உலகம்

மணமகன்கள் தரும் வரதட்சிணை: ஐரோப்பாவில் நவீன சுயம்வரம்

Published On 2023-10-22 14:11 GMT   |   Update On 2023-10-22 14:11 GMT
  • எண்ணிக்கையில் சுமார் 18,000 பேர் மட்டுமே உள்ளனர்
  • 16லிருந்து 20 வயது முடிவதற்குள் மகளை திருமணம் செய்து கொடுக்கின்றனர்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு பல்கேரியா. இதன் தலைநகர் சோஃபியா.

இந்நாட்டில் எண்ணிக்கையில் சுமார் 18 ஆயிரம் பேரை கொண்ட கலாய்ழி ரோமா (Kalaidzhi Roma) எனும் இனத்தவர் வசிக்கின்றனர்.

இவர்களிடையே ஒரு விசித்திரமான பழக்கம் நிலவுகிறது.

இந்த இனத்தவர்கள் தங்கள் இன இள வயது திருமணமாகாத பெண்கள், பிற ஆண்களுடன் 'டேட்டிங்' அல்லது காதல் போன்ற அந்த பருவத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஆதரிப்பதில்லை. மேலும் இவர்கள் இனத்தை சேர்ந்தவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் பலர் தங்களுடன் இணைத்து கொள்ள தயங்குகின்றனர். அதனால் இவர்கள் சமுதாயத்தில் அன்னியப்படுத்தப்பட்டு விட்டதாகவும் உணர்கிறார்கள்.

எனவே, இவர்கள் திருமண சம்பந்தத்தையும் பிற இனத்தவர்களுடன் செய்து கொள்வதில்லை.

தங்கள் இன பெண்களை 16லிருந்து 20 வயதிற்குள் தங்கள் இனத்திலேயே உள்ள ஆண் மணமகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட விரும்புகிறார்கள்.

இதற்காக வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட நாளில் ஸ்டாரா ஜகோரா (Stara Zagora) எனும் பகுதியில் அந்த பெண்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பெற்றோருடன் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களை தேர்வு செய்ய அங்கு அதே இனத்து ஆண்கள் தங்கள் பெற்றோருடன் வருகின்றனர்.

இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்தவுடன் அப்பெண்ணின் பெற்றோரின் சம்மதத்தை கேட்கின்ற சம்பிரதாயம் நடைபெறுகிறது.

தங்கள் பெண்ணை மணமுடித்து கொடுப்பதற்கு ஈடாக அப்பெண்ணின் பெற்றோர் கேட்கும் தொகையை அவர்களிடம் அந்த இளைஞன் கொடுத்து திருமண பந்தத்தை ஏற்படுத்தி கொள்கிறார். இதற்கென இந்த இளைஞர்கள் தங்களின் வாழ்வில் சிறு வயதிலிருந்தே சேமிக்க தொடங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மணப்பெண்ணின் தோற்றம், உருவம், மணமகனின் வளமை போன்ற அம்சங்களை பொறுத்து பெண்ணின் பெற்றோர் பெறும் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. அனேக பெண்கள் பள்ளி படிப்பை முடிப்பதற்கு கூட பெற்றோர் விடுவதில்லை.

"ஜிப்சி பிரைட் மார்கெட்" என வட்டார மொழியில் அழைக்கப்படும் இந்த பழக்கத்தை குறித்தும், அம்மக்களின் வாழ்வை குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News