217 வருடங்களுக்கு முந்தைய போரில் கைப்பற்றப்பட்ட டென்மார்க் ஸ்வெட்டர்
- ஆன்-மேரி கப்பலை அதில் உள்ள சரக்குகளுடன் இங்கிலாந்து கைப்பற்றியது
- லேட்சன் என்பவருக்கு நீல் வின்தர் எனும் கார்பென்டர் இப்பார்சலை அனுப்பியுள்ளார்
1807 காலகட்டத்தில் ஐரோப்பிய நாடான டென்மார்க்கிலிருந்து, ஃபேரோ தீவுகள் (Faroe Islands) ஜலசந்திக்கு ஆன்-மேரி (Anne-Marie) எனும் கப்பல் புறப்பட்டது. அப்போதைய டென்மார்க் மன்னருக்கு சொந்தமான 2 கப்பல்களில் ஆன்-மேரி கப்பலும் ஒன்று.
பிரான்ஸ் நாட்டு மன்னராக இருந்த நெப்போலியனுக்கும், பிற ஐரோப்பிய நாடுகளின் கூட்டணிக்கும் போர் (Napoleonic wars) நடந்த அந்த காலத்தில் ஆன்-மேரி கப்பல், தனது பயணத்தின் போது, செப்டம்பர் 2 அன்று ஹெச்எம்எஸ் டிஃபென்ஸ் (HMS Defence) எனும் இங்கிலாந்து கடற்படை கப்பலால் தாக்கப்பட்டது.
அந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாத ஆன்-மேரி கப்பலை அப்போதைய போர் மரப்புப்படி, தாக்குதலில் வென்ற இங்கிலாந்து கடற்படை, அதில் இருந்த சரக்குகள் மற்றும் தபால்களுடன் கைப்பற்றியது.
அந்த பொருட்கள் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
அவையனைத்தும் தற்போது வரை இங்கிலாந்தின் தேசிய காப்பகத்தில் (National Archives) பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தன.
சுமார் 200 வருடங்கள் கடந்த நிலையில், அக்கப்பலின் பொருட்கள் தற்போது முதல்முறையாக ஃபேரோ தீவுகளை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னிலையில் இங்கிலாந்தில் திறக்கப்பட்டன.
49 ஆயிரம் ஜோடி கம்பளியினால் பின்னப்பட்ட "ஸாக்ஸ்"கள், பல பறவைகளின் இறகுகள், மற்றும் ஒரு பார்சலும் அந்த பொருட்களில் இருந்தன.
அந்த பார்சலை பிரித்த போது, அதில் இயந்திர உதவியின்றி, கைகளாலேயே பின்னப்பட்ட ஒரு அழகிய ஸ்வெட்டர், தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அக்கால ஃபேரோ தீவுகளின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், ஒளிரும் வண்ணத்தில் காண்போர் கண்களை அந்த ஸ்வெட்டர் கவர்கிறது.
200 வருடங்கள் கடந்தும் அதன் தரம், வடிவம், வண்ணம், மற்றும் வேலைப்பாடு சிறிதும் குறையாமல் அப்படியே இருப்பது காண்போரை வியக்க வைத்தது.
1807 ஆகஸ்ட் 20 அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனை சேர்ந்த லேட்சன் (Ladsen) என்பவருக்கு நீல்ஸ் வின்தர் (Niels Winter) எனும் கார்பென்டர் அனுப்பியுள்ள இந்த பார்சலுடன் டேனிஷ் மொழியில் வின்தர் அனுப்பியுள்ள கடிதமும் இருந்தது.
அதில், "உங்களுக்கு எனது மனைவியின் வாழ்த்துக்கள். உங்கள் வருங்கால மனைவிக்கு என் மனைவி ஒரு ஸ்வெட்டரை இத்துடன் அனுப்பியுள்ளார். உங்கள் வருங்கால மனைவிக்கு இது பிடிக்கும் என நாங்கள் நம்புகிறோம்" என எழுதப்பட்டுள்ளது.
இந்த ஸ்வெட்டர் கலைப்பொருளாக இங்கிலாந்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட உள்ளது.