நாட்டு மக்களுக்கு 15-ந்தேதி பிரியாவிடை உரையாற்றுகிறார் ஜோ பைடன்
- 13-ந்தேதி வெளியுறவுத்துறை சார்பில் உரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- மேலும் பலருக்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். டிரம்ப் அதிபராக வருகிற 20-ந்தேதி பதவி ஏற்கிறார்.
இந்த நிலையில் தற்போது அதிபராக உள்ள ஜோ பைடன் 20-ந்தேதி நண்பகல் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுகிறார். அதற்கு முன்பாக வருகிற 15-ந்தேதி ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு பிரிவுபசார உரையாற்றுகிறார்.
அப்போது தனது ஆட்சி நிர்வாகத்தில் மேற்கொண்டு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 13-ந்தேதி வெளியுறவுத்துறை சார்பில் உரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஜோ பைடன் தான் பதவியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு தனது மகன் உள்பட பலருக்கு பொது மன்னிப்பு வழங்கி இருந்தார். இதற்கிடையே மேலும் பலருக்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஜோ பைடன் கூறும்போது, எதற்கும் என்னை மன்னித்துக் கொள்வது பற்றி நான் யோசிக்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை.
கமலா ஹாரிஸ் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியானவர். ஆனால் அது அவரே எடுக்க வேண்டிய முடிவாக இருக்கும் என்றார்.
அதிபர் தேர்தலில் ஜோ பைடன்தான் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் டிரம்புடனான நேரடி விவாத நிகழ்ச்சியில் ஜோ பைடன் திணறினார். இதனால் வயோதிகம் காரணமாக அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.