"இது பைத்தியக்காரத்தனம்" - பைடன் அரசை தாக்கும் மஸ்க்
- ஹெச்1-பி விசா நடைமுறை இந்தியர்களுக்கு பெரிதும் பயனளித்தது
- கள்ளத்தனமாக வருபவர்களுக்கு வசதி செய்திருக்கிறோம் என்கிறார் மஸ்க்
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு உள்ளே நுழைபவர்களை தடுக்க எல்லைகளை பலப்படுவது உள்ளிட்ட பல முயற்சிகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. அதே போல், சட்டரீதியாக அனுமதி பெற்று அங்கு கல்வி பயிலவும், பணியாற்றவும் வருபவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்து பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
உலகின் பல நாடுகளிலிருந்து அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு, குடியுரிமை இல்லாமல், அயல்நாட்டு பணியாளராக மட்டுமே நீண்ட காலம் அமெரிக்காவில் பணி புரிய வாய்ப்பளித்து வருவது ஹெச்1-பி விசா (H1-B visa) நடைமுறை.
இது இந்தியாவில் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மிகவும் பயனளித்து வந்தது.
ஹெச்1-பி விசா எண்ணிக்கைக்கும் அரசு உச்சபட்ச அளவை நிர்ணயித்துள்ளது.
கடந்த 2020 ஜூலை மாதம், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புது விசா வழங்கலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
தற்போதைய ஜோ பைடன் அரசு விசா வழங்கலில் கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை.
இந்நிலையில், சுமார் 7 லட்சத்திற்கும் மேல் திறமை வாய்ந்த பணியாளர்கள் அமெரிக்காவிற்கு வர காத்திருக்கும் நிலையில், 85 ஆயிரத்திற்கு மேல் ஹெச்1-பி விசா வழங்கப்படாது என உச்சவரம்பை அமெரிக்கா நிர்ணயித்துள்ள தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அதே போன்று, முன்னாள் அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரின் ஆட்சிகளிலும் தற்போது ஜோ பைடனின் ஆட்சியிலும் சட்டவிரோதமாக உள்ளே நுழைபவர்களின் எண்ணிக்கை குறித்து ஒப்பிட்டு தகவல் வெளியானது.
அதன்படி, கடந்த ஆட்சிகளில் 98,000 என இருந்த சட்டவிரோதமாக உள்ளே நுழைவோரின் எண்ணிக்கை தற்போதைய அதிபர் பைடன் காலத்தில் 2,42,000 என உயர்ந்துள்ளது.
இந்த விவரங்களை ஒப்பிட்டு உலகின் நம்பர் 1 கோடீசுவரரும் டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதள கணக்கில் விமர்சித்துள்ளார்.
அதில் மஸ்க் தெரிவித்திருப்பதாவது:
திருட்டுத்தனமாகவும், சட்டவிரோதமாகவும் அமெரிக்காவிற்கு உள்ளே நுழைவது மிக எளிதாக உள்ளது. ஆனால், சட்டரீதியாக உள்ளே நுழைய விரும்புபவர்களுக்கு அது மிக கடினமாக்கப்பட்டுள்ளது.
நாம் சட்டபூர்வ வழிமுறைகளை கடினமாக்கி, சட்டவிரோத வழிகளை எளிதாக்கி விட்டோம்.
இது அசல் பைத்தியக்காரத்தனம்.
பைடனின் நிர்வாகம் கள்ளத்தனமாக வருபவர்களுக்குத்தான் வசதி செய்து கொடுத்துள்ளது என தரவுகள் உறுதிபடுத்தி உள்ளன.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.