றால் மறுக்கிறீர்கள்.
தமிழ்நாட்டின் உரிமையை, மாநிலத்திற்கான சுயாட்சியை பேசுங்கள் என்றால் மத்திய அரசு பேச மறுக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து கிண்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செல்வப்பெருந்தகை மற்றும் ரூபி மனோகரன், ராஜேஷ்குமார், துரை சந்திரசேகர், அசன் ஆகிய 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மூத்த தலைவர்கள் கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், கே.விஜயன், இமயா கக்கன், பொதுச்செயலாளர்கள் இல பாஸ்கரன், டி.செல்வம், தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, அமைப்பு செயலாளர் ராம் மோகன், மாவட்ட தலைவர்கள் எம்.ஏ.முத்தழகன், சிவ ராஜசேகரன், அடையாறு டி.துரை, மற்றும் எஸ்.எம்.குமார், மயிலை தரணி, அரும்பாக்கம் வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.