போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்து உடனே பணியில் அமர்த்த வேண்டும்
- காவலர் பொது நல இயக்கம் வலியுறுத்தல்
- அதிகாரத்தை பயன்படுத்துவது போலீஸ் சூப்பிரண்டு வேலை தான். எனவே இந்த சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணனை சஸ்பெண்டு செய்தது கண்டிக்கத்தக்கது.
புதுச்சேரி:
புதுவை காவலர் பொது நல இயக்க பொதுச்செயலாளர் கணேசன் புதுவை கவர்னர், உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பன் கலையரங்கில் முதல்-அமைச்சர் மற்றும் தலைமைச்செயலாளர் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது உருளையன் பேட்டைதொகுதி எம்.எல்.ஏ. நேரு உள்ளே செல்ல முயன்றார். இன்ஸ்பெக்டர் கண்ணன் அவரை தடுத்து நிறுத்த முயன்ற போதும் போலீசாரை மீறி அவர் நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு சென்றார்.
இந்த சம்பவத்தில் நேரு எம்.எல்.ஏ.வை உள்ளே விடக்கூடாது என்ற எந்த வாய்மொழி உத்தரவும் போலீசாருக்கு பிறப்பிக்கப்பட வில்லை.
அதே வேளையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ.வை இன்ஸ்பெக்டர் தடுத்து நிறுத்த அதிகாரம் இல்லை.
இந்த அதிகாரத்தை பயன்படுத்துவது போலீஸ் சூப்பிரண்டு வேலை தான். எனவே இந்த சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணனை சஸ்பெண்டு செய்தது கண்டிக்கத்தக்கது.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு உத்தரவு பிறப்பித்தார். அவரது உத்தரவு வானளாவிய அதிகாரம் படைத்தவை. ஆனால் அவரது உத்தரவு இதுவரை அமல்படுத்தப்பட வில்லை.
எனவே இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு அளிக்கப்பட்ட சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்து உடனே அவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். மேலும் காவல் துறையில் நீண்ட நாட்களாக போலீஸ் சூப்பிரண்டு பதவிகள் சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்பப்படாமல் உள்ளது.
எனவே அதனை உடனடியாக நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.