கம்போடியாவின் அங்கோர்வாட் கோவிலில் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுப்பு
- தலைப்பகுதி இருந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது.
- சிலையின் உடற்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது எங்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.
நாம்பென்:
கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோவில் வளாகம், இந்து மற்றும் புத்தமத வழிபாட்டு தலம் ஆகும்.
அந்த கோவிலை உள்ளடக்கிய அங்கோர் பகுதியின் 400 சதுர கி.மீ. பரப்பளவில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. தெற்கு ஆசியாவின் மிக முக்கியமான அகழ்வாராய்ச்சி பகுதியாக அது கருதப்படுகிறது. கடந்த ஆண்டு அங்கு 10 லட்சம் சர்வதேச சுற்றுலா பயணிகள் வந்தனர்.
கம்போடியாவில் 9-ம் ஆம் நூற்றாண்டு முதல் 15-ம் நூற்றாண்டுவரை ஆட்சி செய்த மன்னர்களின் தலைநகரங்களின் சிதிலமடைந்த பகுதிகளை தோண்டி எடுக்க அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் சிதறிக்கிடக்கும் கலைப்பொருட்களை சேகரித்து, கம்போடியாவின் கலாசார பெருமையை பறைசாற்றுவதும் அகழ்வாராய்ச்சியின் நோக்கம் ஆகும்.
அங்கோர்வாட் கோவில் வளாகத்தில் கடந்த 1927-ம் ஆண்டு ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டது. அது, அங்குள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவில் வளாகத்தில் சமீபத்தில் கம்போடிய நிபுணர்களும், இந்திய நிபுணர்களும் நடத்திய அகழாய்வின்போது, புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது. அதை 'ஸ்கேன்' செய்தபோது, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட தலைப்பகுதியுடன் பொருந்துகிறது.
தலைப்பகுதி இருந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது. இதனால் தொல்லியல் அறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த சிலை, 12 அல்லது 13-வது நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படுகிறது. சிலையின் அங்கமாக கருதப்படும் 29 துண்டுகளுடன் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது. 1.16 மீட்டர் உயரம் கொண்ட அச்சிலை, பேயோன் கலை வடிவத்தில் இருக்கிறது.
இதுகுறித்து தொல்லியல்துறை அறிஞர் நேத் சைமன் கூறியதாவது:-
இதுவரை கிடைத்தவை எல்லாம் சிறு துண்டுகள். இப்போது சிலையின் உடற்பகுதி கண்டுபிடிக்கப்பட்டது எங்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.
இன்னும் கிடைக்கவில்லை. கலாசார மந்திரியிடம் ஒப்புதல் பெற்று, தலையையும், உடற்பகுதியையும் பொருத்தி, பொதுமக்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.