பெண் ஊழியரிடம் இருந்து குடையை பறித்த பாகிஸ்தான் பிரதமர்: வைரலாகும் வீடியோ.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
- மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வருகை தந்தபோது மழை பெய்தது.
- சமூக ஊடக பயனர்கள் பிரதமரை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர்.
உலகளாவிய நிதி ஒப்பந்தம் தொடர்பாக பாரிசில் இரண்டு நாள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொண்டார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு கடன் திட்டத்தை பெறுவதற்கான முயற்சியாக பாரிஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.
இந்நிலையில், மாநாட்டிற்கு ஷெபாஸ் ஷெரீப் வருகை தந்தபோது மழை பெய்தது. காரில் இருந்து இறங்கியபோது அவருக்கு பெண் ஊழியர் ஒருவர் குடைபிடித்து சென்றார். அப்போது அந்த ஊழியரிடம் இருந்து ஷெபாஸ் ஷரீப் குடையை வாங்கி, தான் மட்டும் தனியாக சென்றார். அந்த பெண் மழையில் நனைந்தபடி பின்தொடர்ந்தார். இந்த வீடியோவை பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். வீடியோவைப் பார்த்த பலரும் பாகிஸ்தான் பிரதமரை ட்ரோல் செய்தவண்ணம் உள்ளனர். சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பாகிஸ்தான் சமூக ஊடக பயனர்கள் தங்கள் பிரதமரின் இந்த நடவடிக்கையை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர்.
சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி போன்ற உலகத் தலைவர்களையெல்லாம் ஷெபாஸ் ஷெரீப் சந்தித்தார். இந்த சந்திப்புகள் தொடர்பான வீடியோக்களை விட, அவர் மாநாட்டிற்கு வந்தடையும் வீடியோதான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது.