உலகம்

பாகிஸ்தானில் ராணுவ தளம் மீது கார் குண்டு தாக்குதல்: 12 பேர் பலி- 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2025-03-05 10:17 IST   |   Update On 2025-03-05 10:17:00 IST
  • தீவிரவாதிகள் ராணுவ தளத்துக்குள் நுழைந்து தாக்குதல்.
  • தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல் பர்சன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராணுவ தளம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த ராணுவ தளத்தின் சுவர் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 2 கார்களை மோதி வெடிக்க வைத்தனர். சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் மற்ற தீவிரவாதிகள் ராணுவ தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

காரில் நிரப்பப்பட்ட குண்டுகள் வெடித்ததில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.

ராணுவ தளத்துக்குள் புகுந்த தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ராணுவ தரப்பில் கூறும் போது, கார் குண்டு தாக்குதலுக்கு பிறகு ராணுவ தளத்தின் சுவர் உடைக்கப்பட்டு, பல தீவிரவாதிகள் உள்ளே நுழைய முயன்றனர், அவர்களில் 6 பேர் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர்.

அனைத்து பயங்கரவாதிகளும் அழிக்கப்படும் வரை நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் அலி அமின் கந்தாபூர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல் பர்சன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பிரிவுகளில் ஒன்றாகும்.

Tags:    

Similar News