2024 ரீவைண்ட்: சென்னையில் முதல் முறையாக நடைபெற்ற பார்முலா- 4 கார் பந்தயம்
- சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்பட்டது.
- பார்முலா 4 கார் பந்தயம் தடைக்கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதம் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்பட்டது.
இந்த பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றது. மின்விளக்குகள் பொருத்துவது, போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.
இந்த சூழலில், பார்முலா-4 கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பார்முலா 4 கார் பந்தயம் தடைக்கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதில், எப்ஐஏ சர்வதேச அமைப்பு சான்று பெறாமல் பந்தயம் நடத்த கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
அவ்வாறு சான்றில்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் எப்ஐஏ சான்று நகலை மனுதாரர்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், எப்ஐஏ சர்வதேச அமைப்பு சான்று பெற தாமதம் ஏற்பட்டதை அடுத்து, முதல் நாளில் தகுதிச்சுற்று போட்டிகள் மட்டுமே நடைபெற்றன.
இரண்டாவது நாளில் முதல் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்றன. இந்த கார் பந்தயத்தில் ஃபார்முலா 4 கார்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தன.
இந்த பார்முலா-4 கார் பந்தயத்தை திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் என பலரும் கண்டு களித்தனர். இந்திய அணியின் முன்னள் கேப்டன் சவுரவ் கங்குலி, நடிகை த்ரிஷா, யுவன்சங்கர் ராஜா, நடிகர்கள் நாக சைதன்யா, பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் உள்பட பலரும் வருகை தந்து பார்வையிட்டனர்.
கார் பந்தயத்தின் முடிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.