அமெரிக்கப் பொருட்கள் மீது வரியைத் தீட்டிய சீனா.. டிரம்புக்கு பதிலடி - தீவிரமடையும் வர்த்தகப் போர்!
- இதை காரணம் காட்டியே சீன பொருட்களுக்கு டிரம்ப் இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளார்.
- 125 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள பிற அமெரிக்க பொருட்களுக்கும் இன்னும் 21 நாட்களில் வரிவிதிப்பைக் கனடா அறிவிக்கும்.
அமெரிக்கா வரிவிதிப்பு
டொனால்டு டிரம்ப் உடைய ஆளுகையின் கீழ் உள்ள அமெரிக்கா பிற நாடுகள் மீது கடுமையான வரிக் கொள்கைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. நேற்று (மார்ச் 03) கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா இரண்டாம் கட்ட வரிவிதிப்பை அறிவித்தது.
முன்னதாக கடந்த மாதம் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக நேற்று டொனால்டு டிரம்ப் தனது அறிவிப்பில் பல்வேறு சீன பொருட்களுக்கான வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி அறிவித்தார்.
பென்டன்டைல் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய சந்தையாக சீனா வளர்ந்துள்ளது. இந்த மூலப்பொருட்கள் மெக்சிகோவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பென்டனைல் போதைப்பொருளாக அமெரிக்காவுக்குள் கடத்தப்படுகிறது.
இதை காரணம் காட்டியே சீன பொருட்களுக்கு டிரம்ப் இந்த வரிவிதிப்பை அறிவித்துள்ளார். மேலும் அண்டை நாடுகளான கனடா, மெக்சிகோ பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக உயர்த்தினார். இந்த புதிய வரிவிதிப்பு இன்று (மார்ச் 04) முதல் அமலுக்கு வரும் என்றும் அவர் அறிவித்தார். இதன்மூலம் சர்வதேச அளவில் வர்த்தக போர் மூலம் அபாயம் நிலவுகிறது.
சீனா பதிலடி
இந்நிலையில் இன்று (மார்ச் 04) அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் விவசாய மற்றும் உணவுப் பொருட்களுக்கு சீனா புதிதாக 10% முதல் 15% வரி விதிப்பை அறிவித்துள்ளது.
சோயாபீன், சோர்கம் (sorghum), பன்றிக்கறி, மாட்டுக்கறி, கடல்சார் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு சீனா 10 சதவீத வரியை அறிவித்துள்ளது.
மேலும் கோழிகள், கோதுமை, மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றின் இறக்குமதிக்கு 15 சதவீத வரியை சீனா விதித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பு வரும் மார்ச் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என சீன நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கனடா - மெக்சிகோ எதிர்வினை
இதற்கிடையே அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு எதிரான நடவடிக்கையில் கனடா, மெக்சிகோவும் இறங்கியுள்ளது. நேற்று இதுதொடர்பாக பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்கா தனது போக்கை தொடர்ந்தால் 20 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு (செவ்வாய்க்கிழமை முதல்) 25 சதவீத வரி விதிக்கப்படும்.
மேலும் 125 பில்லியன் கனேடிய டாலர்கள் மதிப்புள்ள பிற அமெரிக்க பொருட்களுக்கும் இன்னும் 21 நாட்களில் வரிவிதிப்பைக் கனடா அறிவிக்கும் என்று தெரிவித்தார்.
அமெரிக்காவின் மிதமிஞ்சிய வரிவிதிப்பு தொடர்பாக நேற்று பேசிய மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், எங்களிடம் பிளான் B, C, D உள்ளது என்று தெரிவித்தார். இதற்கிடையே அமெரிக்காவின் வரிவிதிப்பு செயல்பாடுகளுக்கு எதிராக சர்வதேச வர்த்தக கழகத்தில்(WTO) சீனா புகார் கொடுத்துள்ளது.