search icon
என் மலர்tooltip icon

    அர்ஜென்டினா

    • அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது.

    பியூனெஸ் அயர்ஸ்:

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கார்போடா பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது.

    சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    • ஊழல் வழக்கில் துணை அதிபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
    • மேலும் அவர் பொது பதவிகளை வகிக்க வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    பியூனஸ் அயர்ஸ்:

    அர்ஜென்டினாவின் துணை அதிபராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ். இவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தொடர்ந்து 2 முறை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்துள்ளார்.

    அதிபராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், பொதுப்பணிக்கான ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாகவும் கிறிஸ்டினா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவர்மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. தன் மீதான குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா திட்டவட்டமாக மறுத்து வரும் நிலையில் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடந்தது.

    இந்நிலையில், இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி கிறிஸ்டினாவை குற்றவாளியாக அறிவித்தார். இந்த வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் கிறிஸ்டினா பொது பதவிகளை வகிக்க வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

    அர்ஜென்டினாவில் துணை அதிபர் ஒருவர் பதவியில் இருக்கும்போது ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றது இது முதல் முறை ஆகும்.

    • அர்ஜென்டினாவில் உள்ளூர் கால்பந்து போட்டியின்போது மோதல் ஏற்பட்டது
    • ஏராளமான ரசிகர்கள் மைதானத்தின் மையப்பகுதிக்கு சென்றனர்.

    இந்தோனேஷியா நாட்டில் கடந்த வாரம் நடந்த கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் 139 பேர் இறந்தனர். இந்த சோக சம்பவம் மறைவதற்குள் அர்ஜென்டினாவில் நடந்த கால்பந்து போட்டியில் ரசிகர் ஒருவர் பலியாகிவிட்டார்.

    அர்ஜென்டினாவில் நேற்று இரவு  உள்ளூர் கால்பந்து போட்டி நடந்தது. இதை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்து இருந்தனர். மைதானம் முழுவதும் நிரம்பிய நிலையில், மேலும் ரசிகர்கள் வந்ததால் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தினர். அப்போது போலீசாருக்கும். ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இந்த சம்பவத்தில் ஒரு ரசிகர் இறந்தார். சிலர் காயம் அடைந்தனர். 

    போலீசாரின் கண்ணீர் புகை குண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க ஏராளமான ரசிகர்கள் மைதானத்தின் மையப்பகுதிக்கு சென்றனர். உடனே போட்டி நிறுத்தப்பட்டது. வீரர்கள் தங்கள் அறைக்கு திரும்பினர். 

    • உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களுள் மெஸ்ஸியும் ஒருவர்.
    • இவர் 2006-ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்காக முதல் முறையாக உலக கோப்பையில் களமிறங்கினார்.

    பியூனஸ் அயர்ஸ்:

    உலக கோப்பை கால்பந்து திருவிழா அடுத்த மாதம் கத்தாரில் தொடங்குகிறது. உலக கோப்பை கால்பந்தில் ஆதிக்கம் செலுத்திவரும் அணிகளில் ஒன்றான அர்ஜென்டினாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் லியோனல் மெஸ்ஸி.

    உலகின் 'ஆல் டைம்' தலை சிறந்த கால்பந்து வீரர்களுள் மெஸ்ஸிக்கு எப்போதும் தனி இடமுண்டு. 2006-ம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக முதல் முறையாக உலகக்கோப்பையில் களமிறங்கினார்.

    இந்நிலையில், இந்தாண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து தொடரே தனது கடைசி கால்பந்து உலக கோப்பை என மெஸ்ஸி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஒரு நேர்காணலில் பேசிய மெஸ்ஸி, நிச்சயமாக இது என்னுடைய கடைசி உலக கோப்பை. இந்த முடிவை எடுத்துவிட்டேன். உலக கோப்பைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். என்ன நடக்கப் போகிறது, இந்த உலக கோப்பை தொடர் எப்படிப் போகப்போகிறது என்ற பதற்றம் உள்ளது. இந்த தொடர் எங்களுக்கு சிறப்பாக செல்ல நான் ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். மெஸ்ஸியின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    • ஆலையின் கச்சா எண்ணெய் தொட்டியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது.
    • தீ மளமளவென மற்ற எண்ணெய் தொட்டிக்கும் பரவியது.

    நியூகன்:

    அர்ஜென்டினா தெற்கு பகுதியில் உள்ள நியூகன் மாகாணத்தில் பிளாசா குயின்குல் நகரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது.

    இந்த ஆலையின் கச்சா எண்ணெய் தொட்டியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு தீப்பிடித்தது. தீ மளமளவென மற்ற எண்ணெய் தொட்டிக்கும் பரவியது. இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் 3 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர்.
    • அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர்.

    பியூனஸ் அயர்ஸ் :

    அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபராக இருந்து வருபவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னர். மூத்த பெண் அரசியல் தலைவரான இவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 2 முறை அர்ஜென்டினா அதிபராக பதவி வகித்துள்ளார். இந்த பதவி காலத்தில் அவர் அரசு நிதியை கையாடல் செய்ததாக ஊழல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபனமானால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையோடு, அரசியலில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. எனினும் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த ஊழல் வழக்கு விசாரணைக்காக கிறிஸ்டினா கோர்ட்டில் ஆஜராகிவிட்டு தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரை வரவேற்பதற்காக அவரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் வீட்டின் முன்பு குவிந்திருந்தனர். காரில் வந்து இறங்கிய கிறிஸ்டினா தனது ஆதரவாளர்களிடையே வாழ்த்துகளை பெற்று கொண்டிருந்தார்.

    அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென கிறிஸ்டினாவின் முகத்துக்கு அருகே துப்பாக்கியை கொண்டு சென்று சுட முயற்சித்தார். ஆனால் நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் துப்பாக்கி வேலை செய்யவில்லை. இதனால் கிறிஸ்டினா நூலிழையில் உயிர் தப்பினார். இதையடுத்து கிறிஸ்டினாவின் பாதுகாவலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுடமுயன்ற அந்த நபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் பிரேசில் நாட்டை 35 வயது நபர் என்பது தெரியவந்துள்ளதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறினர்.

    துணை அதிபரை கொல்ல முயன்ற சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்த நாட்டின் அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், நாட்டு மக்கள் துணை அதிபர் கிறிஸ்டினாவுடன் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக 1 நாள் தேசிய விடுமுறையை அறிவித்தார்.

    இதனிடையே துணை அதிபர் கிறிஸ்டினாவை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    சமீபத்தில் ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலகையே அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தைகளின் உடலில் பொட்டாசியம் அளவு அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளன.
    • ஆரோக்கியமாக பிறந்த குழந்தையை ஏன் விஷ ஊசி போட்டு கொன்றார் என்பது தொடர்பாக நர்சிடம் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கார்டோபா:

    அர்ஜென்டினா கார்டோபாவில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை சுமார் 8 குழந்தைகள் பிறந்தது. ஆரோக்கியமாக பிறந்த இந்த குழந்தைகள் அடுத்தடுத்து சில நாட்களில் இறந்தது.

    கடைசியாக இறந்த குழந்தையின் பாட்டிக்கு திடீரென சந்தேகம் எழுந்தது, இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அந்த குழந்தைகளின் உடலில் பொட்டாசியம் அளவு அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளன. அந்த குழந்தைகளுக்கு விஷ ஊசி போட்டதால் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டதும் தெரிந்தது. இது தொடர்பாக ஆஸ்பத்திரி நர்சு பிரெண்டா அகுலேராவை போலீசார் கைது செய்தனர்.

    ஆரோக்கியமாக பிறந்த குழந்தையை அவர் ஏன் விஷ ஊசி போட்டு கொன்றார் என்பது தொடர்பாக தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவர்களின் அலட்சியத்தால் மரடோனா உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • குற்றம் நிரூபிக்கப்பட்டால் 8 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

    பியூனர்ஸ் அயர்ஸ்:

    பிரபல கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா கடந்த 2020ம் ஆண்டு மரணம் அடைந்தார். மூளையில் இரத்தக்கசிவுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு, இதய செயலிழப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மரணத்தில் சர்ச்சைகள் நிலவி வந்தது. மருத்துவர்களின் அலட்சியத்தால் மரடோனா உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த நிலையில் தற்போது மரடோனாவின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் குடும்ப மருத்துவருமான லியோபோல்டோ லுக், மனநல மருத்துவர் அகஸ்டினா கோசாச்சோவ், உளவியலாளர் கார்லோஸ் டயஸ், மருத்துவ ஒருங்கிணைப்பாளர் நான்சி ஃபோர்லினி மற்றும் செவிலியர்கள் என மொத்தம் 8 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதை அர்ஜென்டினா நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

    இவர்களின் கவனக்குறைவு காரணமாக மரடோனா உயிரிழந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்ததை அடுத்து மருத்துவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். விசாரணை தேதி எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 8 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

    ×