
உக்ரைனுக்கு ரூ.28 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்கும் ஜெர்மனி
- உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியை வழங்குகின்றன.
- ஜெர்மனி நாடாளுமன்றம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பெர்லின்:
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ல் போர் தொடுத்தது. 3 ஆண்டுகளைத் தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியை வழங்குகின்றன. அவற்றின் உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.
அந்தவகையில் சுமார் ரூ.28 ஆயிரம் கோடி ராணுவ உதவியை வழங்குவதாக ஜெர்மனி அரசாங்கம் அறிவித்திருந்தது. இதில் டிரோன்கள், கவச உடைகள் போன்றவை அடங்கும். ஆனால் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த உதவி பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தற்போது ஜெர்மனி நாடாளுமன்றம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையே உக்ரைனின் சபோரிஜியா பிராந்தியம் மீது ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் பலியாகினர். 12 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.