அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு - பிரிட்டன் கண்டனம்
- காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அவரை தள்ளிவிட்டனர்.
- இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகையின் போது சத்தம் இல்லத்தில் அவரது பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதற்கு பிரிட்டன் வெளியுறவு துறை அலுவலகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சத்தம் இல்லத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றிருந்த போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் மஞ்சள் நிற கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். சத்தம் இல்லத்தில் இருந்து வெளியேறிய போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காலிஸ்தான் ஆதரவாளர்களில் ஒருவர் அமைச்சர் ஜெய்சங்கர் காரை நோக்கிய ஓடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோவில், அமைச்சர் ஜெய்சங்கர் காரை நோக்கி ஓடிவந்த காலிஸ்தான் ஆதரவாளரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி அவரை அங்கிருந்த பாரிகார்டு அருகே தள்ளிவிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
"வெளியுறவுத் துறை அமைச்சரின் பிரிட்டன் வருகையின் போது சத்தம் இல்லத்தின் வெளியே நடைபெற்ற சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். அமைதியான முறையில் போராடுவதற்கு பிரிட்டன் அனைத்து உரிமைகளையும் வழங்குகிறது. எனினும், பொது நிகழ்வுகளில் எச்சரிக்கை விடுப்பது அல்லது நிகழ்ச்சியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் காவல் துறையினர் ஈடுபட்டனர். எங்களது தூதரக விருந்தாளிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.