காதலியுடன் சண்டை - டென்னிஸ் போட்டியின் போது பாதியில் வெளியேறிய வீரர்
- போட்டியின் அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்ளும் முனைப்பில் டொமிக் களமிறங்கினார்.
- ஜப்பான் வீரர் யுடா ஷிமிசு முதல் செட்-ஐ 6-க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றினார்.
அமெரிக்காவின் அர்கன்சாசில் ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பெர்னார்ட் டொமிக் மற்றும் ஜப்பானை சேர்ந்த யுடா ஷிமிசு மோதினர். சர்வதேச தரவரிசையில் இவர்கள் முறையே 247 மற்றும் 265 இடங்களில் உள்ளனர்.
இத்தகைய போட்டிகளில் விளையாடி தனது தரவரிசையை முன்னேற்றி, போட்டியின் அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்ளும் முனைப்பில் டொமிக் களமிறங்கினார். எனினும், துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜப்பான் வீரர் யுடா ஷிமிசு முதல் செட்-ஐ 6-க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றினார்.
போட்டியின் போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பலமுறை கூறிய டொமிக், மருத்துவர்கள் உதவியை நாடினார். எனினும், களத்தில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்று கூறி போட்டி நடுவர் அவரை விளையாடுமாறு கூறியுள்ளார்.
இதனிடையே இந்த போட்டியை காண டொமிக்-இன் காதலி கீலி ஹண்ணா வந்திருந்தார். போட்டியின் போது டொமிக் மற்றும் அவரது காதலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விளையாடிய அவர் போட்டியில் கவனம் செலுத்த முடியாதவராக காணப்பட்டார்.
இரண்டாவது செட்-இல் 5 புள்ளிகளை மட்டும் பெற்ற டொமிக் அதன்பிறகு போட்டியில் இருந்து வெளியேறினார். உடல்நிலை மோசமாவதால், தொடர்ந்து விளையாட முடியாது என்று கூறி டொமிக் போட்டியில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து டொமிக்-இன் காதலியும் களத்தில் இருந்து வெளியேறினார்.