சூடானில் ஒரே ஆண்டில் 221 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த 'ராணுவ' வீரர்கள்!
- பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% க்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
- பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களில் 5 மற்றும் 4 வயதுக்கு உட்பட 16 பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர்.
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் மீது வன்முறை, வெறிச்செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை குறைந்தது 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் போரில் 1.4 கோடிக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகள் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது.
இந்நிலையில் சூடானில் கடந்த 1 ஆண்டில் (2024இல்) மட்டும் ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் (யுனிசெப்) அறிக்கை வெளியிட்டுள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து சுமார் 61 ஆயிரத்து 800 குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் வன்முறை மற்றும் கட்டாய குழந்தை திருமணங்கள் உள்ளிட்ட அட்டூழியங்கள் இரு ராணுவ தரப்பினராலும் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% க்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 5 மற்றும் 4 வயதுக்கு உட்பட 16 பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர். பதிவான வழக்குகளை தவிர்த்து இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகம் இருக்கலாம் என்ற அச்சம் சர்வதேச சமூகங்களிடையே பரவியுள்ளது.