உலகம்

பாக். ரெயில் கடத்தல்.. பணயக்கைதிகள் அனைவரும் மீட்பு.. 28 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

Published On 2025-03-13 06:50 IST   |   Update On 2025-03-13 06:52:00 IST
  • ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
  • ராணுவத்தை சேர்ந்த 28 வீரர்கள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கடத்திய பயணிகள் ரெயிலில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்ட ரெயிலில் இருந்து பயணிகளை மீட்கும் பணியின் போது பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 28 வீரர்கள் உயிரிழந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.

பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றியது. ரெயில் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் ரெயிலை வழிமறித்தனர்.

இதையடுத்து ரெயிலில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு இருந்தனர். அதன்படி ரெயிலில் சிக்கி பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

"இந்த நடவடிக்கையின் போது 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்," என்று ஒரு ராணுவ அதிகாரி ஏ.எஃப்.பி. (AFP) நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்தத் சம்பவத்துக்கு பலூச் விடுதலைப் படை (BLA) உரிமை கோரியது. தண்டவாளத்தில் வெடிப்பு நிகழ்ந்து, மலைகளில் மறைந்திருந்த இடங்களில் இருந்து டஜன் கணக்கான துப்பாக்கி ஏந்தியவர்கள் வெளியே வருவது போன்ற வீடியோவை அது வெளியிட்டது.

Tags:    

Similar News