search icon
என் மலர்tooltip icon

    கடகம்

    2024 மார்கழி மாத ராசிபலன்

    கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கடக ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் உங்களுக்கு யோகம் செய்யும் கிரகமாக விளங்கும் செவ்வாய் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். எனவே எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது.

    திடீர் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து கொண்டேயிருக்கும். சமூகப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தால் குறுக்கீடுகளும் அதிகரிக்கும். பணநெருக்கடியும், கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத சூழ்நிலையும் ஒரு சிலருக்கு ஏற்படும்.

    செவ்வாய்- சுக்ரன் பார்வை

    கடகத்தில் உள்ள செவ்வாய், இந்த மாதம் முழுவதும் மகரத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக - லாபாதிபதியான சுக்ரனை பார்ப்பது யோகம்தான். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப் படுத்தும். மாற்று வைத்தியம் உடல்நலத்தை சீராக்கும். உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும்.

    இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். நீண்ட காலமாக பகையாக இருந்த உறவு இப்பொழுது நட்பாக மாறும்.

    குரு வக்ரம்

    உங்கள் ராசிக்கு 6, 9-க்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறுவதால் உத்தியோகத்தில் திடீர் பிரச்சினைகள் தலைதூக்கும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். பதற்றமும், தடுமாற்றமும் வந்து கொண்டேயிருக்கும். மனக்கசப்பு தரும் தகவல் அடிக்கடி வந்து அலைமோதும். பிள்ளைகளால் பிரச்சினை, பிற வழிகளிலும் மனநிம்மதி குறைவு ஏற்படும் நேரம் இது.

    உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்படும் அளவிற்கு சில சம்பவங்கள் நடைபெறலாம். தொழிலில் கூட்டாளிகள் விலகிக் கொள்வதாகச் சொல்லி அச்சுறுத்துவர். இதுபோன்ற காலங்களில் யோகபலம் பெற்ற நாளில் சிறப்பு வழிபாடுகளைச் செய்து கொள்வது நல்லது.

    கும்ப - சுக்ரன்

    மார்கழி 15-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுகாதிபதி சுக்ரன் சனியோடு இணையும் நேரத்தில் செவ்வாயின் பார்வையும் பதிகிறது. தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். தடைகள் தானாக விலகும். தனவரவும் திருப்தியாக இருக்கும். ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக உத்தியோகத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு இப் பொழுது கிடைக்கலாம். பெண் பிள்ளைகளின் சுபச் சடங்குகள் நடைபெறும் நேரம் இது.

    தனுசு - புதன்

    மார்கழி 17-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் மிகுந்த நன்மைகளைச் செய்வார். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சொத்துப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர். வருமானப் பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு சொந்தத் தொழிலுக்கு வரும் முயற்சி கைகூடும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், நல்ல மாற்றங்களும் வந்துசேரும். கலைஞர்களுக்கு சகக் கலைஞர்களால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். சுபச்செய்திகள் வீடு தேடி வரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 20, 21, 22, 26, 27, ஜனவரி: 2, 6, 7, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    ×