
VIDEO: விரல் வித்தை காட்டிய எலான் மஸ்க்
- முக்கிய பிரமுகர்கள் அமெரிக்காவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவு விருந்துக்கு சென்றனர்.
- வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.
உலக பணக்காரரும் பெரும் தொழிலதிபருமானவர் எலான் மஸ்க். அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார். மேலும் தேர்தல் நன்கொடையாக குடியரசு கட்சிக்கு கோடிக்கணக்கில் செலவழித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றதை தொடர்ந்து அரசாங்கத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்புகள் எலான் மஸ்க்குக்கு வழங்கப்பட்டன.
மேலும் விண்வெளியில் 9 மாதங்களாக சிக்கி தவித்த சுனிதா வில்லியம்சை தனது 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவன விண்கலத்தை அனுப்பி மீட்டு பூமிக்கு கொண்டு வந்ததை தொடர்ந்து அவருடைய செல்வாக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், எலான் மஸ்க் முதலிய முக்கிய பிரமுகர்கள் அமெரிக்காவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவு விருந்துக்கு சென்றனர்.
அங்கிருந்த நாற்காலிகளில் அவர்கள் உட்கார்ந்திருந்து உணவுக்காக காத்திருந்தனர். அந்த சிறிய இடைவேளைக்குள் மேஜை மீதிருந்த கரண்டிகளை எடுத்து விரலில் நிலைநிறுத்தி எலான் மஸ்க் வித்தை காட்டினார். இதனை அங்கிருந்தவர்கள் ஆர்வத்துடன் பாா்த்து ரசித்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.