பாகிஸ்தானில் தேவாலயங்களை சேதப்படுத்தி தீ வைத்த கும்பல்- அமெரிக்கா கண்டனம்
- பாகிஸ்தானில் தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளை குறி வைத்து தாக்கப்பட்டதில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
- வன்முறை அல்லது மத ரீதியான அச்சுறுத்தல்களை அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரில் ஜரன்வாலா பகுதியில் ஏராளமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன.
இந்த நிலையில் கிறிஸ்தவர்கள் சிலர் மத நிந்தனை செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதையடுத்து அப்பகுதியில் தேவாலயங்கள் முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தினர். தேவாலய கட்டிடங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. பின்னர் தேவாலயத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குள்ள பொருட்களை தேசப்படுத்தி தீ வைத்தனர்.
மேலும் மத நிந்தனையில் ஈடுபட்டதாக கூறப்படும் நபரின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து பஞ்சாப் மாகாண காவல்துறை தலைவர் உஸ்மான் அன்வர் கூறும்போது, ஜரன்வாலா பகுதியில் தேவாலயங்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அப்பகுதி போலீஸ் துறை கமினஷருக்கு எதிராக மக்கள் திரும்பியதால் அவரையும், கிறிஸ்தவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி உள்ளோம் என்றார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறியதாவது:-
பாகிஸ்தானில் தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளை குறி வைத்து தாக்கப்பட்டதில் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். வன்முறை அல்லது மத ரீதியான அச்சுறுத்தல்களை அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பாகிஸ்தான் முழு விசாரணை நடத்த வலியுறுத்துகிறோம். அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.