என் மலர்
உலகம்

சூடான் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அதிபர் மாளிகையை மீட்ட ராணுவம்
- துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) உறுப்பினர்களைத் தேடி வருகின்றனர்.
- ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநா தெரிவித்திருந்தது.
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இரண்டு வருட போருக்குப் பிறகு, சூடானின் தலைநகர் கார்ட்டூமில் உள்ள அதிபர் மாளிகையை பாராளுமன்ற படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக சூடான் ராணுவம் அறிவித்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) கார்ட்டூமில் RSF கட்டுப்பாட்டில் இருந்த அதிபர் மாளிகையை சூடான் ராணுவம் முழுமையாகக் கைப்பற்றியதாக சூடான் தொலைக்காட்சி மற்றும் இராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) உறுப்பினர்களைத் தேடி, மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் சூடான் இராணுவம் இப்போது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
உள்நாட்டு போரில் கடந்த 2 வருடமாக நாடு முழுவதும் பொதுமக்கள் மீது வன்முறை, வெறிச்செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை குறைந்தது 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரில் 1.4 கோடிக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகள் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது.
கடந்த 1 ஆண்டில் (2024இல்) மட்டும் சூடானில் ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் (யுனிசெப்) அறிக்கை மதிப்பிடுகிறது .