null
உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ராணுவ உதவிகளை நிறுத்திய அமெரிக்கா - டிரம்ப் அதிரடி
- ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
- போக்குவரத்து பகுதிகளில் காத்திருக்கும் ஆயுதங்களும் நிறுத்தப்படுகிறது.
உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்கா வந்திருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், இருவரிடையேயான பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது. இதனால் அதிபர் ஜெலன்ஸ்கி பாதியிலே வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார்.
இந்த சம்பவம் உலக அரசியலில் பேசு பொருளானது. இந்த நிலையில் தான் உக்ரைனுக்கான ராணுவ உதவிகள் நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது. மேலும், அமைதிக்கான நல்லிணக்க உறுதிப்பாட்டை உக்ரைன் வெளிப்படுத்தும் என்று உறுதி அளிக்கும் வரை தற்போது வழங்கி வரும் அனைத்து விதமான ராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இதே தகவல்களை பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த பாதுகாப்பு துறை அதிகாரி தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களின் படி உக்ரைன் செல்லாத அமெரிக்க ராணுவ உபகரணங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படும். மேலும், விமானங்கள், கப்பல் வழி போக்குவரத்தில் உள்ள ஆயுதங்கள் மற்றும் போலாந்தில் போக்குவரத்து பகுதிகளில் காத்திருக்கும் ஆயுதங்களும் நிறுத்தப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு செல்லும் வெளிநாட்டு உதவி மானியங்களை தவிர, 90 நாட்களுக்கு வெளிநாட்டு உதவி மானியங்களை நிறுத்துவதாக அறிவித்து இருந்தார்.