ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு- அமெரிக்காவில் இந்திய மாணவர் கைது
- இஸ்ரேலின் போரை கண்டித்து சில மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
- பதர் கான் சூரியை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேலின் போரை கண்டித்து சில மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அளித்த இந்திய மாணவியின் விசா சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தாமாக அமெரிக்காவில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் ஹமாஸ் ஆதரவு குற்றச்சாட்டில் அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த பதர் கான் சூரி அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். அவர் பல்கலைக் கழகத்தின் எட்மண்ட் ஏ. வால்ஷ் வெளிநாட்டு சேவைப் பள்ளியில் உள்ள அல்வலீத் பின் தலால் மையத்தில் முஸ்லிம்-கிறிஸ்தவ புரிதலுக்கான முதுகலை பட்டதாரி ஆவார்.
இதற்கிடையே ஹமாஸ் ஆதரவு பிரசாரத்தை பரப்பியதாக பதர் கான் சூரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவருடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து வர்ஜீனியாவில் உள்ள வீட்டில் இருந்த அவரை குடியேற்ற அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. பதர் கான் சூரியை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் உதவிச் செயலாளர் டிரிசியா மெக் லாப்லின் கூறும்போது, பதர் கான் சூரி ஹமாஸ் பிரசாரத்தை சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பரப்பி யூத எதிர்ப்புவாதத்தை ஊக்குவித்தார் என்றார்.
அமெரிக்க பெண்ணை மணந்துள்ள பதர் கான் சூரி, கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தன் மீது எந்த குற்றப் பதிவும் இல்லை என்றும், தனது மனைவியின் பாலஸ்தீன பூர்வீகம் காரணமாக தான் குறி வைக்கப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார்.