ஆஸ்திரியாவில் சிரியா வாலிபர் கத்திக்குத்து தாக்குதல்.. 14 வயது சிறுவன் பலி.. ஐவர் படுகாயம்
- இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ஆப்கனிஸ்தானை சேர்ந்த 24 வயது வாலிபர் ஜெர்மனியில் கூட்டத்தில் காரை மோதினார்.
ஆஸ்திரியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
இத்தாலி மற்றும் ஸ்லோவேனியாவின் எல்லைக்கு அருகிலுள்ள வில்லாச் நகரில் நேற்று [சனிக்கிழமை] சாலையில் சென்றுகொண்டிருத்தவர்களை இளைஞன் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான்.
ஆஸ்திரியாவுக்கு புலம்பெயர்ந்த 23 வயது சிரியா நாட்டு வாலிபர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை போலீசார் இன்னும் கண்டறியவில்லை. மேலும் அந்த நபரின் பின்னணி குறித்த தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பலியானவர்களில் நான்கு பேர் 14 முதல் 32 வயதுக்குட்பட்ட ஆண்கள், அதில் ஒருவர் துருக்கையை சேர்ந்தவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தாக்குதல் நடத்தியவருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருந்ததா அல்லது பயங்கரவாத செயலா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
புலம்பெயர்ந்தவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்நாட்டுக்கு படையெடுக்கும் அகதிகள் குறித்த விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.
ஆஸ்திரியாவின் உள்துறை அமைச்சக அறிக்கைப்படி, 2024 ஆம் ஆண்டில் 24,941 வெளிநாட்டினர் அந்நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் சிரியாவிலிருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் வந்தவர்களே அதிகம்.
முன்னதாக கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ஆப்கனிஸ்தானை சேர்ந்த 24 வயது வாலிபர் ஆஸ்திரியாவுக்கு அருகில் உள்ள ஜெர்மனி நாட்டின் முனீச்சில் நடந்த கூட்டத்திற்குள் காருடன் புகுந்ததில் 28 பேர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.