நெல்லை கொலை சம்பவம்: 'சகோதரனின் கொலைக்கு பழிக்குப்பழியாக உறவினர்களுடன் சேர்ந்து கொன்றேன்'- வாலிபர் வாக்குமூலம்
- கொலை சம்பவத்தால் கீழநத்தம் பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
- வடக்கூர், தெற்கூர் ஆகிய 3 இடங்களிலும் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன்கள் மாரிசெல்வம்(வயது 25), மாயாண்டி என்ற பல்ல மாயாண்டி(23).
மாயாண்டி நேற்று கொலை முயற்சி வழக்கு தொடர்பாக மாயாண்டி கோர்ட்டில் ஆஜராவதற்காக தனது சகோதரர் மாரி செல்வத்துடன் நேற்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது நீதிமன்றம் முன்பு வைத்து அவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு காரில் தப்பிச்சென்றது.
அப்போது அதில் ஒருவரை போலீசாரும், வக்கீல்களும் சேர்ந்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கீழநத்தம் இந்திரா காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(25) என்பதும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த கீழநத்தம் 2-வது வார்டு உறுப்பினர் ராஜாமணி கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக மாயாண்டியை, ராஜாமணியன், மனோராஜ் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என 7 பேர் கும்பல் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த தங்கமகேஷ்(21), மனோராஜ்(27), சிவா(19), முத்துக்கிருஷ்ணன்(26), கண்ணன்(22), அனவரத நல்லூரை சேர்ந்த மற்றொரு கண்ணன்(20) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மனோராஜ் வாக்குமூலமாக கூறியதாவது:-
எனது சகோதரன் ராஜாமணியை எவ்வித காரணமும் இன்றி மாயாண்டி வெட்டிக் கொலை செய்தார். இதனால் எனது குடும்பத்தினர் மிகுந்த துயரம் அடைந்தனர். இதனை பார்த்து எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எப்படியாவது மாயாண்டியை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். தொடர்ந்து அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்த நிலையில், அவர் கோவையில் இருந்து வழக்கு விசாரணைக்காக நேற்று கோர்ட்டுக்கு வருவதை அறிந்தேன்.
இதனால் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து காரில் கோர்ட்டு எதிரே காத்திருந்தேன். அப்போது அவர் ஓட்டலுக்கு சென்றுவிட்டு நீதிமன்ற நுழைவு வாயிலை நோக்கி சென்றார். உடனே அவரை சுற்றி வளைத்து கொலை செய்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், மாயாண்டி குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மாயாண்டி உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கொலை சம்பவத்தால் கீழநத்தம் பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இதனால் கீழநத்தம் மேலூர், வடக்கூர், தெற்கூர் ஆகிய 3 இடங்களிலும் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.