உலகம்

உக்ரைன் பிடித்த குர்ஸ்க் பிராந்தியத்தின் சுட்ஜா நகரை மீட்டதாக ரஷியா அறிவிப்பு

Published On 2025-03-13 16:23 IST   |   Update On 2025-03-13 16:23:00 IST
  • கடந்த ஆண்டு திடீரென ரஷியா எல்லைக்குள் புகுந்த உக்ரைன் ராணுவம் குர்ஸ்க் பிராந்தியத்தில் பல இடங்களை பிடித்தது.
  • உக்ரைன் பிடித்த இடங்களை மீட்க ரஷிய ராணுவம் கடுமையாக போரிட்டு வருகிறது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. முதலில் ரஷியா- உக்ரைன் எல்லையில் உள்ள உக்ரைனின் பெரும்பாலான பகுதியை ரஷியா பிடித்தது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்க, உக்ரைன் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தது. இதனால் ரஷியா பெரும்பாலான இடங்களில் பின்வாங்கியது.

இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை 3 வருடங்களை தாண்டி நடைபெற்று வருகிறது. தற்போது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கடந்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென எல்லையில் உள்ள ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்திற்குள் உக்ரைன் ராணுவம் புகுந்தது. குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களை உக்ரைன் பிடித்தது.

இது படையெடுப்பு அல்ல. தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காகவும், ரஷியாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கும் உதவியாக இருக்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இதனால் கோபம் அடைந்த புதின், குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் கைவசப்படுத்திய இடங்களை மீட்க ரஷிய ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவத்திற்கு எதிராக ரஷியா கடுமையாக போரிட்டு வந்தது. உக்ரைனிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் பகுதியை மீட்டு வருதாக ரஷியா தெரிவித்தது.

இந்த நிலையில் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சுட்ஜா என்ற மிகப்பெரிய நகரை உக்ரைன் ராணுவத்திடம் இருந்து மீட்டுள்ளோம் என ரஷியா தெரிவித்துள்ளது.

குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவம் பிடித்துள்ள கடைசி இடத்தில் இருந்தும் அவர்களை விரட்டுவதற்காக ரஷியா ராணுவம் நெருங்கி வருகிறது என அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த தகவலை ரஷியா வெளியிட்டுள்ளது.

ரஷிய அதிபர் புதின் புதன்கிழமை (நேற்று) இந்த குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ராணுவ தலைமையகம் சென்றிருந்தார். அங்குள்ள ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையே 30 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளார்.

Tags:    

Similar News