என் மலர்
மேஷம்
சுபகிருது வருட பலன் - 2023
வீரமான மேஷராசியினரை இந்த தமிழ் புத்தாண்டு உங்கள் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல நல்வாழ்த்துக்கள்.
குரு பகவான் ஆண்டு முழுவதும் 12ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராகு பகவான் ஜென்ம ராசியிலும் கேது பகவான் ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். 17.1.2023 வரை தொழில் காரகன் சனி 10ல் ஆட்சி பலம் பெறுகிறார்கள். இதனால் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும்.சுகபோக வாழ்க்கை கிடைக்கும்.உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் அற்புதமான தமிழ்புத்தாண்டாக இந்த வருடம் அமையும்.
குடும்பம்: இரண்டாமான குடும்ப ஸ்தானத்திற்கு கோட்சார கிரகங்கள் சாதமான நிலையில் இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் அனுசரணை உண்டு. புத்திர பிராப்தம்உண்டாகும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. பிள்ளைகளுக்கு தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை, வீடு வாகன யோகம்போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும். பிள்ளைகளின் சுப காரியங்கள் கோலாகலமாக நடைபெறும்.
விரயாதிபதி குரு 12ல் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் வீட்டிற்கு அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வீடு, வாகனம் போன்றவைகள் மூலம் சுப விரயம் உண்டாகும். கேது ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அண்ணன், தம்பிகள் பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். கூட்டுத் தொழில் செய்து வந்த குடும்பங்களில் சில பங்காளிகள் தொழிலை விட்டு விலகலாம். பாகப்பிரிவினையில் கருத்து வேறுபாடு உண்டாகலாம். நட்பு வட்டாரங்கள் விலகிச் செல்வது போன்ற மன உணர்வு வாட்டும்.
ஆரோக்கியம்:6,8ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாதிகளால் ஏற்பட்ட தாக்கம் குறையும்.ஆயுள் பயம் அகலும்.
திருமணம்:தற்போது ராசியில் நிற்கும் ராகுவும் 7ல் நிற்கும் கேதுவும் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தை ஏற்படுத்துவதுடன் 7ம் இடத்திற்கு 17.1.2023 வரை சனிப் பார்வையும் இருப்பதால் திருமண முயற்சியில் சில தடை, தாமதங்கள் நிலவ வாய்ப்பு உள்ளது. 4ம் இடமான சுக ஸ்தானத்திற்கும், 8ம் இடமான மாங்கல்ய ஸ்தானத்திற்கும் குருப்பார்வை இருப்பதால் ஜனவரி 2023 க்கு மேல் திருமணம் கை கூடும்.
பெண்கள்:லௌகீக வாழ்வின் அனைத்து இன்பங்களையும் அனுபவிக்க தேவையான வசதி வாய்ப்புகளை ராகு கொடுப்பார். ராகு கொடுக்கும் பணவசதியை அனுபவிக்க விடாமல் தொழில் நிமித்தமாக தம்பதிகள் ஆளுக்கொரு ஊரில் அல்லது நாட்டில் வாழ வேண்டிய சூழலை கேது கொடுப்பார்.வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்வாதாரம் உயரும். பல புதிய பெண் தொழில் முனைவோர்கள் உருவாகுவார்கள். குடும்ப உறவுகளின் ஒற்றுமை நிம்மதியை அதிகரிக்கும். வாழ்க்கையில் செட்டிலாகும் காலம்.பூர்வீகச் சொத்து,தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும். ஆரோக்கியம் சீராகும். கடன் சுமை குறையும்.
மாணவர்கள்:4ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். காலத்தின் அருமை உணர்ந்து பெற்றோர்கள் மற்றும்ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று படிப்பில் கவனம் செலுத்த வெற்றி உங்களுக்கு கரம் கொடுக்கும். கல்வியில் தடை ஏற்பட்ட மாணவர்கள் மீண்டும் படிப்பைத் தொடர சாதகமான காலமாகும். உங்கள் லட்சியத்தை அடைய நவகிரகங்கள் உதவும்.
முதலீட்டாளர்கள்:சனி 10ல் ஆட்சி பலம் பெற்று இருக்கும் வரை முன்னேற்றம் இருக்கும். இதுவரையில் யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவர்கள். பல புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். புதிய கூட்டாளிகளை நம்பி அதிக முதலீடு செய்வதை தவிர்க்கவும். தொழில் அதிபர்களுக்கு அரசின் உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவார்கள். நல்ல நம்பிக்கையானவிசுவாசமான வேலையாட்கள் கிடைப்பார்கள். பொதுவாக மேஷத்திற்கு குருவிரயாதிபதி என்பதால் ஆட்சி பலம் பெறுவது சிறப்பல்ல. கடுமையாக உழைக்க நேரும். பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. தொழிலை விரிவுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். தொழில் சிறப்பாக நடந்தாலும் பெரிய லாபம் கையில் நிற்காது என்பது தான் கிளைமாக்ஸ்.
அரசியல்வாதிகள்:அதிகாரப் பதிவுகள் தேடி வரும். கட்சி மேலிடம் உங்களுக்கு முக்கியத்துவம், பதவியும் கொடுக்கும். 7ல் கேது இருப்பதால் யாரையும் நம்பி ரகசியத்தை பகிரக்கூடாது. கூட்டணி கட்சிகள், நண்பர்கள் உங்களை எப்பொழுது வேண்டுமென்றாலும் கவிழ்த்தி விடலாம்.எதிர் கட்சியினருக்கு சாதகமானகாலம். பதவியை தக்க வைக்க ஊர் ஊராக அலைந்து விரயம் அதிகமாகும். சிலர் விரயம் என்றால் பொருள் விரயம் என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள். கவுரவம் குறைந்தாலும் விரையம் தான்.
கலைஞர்கள்:இதுவரை சமுதாய வெளியுலகத்திற்கு தெரியாமல் இருந்த உங்கள் திறமை பாராட்டப்படும் காலம். பல வருடங்களாக நீங்கள் எதிர்பார்த்த ஒரு அற்புத சந்தர்ப்பம் உங்களை தேடி வரும். அந்த வாய்ப்பு உங்களுக்கு பெரிய வாழ்வியல் மாற்றத்தை தரப் போகிறது. சிலர் காலத்தால் அழியாத படைப்புகளைப் படைத்து சாதனை படைப்பீர்கள்.வெளிநாட்டிற்கு சென்று படப்பில் கலந்து கொள்வீர்கள். அதிக அலைச்சல் இருக்கும்.போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும்.
விவசாயிகள்:விவசாயம் வெகு சிறப்பாக நடைபெறும். உற்பத்தி அதிக அளவில் இருக்கும். பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. 7ல் கேது இருப்பதால் பங்குதாரர் இல்லாத விவசாயமாக இருப்பது நல்லது பயிருடன் பணமும் வீடு வந்து சேரும்.உங்கள் விளைச்சலுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும். பண வரவு சிறப்பாக இருந்தாலும் 12ல் குரு இருப்பதால்ஏராளமான செலவும் வரும். சிந்தித்து செயல்பட்டால் விரயத்தை குறைக்க முடியும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்
ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ராசி மற்றும் 7ம் இடத்தின் பாதிப்பு சற்று மிகைப்படுதலாக இருக்கும். நம்பியவர்களே நம்பிக்கை துரோகம் செய்யலாம் அல்லது உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக வாழ நேரலாம். உண்மையானவர்கள் யார் துரோகிகள் யார் என அடையலாம் காணும் காலம். அடிக்கடி மின் சாதனங்கள் பழுதாகி விரயம் உண்டாகும்.
குரு:29.7.2022 முதல் 23.11. 2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 10ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் தொழில் தொடர்பான தடாலடியானமுக்கிய முடிவுகளை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பை தவிர்க்க வேண்டும். பணத்திற்கு ஆசைப்பட்டு சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
பரிகாரம்:வயதான தம்பதிகளுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வர அனைத்து விதமான சுப பலன்களும் தேடி வரும்.
பொருளாதாரத்தில் ஏற்றம்
மேஷ ராசிக்கு சுக்ரன் 2,7ம் அதிபதி என்பதால் கோட்சார ராகு 15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகு சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். 6ம் இடத்திற்கும் குருப் பார்வை இருப்பதால் கடன் தொகை, எதிர்பார்த்த நபர்களிடம் இருந்து பண வரவு உண்டாகும். 8ம் இடத்திற்கும் குருப் பார்வை இருப்பதால் அதிர்ஷ்டத்தின் மூலமும் பொருள் வரவு ஏற்படும்.தொழில் மூலம் பணவரவு, லாபம் கிடைக்கும். ஆனால் விரய ஸ்தானத்தில் குரு ஆட்சி பலம் பெற்று இருப்பதால் கையில் பணம் தங்காது. சேமிப்புகள் கரையும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406