தங்கச் சுரங்கத்தில் திடீர் விபத்து - 48 பேர் உயிரிழப்பு
- கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
- பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேற்கு மாலியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 48 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஆப்பிரிக்காவின் முன்னணி தங்க உற்பத்தியாளர்களில் மாலியும் ஒன்று. மேலும் சுரங்கத் தளங்கள் தொடர்ந்து நிலச்சரிவுகளால் விபத்துகளுக்கு ஆளாகின்றன. உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மாலியில், தங்கத்தை ஒழுங்கற்ற முறையில் வெட்டி எடுப்பதைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
"சுரங்கத்தில்1800 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், சரிவைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. நிலை தடுமாறி சரிந்தவர்களில் சிலர் தண்ணீரில் விழுந்தனர். அவர்களில் ஒரு பெண் தனது முதுகில் குழந்தையை வைத்திருந்தார்," என்று ஒரு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் அதிகாரி ஒருவர் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் கெனீபா தங்க சுரங்க தொழிலாளர்கள் சங்கமும் 48 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் பலரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முன்னதாக கடந்த ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தங்க சுரங்கத்தில் ஒரு சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.