உலகம்

எலான் மஸ்க் கோரிக்கையை நிராகரித்த சுனிதா வில்லியம்ஸ்

Published On 2025-03-06 08:48 IST   |   Update On 2025-03-06 08:48:00 IST
  • இந்த கோரிக்கையை சுனிதா வில்லியம்ஸ் நிராகரித்துள்ளார்.
  • சரியான நேரம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கித் தவிக்கின்றனர். இம்மாத இறுதியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுனிதா வில்லியம்ஸ் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் ஆலோசனையை நிராகரித்துள்ளார். முன்னதாக 2030-ம் ஆண்டு செயலிழக்க திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் அதற்கு முன்பே செயலிழக்க செய்ய வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். இவரது இந்த கோரிக்கையை சுனிதா வில்லியம்ஸ் நிராகரித்துள்ளார்.

மேலும், சர்வதேச விண்வெளி மையத்தின் ஆய்வகம் நிறைய அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். "இந்த இடம் டிக் டிக்-ஆக இருக்கிறது. இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, எனவே நாம் இப்போது நமது உச்சத்தில் இருக்கிறோம் என்றே கூறுவேன். அதை விட்டு வெளியேற இப்போது சரியான நேரம் இல்லை என்று நான் நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.

வில்லியம்ஸ் தனது வீட்டில் வளர்க்கும் லாப்ரடோர்களை சந்திக்க ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். திட்டமிடப்படாமல் நீடித்து தங்குவதில் மிகவும் கடினமான அம்சம், வீடு திரும்பி குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக காத்திருப்பது தான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Tags:    

Similar News