மன்னராட்சி கோரி போராட்டம்: நேபாள முன்னாள் மன்னரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய முடிவு
- போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்.
- காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
நேபாளத்தில், 2007-ம் ஆண்டு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, 2008-ம் ஆண்டு குடியரசு உருவானது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

இதனையடுத்து முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவின் ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். போலீசார் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர்.
இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது. கலவரம் தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஞானேந்திராவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. போராட்டங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஞானேந்திரா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் பாதுகாப்பை அரசாங்கம் குறைத்துள்ளது. அவரது வீட்டிற்கான பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 25-ல் இருந்து 16 ஆக குறைக்கப்பட்டது.
ஞானேந்திராவின் பாதுகாப்பு வீரர்களின் குழுவையும் அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதாகவும், அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வன்முறைகளுக்கு முன்னாள் மன்னர் ஞானேந்திரா பொறுப்பேற்கவேண்டும் என நேபாள காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மன்னராட்சிக்கு ஆதரவான நடவடிக்கைகள், இந்து ஆதரவு போராட்டக்காரர்களின் பின்னணியில் ஞானேந்திரா இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹால் குற்றம்சாட்டினார்.