அமெரிக்கா மீது இந்தியா அதிக வரி விதிக்கிறது- பாராளுமன்றத்தில் டிரம்ப் பேச்சு
- பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
- வரி விதிப்பு என்பது அமெரிக்காவை மீண்டும் பணக்கார மற்றும் சிறந்த நாடாக மாற்றும்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவி யேற்றார். அவர் பதவி யேற்றபின் முதல் முறையாக பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
அமெரிக்காவின் பொற் காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம். 6 வாரங்களில் 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டேன். 400-க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து உள்ளேன்.
நான் பதவியேற்ற சில மணி நேரங்களில் நாட்டின் தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவித்தேன். சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க ராணுவம் மற்றும் எல்லை ரோந்துப் படையினரை அங்கு நிறுத்தினேன்.
இதன் காரணமாக கடந்த மாதம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபரான ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ், ஒரு மாதத்தில் லட்சக்கணக்கானோர் சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்தனர்.
அமெரிக்கா மீது நியாயமற்ற வரிகள் விதிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக அதிக வரிகளைப் விதித்து வருகின்றன. தற்போது அந்த நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்கும் நேரம் இது.
ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக கட்டணங்களை நம்மி டம் வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது.
அமெரிக்காவிடம் இந்தியா வாகன வரி 100 சதவீதம் வசூலிக்கிறது. இது அமெரிக்காவிற்கு நியாயமில்லை.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக ஏப்ரல் 2-ந்தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்குகிறது. மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி விதித்தாலும், அதே வரியை அவர்களுக்கு விதிப்போம்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வரி விதிப்பு என்பது அமெரிக்காவை மீண்டும் பணக்கார மற்றும் சிறந்த நாடாக மாற்றும்.
அமெரிக்க கனவு தடுக்க முடியாதது. நமது நாடு மீண்டு வருவதற்கான விளிம்பில் உள்ளது. எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ரஷியா- உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அயராது பணியாற்றி வருகிறோம். உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் நோக்கத்துடன் உள்ளோம். அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
டிரம்ப் உரையாற்றியபோது எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். டிரம்ப் ஒவ்வொரு விவகாரம் பற்றி பேசும்போதும், "பொய்" என்று எழுதப்பட்ட பதாகையை காண்பித்தனர்.