பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடையே துப்பாக்கிச்சூடு: முக்கிய எல்லை தொடர்ந்து மூடல்
- பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே வர்த்தக எல்லையாக டோர்காம் உள்ளது.
- இருதரப்பு பிரச்சனையால் 11 நாட்களுக்கு மேலாக இந்த எல்லை மூடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள டோர்காம் முக்கிய எல்லைப் பகுதியாக திகழ்ந்து வருகிறது. இரு நாட்டு வர்த்தகத்திற்கும் இது முக்கிய எல்லையாகும். இரு பக்கங்களில் இருந்தும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்கள் செல்லும்.
இரண்டு பக்கங்களிலும் அந்தந்த நாட்டின் பாதுகாப்புப்படை வீரர்கள் எல்லை பாதுகாப்பு நிலையம் (border post) அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் டோர்காம் எல்லையில் புதிய எல்லை நிலையம் கட்டி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் ஆட்சேபனை தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 11 நாட்களாக டோர்காம், சமான் எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப்படையினர் டோர்காம் எல்லையில் பாகிஸ்தான் எல்லை நிலையங்கள்களை (Border Post) குறிவைத்து தானியங்கி துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசிடம் இருந்து உடனடியாக பதில் ஏதும் வரவில்லை.
டோர்காம் எல்லையின் இரு பக்கங்களிலும் ஆயிரக்கணக்கான லாரிகள் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளனர். கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் கடுமையாக வெப்பத்தில் மக்கள் எல்லையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.