null
ட்விட்டர், மெட்டா நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வேலை - இந்திய சிஇஒ அதிரடி!
- உலகம் முழுக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்தில் தான் பெரும்பாலான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.
- பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் அறிவிப்பை இந்திய சிஇஒ ஒருவர் வெளியிட்டு உள்ளார்.
உலகம் முழுக்க பெரும்பாலான நிறுவனங்களில் பணி நீக்கம், ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ட்விட்டர் அதன் செலவீனங்களை குறைப்பதற்காக சுமார் 3 ஆயிரத்து 800 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதே போன்று பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.
முன்னணி நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்டோர், புதிய வேலையை தேடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் H1B விசா வைத்திருப்பவர்கள் நிலைமை சற்று கடினமாகி இருக்கிறது. ஏனெனில், பணிநீக்கம் செய்யப்பட்டதில் இருந்து சரியாக 60 நாட்களில் வேறு நிறுவனத்தில் அவர்கள் பணியில் சேர வேண்டும்.
இவ்வாறு பணியில் சேராத பட்சத்தில் அவர்கள் இந்தியாவுக்கு திரும்ப அனுப்பப்படுவர். இது போன்ற இக்கட்டான சூழலை கருத்தில் கொண்டு டிரீம்11 நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஹர்ஷ் ஜெயின், இந்தியர்கள் மீண்டும் தங்களின் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் இந்திய நிறுவனங்கள் வளர்ச்சி பெற இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியில் சேர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இவர் பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையாக பணி வாய்ப்பு வழங்கி வருகிறார். மேலும் தனது நிறுவனம் சிறந்த திறமைசாலிகள், டிசைன், பிராடக்ட் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் தலைமை பிரிவுகளில் நல்ல அனுபவம் மிக்கவர்களை தேடி வருவதாக அவர் தெரிவித்து இருக்கிறார். இதோடு தனது நிறுவனம் பணி உத்தரவாதம் அளிக்கும் வகையில் நல்ல நிதி நிலைமை கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
"2022 ஆண்டில் இதுவரை அமெரிக்காவில் மட்டும் சுமார் 52 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இந்தியர்கள் மீண்டும் அவர்களின் தாயகத்துக்கு திரும்ப நினைவூட்டும் செய்தியை பரப்புங்கள். இவ்வாறு செய்யும் போது இந்திய தொழில்நுட்பங்கள் அடுத்த தசாப்தத்தில் அதிகளவு வளர்ச்சியடையும் என்பதை உணர செய்ய முடியும்," என ஹர்ஷ் ஜெயின் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.