உலகம்
ராணுவ ஆட்சி.. உள்நாட்டுப் போர்.. நிலநடுக்கம் - தோண்டத் தோண்ட உடல்கள் - உருக்குலைந்த மியான்மர் கள நிலவரம்

ராணுவ ஆட்சி.. உள்நாட்டுப் போர்.. நிலநடுக்கம் - தோண்டத் தோண்ட உடல்கள் - உருக்குலைந்த மியான்மர் கள நிலவரம்

Published On 2025-03-30 21:55 IST   |   Update On 2025-03-30 21:55:00 IST
  • தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
  • மியான்மரில் கடுமையான மருந்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியான்மர்: இடிபாடுகளைத் தோண்ட, தோண்ட உடல்கள் தொடர்ந்து மீட்பு பலி எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது.

மியான்மரில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நாடு உருக்குலைந்துள்ளது.

தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன.

அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கட்டிடங்கள் உருக்குலைந்து இடி பாடுகள் குவியலாக கிடக்கிறது.

அதனை அகற்றி ஏராள மானோர் மீட்கப்பட்டு வருகிறார்கள். இதில் பலர் உயிரிழந்த நிலையில் மீட்கப் படுகிறார்கள். இதுவரை சுமார் 1,700 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 3,400 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் சுமார் 300 பேர் காணாமல் போயுள்ளதாக மியான்மரின் ராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தோண்ட, தோண்ட உடல் கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.

இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மீட்புபணி களில் பொதுமக்களும் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் பலர் வெறும் கைகளால் இடிபாடுகளை அகற்றி உதவி செய்து வருகிறார்கள்.

காயம் அடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல பகுதிகளில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நிலநடுக்கத்தால் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மின்சாரம், தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்புப்பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமடைந்து உள்ளதால் மியான்மரின் பல பகுதிகளுக்கு உதவிகள் சென்றடைவது தடைபட்டுள்ளது.

 

இதற்கிடையே மியான்மரில் கடுமையான மருந்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. எச்சரித்துள்ளது. இது நிவாரணப் பணிகளை மேலும் பாதிக்கும் என்று உதவி குழுக்கள் கவலை தெரி வித்துள்ளன.

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு நிலஅதிர்வுகள் உண்டானது. இதனால் பீதியடைந்துள்ள மக்கள் தெருக்களிலோ அல்லது திறந்த வெளிகளிலோ இரவுகளை கழிக்கின்றனர். பலர் வீடுகளை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் அங்கு உள்நாட்டு போரும் நடந்து வருகிறது. ராணுவ அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் குழு செயல்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களை தற்போது நிலநடுக்கம் மேலும் இன்னலுக்கு தள்ளி உள்ளது.

இந்த நிலையில் ராணுவ அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் மியான்மரின் நிழல் தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் ஆயுதப் பிரிவான மக்கள் பாதுகாப்புப்படை, 2 வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தது.

நிலநடுக்க மீட்புப்பணிகளை எளிதாக்கும் வகையில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தாங்கள் கட்டுப்படுத்தும் பகுதிகளில் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் தற்காலிக மீட்பு மற்றும் மருத்துவ முகாம்களை நிறுவுவதை உறுதி செய்ய ஐ.நா. மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு பல நாடுகள் உதவி வருகின்றன. குறிப்பாக இந்தியா, நிவாரண பொருட்கள், மீட்பு குழுவை அனுப்பியது. 60 டன் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 5 மீட்புப்படை விமானங்கள் சென்றுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மியான்மரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், தாய்லாந்தையும் தாக்கியது. தலைநகர் பாங்காங்கில் புதிதாக கட்டப்பட்டு வந்த 33 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அவர் களை மீட்கும் பணி நடந்து வருகிறது. தாய்லாந்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இன்னும் 90 பேர் மாயமாகி உள்ளனர். 

Tags:    

Similar News