செய்திகள்

ரூ,10 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு: பாகிஸ்தான் ராணுவ மந்திரிக்கு தீவிரவாதி ஹபீஸ் சயீத் வக்கீல் நோட்டீஸ்

Published On 2018-01-06 12:51 GMT   |   Update On 2018-01-06 12:51 GMT
மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் குற்றவாளியான தீவிரவாதி ஹபீஸ் சயீத், பாகிஸ்தான் ராணுவ மந்திரியிடம் ரூ,10 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இஸ்லாமாபாத்:

தீவிரவாதத்தை ஒழிப்பதாக நடித்துவரும் பாகிஸ்தானுக்கு அமெரிக்க அரசு சமீபத்தில் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தது.

விரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு என்ற பெயரில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ஏராளமான நிதி உதவிகளை பெற்று பயனடைந்து வந்துள்ளது.

ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் பாகிஸ்தான் அரசு எடுக்கவில்லை என சமீபகாலமாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டி வருகிறது. பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட இருந்த சில நிதியுதவிகளும் சமீபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலர்களை வாரி வழங்கிய அமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் முட்டாள்களாக நினைத்து விட்டது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டில் முதன்முறையாக டுவிட்டர் பக்கத்தில் புத்தாண்டு தினத்தன்று டிரம்ப் வெளியிட்டுள்ள முதல் பதிவில் ’கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக 33 பில்லியன் டாலர்களுக்கு மேல் வழங்கியுள்ளது. ஆனால், நமது தலைவர்களை முட்டாள்களாக நினைக்கும் பாகிஸ்தான் பொய், வஞ்சகம் ஆகியவற்றை தவிர நமக்கு வேறு எதையும் அளித்ததில்லை. ஆப்கானிஸ்தான் மண்ணில் நாம் வேட்டையாடிவரும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலமும் அளித்து வருகிறது’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பாகிஸ்தான் பாதுகாப்புக்கு அமெரிக்க அரசால் அளிக்கப்படவிருந்த நிதியையும் அவர் நிறுத்தி வைத்தார். இதனால், கலக்கமடைந்த பாகிஸ்தான் அரசு மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் குற்றவாளியான தீவிரவாதி ஹபீஸ் சயீத் தலைமையிலான ஜமாத் உத் தாவா இயக்கத்துக்கு யாரும் நிதியுதவி செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

அப்பாவி பள்ளி குழந்தைகள் மீது தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தாத வகையில் ஜமாத் உத் தாவா உள்ளிட்ட இயக்கங்களின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பாகிஸ்தான் ராணுவ மந்திரி குர்ரம் தஸ்த்கீர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இப்படி பொறுப்பற்ற முறையில் பாகிஸ்தான் ராணுவ மந்திரி வெளியிட்ட அறிக்கையால் தனது கட்சிக்காரரான ஹபீஸ் சயீதின் நன்மதிப்புக்கு மிகப் பெரிய களங்கம் நேர்ந்து விட்டதாகவும், இதற்கு இழப்பீடாக 10கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் தோஹர் என்பவர் பாகிஸ்தான் ராணுவ மந்திரி குர்ரம் தஸ்த்கீருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீஸ் கிடைத்த 14 நாட்களுக்குள் ஹபீஸ் சயீதிடம் ராணுவ மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால்,  இரண்டாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் கிரிமினல் சட்டத்தின்படி உங்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. #tamilnews #HafizSaeed  #pakistanminister

Similar News