அமெரிக்காவின் தனியார் நிறுவன விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை
- தனியார் நிறுவனம் ஒன்று நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கியது இதுவே முதல் முறையாகும்.
- விண்கலத்துடன் மேலும் 2 தனியார் நிறுவனங்களின் விண்கலங்களையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு அனுப்பி உள்ளது.
கேப்கேனவரல்:
நிலவை ஆய்வு செய்வதற்கு பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்காக நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காக விண்கலங்களை அனுப்பி வருகின்றன.
அதேநேரம் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்கும் விண்கலங்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இதில் அரிதாகவே வெற்றி கிடைக்கிறது.
அந்தவகையில் ரஷியா, அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 5 நாடுகள் மட்டுமே நிலவில் தரையிறங்கி பரிசோதனை செய்யும் முயற்சியில் வெற்றி பெற்று உள்ளன.
இதற்கிடையே தனியார் நிறுவனங்களும் நிலவில் இறங்கி பரிசோதனை செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 'பயர்பிளை ஏரோஸ்பேஸ்' நிறுவனம் கடந்த ஜனவரி 15-ந் தேதி விண்கலம் ஒன்றை அனுப்பியது.
'புளூ கோஸ்ட்' என்ற இந்த விண்கலம் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நிலவுக்கு செலுத்தப்பட்டது.
நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த இந்த விண்கலத்தில் இருந்து லேண்டர் தனியாக பிரிந்து நேற்று நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. நிலவின் வடகிழக்கு விளிம்பில் உள்ள பழங்கால எரிமலை குவிமாடத்தின் சரிவில் தரையிறங்கியது.
நிலவில் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதை பயர்பிளை நிறுவனம் உறுதி செய்தது. 'நாம் நிலவில் இருக்கிறோம்' என குறிப்பிட்ட அந்த நிறுவனம், லேண்டர் செயல்பாடு சீராக இருப்பதாகவும் தெரிவித்தது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் நிலவின் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்து உள்ளது.
நிலவில் விண்கலங்களை தரையிறக்குவதில் பல்வேறு நாடுகளின் அரசு விண்வெளி நிறுவனங்களே திணறும் நிலையில், தோல்வி அடையும் நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று நிலவில் விண்கலத்தை தரையிறக்கி வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
தனியார் நிறுவனம் ஒன்று நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கியது இதுவே முதல் முறையாகும். முன்னதாக அமெரிக்காவின் 'இன்டுயடிவ் மிஷின்ஸ்' என்ற நிறுவனம் கடந்த ஆண்டு நிலவில் விண்கலத்தை தரையிறக்கி இருந்தது. எனினும் அது லேசான சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
2 மீட்டர் உயரம் கொண்ட இந்த லேண்டர், ஒரு நிலவு நாள் அதாவது 14 பூமி நாட்கள் பல்வேறு பரிசோதனைகளை செய்யும். குறிப்பாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்காக 10 பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
பகுப்பாய்வுக்காக நிலவின் மேற்பரப்பில் உள்ள தூசிகளை உறிஞ்சுவதற்கு ஒரு வெற்றிடத்தையும், மேற்பரப்பிலிருந்து 10 அடி (3 மீட்டர்) ஆழத்தில் வெப்பநிலையை அளவிடுவதற்கான கருவிகளையும் லேண்டர் கொண்டு உள்ளது.
இந்த திட்டத்துக்காக பயர்பிளை நிறுவனத்துக்கு நாசா 145 மில்லியன் டாலர்களுக்கு மேல் (சுமார் ரூ.1,200 கோடி) வழங்குகிறது.
இந்த விண்கலத்துடன் மேலும் 2 தனியார் நிறுவனங்களின் விண்கலங்களையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு அனுப்பி உள்ளது. இதில் அமெரிக்காவின் 'இன்டுயடிவ் மிஷின்ஸ்' நிறுவனத்தின் 'அதீனா' விண்கலம் வருகிற 6-ந் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.