2024 ரீவைண்ட்: நம்மை விட்டு பிரிந்த சினிமாத்துறை கலைஞர்கள்
- 2024 ஆம் ஆண்டு நம்மை விட்டு பிரிந்த சினிமாத்துறை கலைஞர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்
- டெல்லி கணேஷ் என்று அன்போடு அழைக்கப்படுபவர் கார்ப்போரால் எம்.கணேசன்.
இந்தாண்டு நம்மை விட்டு பிரிந்த சினிமாத்துறை கலைஞர்களை பற்றி இச்செய்தியில் காணலாம்
டெல்லி கணேஷ்
டெல்லி கணேஷ் என்று அன்போடு அழைக்கப்படுபவர் கார்ப்போரால் எம்.கணேசன். 1944-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் பிறந்த இவர் இந்திய விமானப் படையில் (IAF) இணைந்து, 1964 முதல் 1974 வரை பணியாற்றினார். இதன்பிறகு 'டௌரி கல்யாண வைபோகமே' என்ற நாடகத்தில் குசேலர் கதாபாத்திரத்தில் நடித்ததுதான் டெல்லி கணேஷூக்கு திருப்புமுனையாக அமைந்தது. குசேலராக கணேஷின் நடிப்பு இயக்குநர் கே. பாலச்சந்தரின் கவனத்தை ஈர்த்தது.
டெல்லி கணேஷ் 1976-ல் திரைத்துறைக்கு வந்தார். இவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் 'டெல்லி' நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் (1977), தமிழ் திரையுலகுக்கு இவரை இயக்குனர் கே. பாலசந்தர் தான் அறிமுகம் செய்தார். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற சில படங்களில் வில்லனாகவும் நடித்து கவனம் ஈர்த்தார். சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.இதனிடையே, வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) காலமானார். அவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.
பவதாரிணி
தமிழ் திரையுலகில் முன்னணி பின்னணி பாடர்களுள் முக்கியமானவராக இருந்தார். இவர் இசை ஞானியான இளையராஜாவின் மகளாவார். இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட.இளையராசாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. இவர் இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா , கார்த்திக் ராஜா, தேவா மற்றும் பல இசையமைப்பாளர் இசையமைப்பில் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இலங்கயில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி உயிரழந்தார்.
டேனியல் பாலாஜி
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்து வில்லத்தனத்திற்கு பெயர் போனவர் டேனியல் பாலாஜி. 'காக்க காக்க' படத்தின் மூலம் அறிமுகமான இவர் 'பொல்லாதவன்', 'வடசென்னை', 'பிகில்' போன்ற படங்களில் நடித்து இவருக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மாரடைப்பு காரணமாக கடந்த மார்ச் 29 ஆம் தேதி சென்னையில் காலமானார். இறப்பிற்குப் பிறகு இவரது கண்கள் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லொள்ளு சபா சேஷூ
'மண்ணெண்ண வேப்பென வெளக்கெண்ண, யார் ஜெயிச்சா எனக்கென்ன' போன்ற நகைச்சுவை வசனங்களால் ரசிகர்களை கவர்ந்தவர் சேஷூ. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவின் மூலம் பிரபலமானவர். 'வேலாயுதம்', 'பாரிஸ் ஜெயராஜ்' போன்ற படங்களில் மூலம் தன் நடிப்பில் முத்திரை பதித்தவர். அதுவும் அச்சச்சோ இவரா பயங்கரமான ஆள் ஆச்சே போன்ற நகைச்சுவை வசங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானார்.
இலவச திருமணம்,கல்வி ,மருத்துவம் என தன்னால் இயன்ற உதவிகளை மற்றவர்களுக்கு செய்தவர் சேஷூ. உடல்நலமின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் 26 ஆம் தேதி காலமானார்.
நடிகை சி.ஐ.டி சகுந்தலா
சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்த பழம்பெரும் நடிகை சி.ஐ.டி சகுந்தலா.
'சிஐடி சங்கர்', 'படிக்காத மேதை', 'கை கொடுத்த தெய்வம்', 'வசந்த மாளிகை' உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவர். சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் கடந்த செப்.17 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜாகிர் உசேன்:
இந்திய இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன். பிரபல தபேலா இசைக் கலைஞரான ஜாகிர் உசேன் பல்வேறு மொழி திரைப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இவர் இசையமைத்த தேநீர் விளம்பரம் wah taj மிகவும் பிரபலமடைந்தது.
தபேலா இசைக் கலைஞராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ஜாகிர் உசேன் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
ஷ்யாம் பெனகல்:
இந்திய சினிமாவில் சுயாதீன சினிமாவை உருவாக்கியதில் முக்கிய இயக்குநராக பார்க்கப்படுபவர் ஷ்யாம் பெனகல் (90). ஷ்யாம் பெனகல் படங்கள் பல்வேறு ஜானர்களில் சமூக கருத்துக்களை வலுவாக எடுத்துரைத்தது. தனது திரை வாழ்வில் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி துறையிலும் முத்திரை பதித்துள்ளார்.
இயக்குநர் ஷ்யாம் பெனகல் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 5 முறை வென்றுள்ளார். அதேபோல் அவரது திரைப்படங்கள் 8 முறை தேசிய விருதுகள் வென்றுள்ளது. இவர் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கல்லீரல் தொடர்பான நோய் காரணமாக உயிரிழந்தார்.
எம்.டி.வாசுதேவன் நாயர்
கேரளாவின் பழம்பெரும் எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், சிறு கதைகள், நாவல்கள், திரைக்கதை, இலக்கியம், பத்திரிகைத்துறை என மலையாள கலையுலகின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் எம்.டி.வாசுதேவன். 91 வயதான இவர் கோழிக்கோடு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 25ஆம் தேதி உயிரிழந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/