ஹமாஸ் கடத்திய ஜெர்மன் பெண்: வெளியான அதிர்ச்சி தகவல்
- ஷனி ஒரு பிக்-அப் டிரக்கில் அலங்கோலமான நிலையில் கடத்தி செல்லப்பட்டார்
- ஷனியின் தாய் தன் மகளை மீட்குமாறு இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியிடம் கோரிக்கை வைத்தார்
கடந்த அக்டோபர் 7 அன்று நூற்றுக்கணக்கான பாலஸ்தீன பயங்கரவாத ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் நுழைந்து கண்ணில் படுபவர்களை எல்லாம் சுட்டுக் கொன்று, 230க்கும் மேற்பட்ட பலரை சிறை பிடித்து சென்றனர். இந்த தாக்குதலில் 1400க்கும் மேற்பட்ட இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களும், பல வெளிநாட்டினரும் உயிரிழந்தனர்.
ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்டவர்களில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்களுடன் பல வெளிநாட்டினரும் அடங்குவர்.
இந்த தாக்குதலின் போது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதிக்கும் இடைபட்ட எல்லை பகுதியில் 'சூப்பர் நோவா' (Super Nova) இசைக்கச்சேரி எனும் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கும் திடீரென நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், பலரை கொன்று, சிலரை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
கடத்தப்பட்டவர்களில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 23 வயதான ஷனி லவுக் (Shani Louk) எனும் பெண்ணும் சிக்கி கொண்டார். அவர் ஒரு பிக்-அப் டிரக்கில் (pick-up truck) குப்புற படுக்க வைக்கப்பட்டு, பலவந்தமாக, அலங்கோலமான நிலையில் கடத்தி செல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகின.
இந்த தாக்குதலில் கடுங்கோபமடைந்த இஸ்ரேல் அரசு, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து காசா பகுதி முழுவதும் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது. இந்த போர் 23-வது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
தங்கள் வசமுள்ள பணயக்கைதிகளின் நிலை குறித்து எந்த விவரமும் ஹமாஸ் அமைப்பினர் தெரிவிக்கவில்லை. தன் மகளை எப்படியாவது மீட்டுத்தருமாறு ஷனியின் தாய் ரிகார்டா லவுக் (Ricardo Louk) ஜெர்மனியிடமும், இஸ்ரேலிடமும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் அவர் கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் உறுதி செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் அரசு அறிவித்திருக்கிறது.
இந்த துயரச்செய்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினரை எதிர்க்கும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஷனி கொல்லப்பட்டதற்கு தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.