நேபாள சிறையில் இருந்து விடுதலையான தொடர் கொலைகாரன் சோப்ராஜ் பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டான்
- சோப்ராஜின் கொலை பட்டியலில் சிக்கியவர்கள் சுமார் 30 இருக்கும் என கூறப்படுகிறது.
- இந்தியாவிலும் 21 ஆண்டுகள் சிறைக்கம்பிகளை எண்ணினான்.
காத்மாண்டு :
இந்திய தந்தைக்கும், வியட்நாம் தாய்க்கும் 1944-ம் ஆண்டு பிறந்தவன் சார்லஸ் சோப்ராஜ் (வயது 78). சட்டப்படி பிரான்ஸ் குடியுரிமை பெற்றிருந்த இவன், இளம் வயதில் இருந்தே குற்ற செயல்களில் ஈடுபட்டு சிறை செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தான்.
1970-களில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தொடர் கொலைகளை அரங்கேற்றி உலகையே அதிர்ச்சிக்குள் வைத்திருந்தான். இளம்பெண்களை குறிவைத்து கொலை செய்து வந்த சோப்ராஜின் கொலை பட்டியலில் சிக்கியவர்கள் சுமார் 30 இருக்கும் என கூறப்படுகிறது.
இஸ்ரேல் நாட்டவரை கொலை செய்தது மற்றும் பிரான்சை சேர்ந்தவருக்கு விஷம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இந்தியாவிலும் 21 ஆண்டுகள் சிறைக்கம்பிகளை எண்ணினான்.
நேபாளத்தில் கடந்த 1975-ம் ஆண்டு அமெரிக்க பெண் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சோப்ராஜ், கடந்த 2003-ம் ஆண்டு அந்த நாட்டு போலீசில் சிக்கிக்கொண்டான்.
இதில் ஆயுள் தண்டனை பெற்று காத்மாண்டு மத்திய சிறையில் சோப்ராஜ் அடைக்கப்பட்டிருந்தான்.
இந்த வழக்கில் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தண்டனைக்காலம் முடியும் நிலையில், சோப்ராஜின் உடல்நிலை, முதுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சமீபத்தில் நேபாள சுப்ரீம் கோர்ட்டு அவனை விடுதலை செய்தது. அத்துடன் 15 நாட்களுக்குள் பிரான்சுக்கு நாடு கடத்தவும் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று அவன் காத்மாண்டு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டான். அத்துடன் அவனை உடனடியாக பிரான்சுக்கு நாடு கடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் முதலில் தோஹாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து பிரான்ஸ் அனுப்பி வைக்கப்பட்டான்.
இந்த தகவலை வெளியிட்ட நேபாளம் உள்துறை அமைச்சக செயலாளர் பனிந்திரா மணி பொகாரெல், சார்லஸ் சோப்ரா அடுத்த 10 ஆண்டுகளுக்கு நேபாளத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
பல நாடுகளை கதிகலங்க வைத்த சோப்ராஜ் விடுதலை செய்யப்பட்டிருப்பது சர்வதேச அரங்கில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.