search icon
என் மலர்tooltip icon

    மீனம் -குரோதி வருடம் வருட பலன்

    மீனம்

    தமிழ் புத்தாண்டு ராசிபலன்

    எளிமையை விரும்பும் மீன ராசியினருக்கு குரோதி வருடத் தமிழ் புத்தாண்டு ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டாக அமைய நல் வாழ்த்துக்கள்.

    சகாய குருவின் பலன்கள்:

    மீன ராசிக்கு ராசி மற்றும் பத்தாம் அதிபதியான குரு பகவான் மே 1, 2024 முதல் தைரிய வீரிய, சகாய ஸ்தானத்திற்கு செல்கிறார். புதிய முயற்சிகளுக்கு இது உகந்த காலம். மாற்றங்களைப்பற்றி சிந்திப்பீர்கள். மறைமுக வருமானம் பெருகும். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 7ம் மிடத்தில் பதிகிறது. புது விதமான தேடல்கள் மற்றும் அது சார்ந்த செயல்களில் ஈடுபாடுகள் அதிகமாக இருக்கும். கடன்கள் வசூலாகும்.

    பெரிய முதலீடுகளை பயன்படுத்தி கூட்டு தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டமிடுவீர்கள். கடின உழைப்பை வெளிப்படுத்துவீர்கள்.

    நிலையான வருமானம் உண்டாகும். சேமிப்புகள் உயரும். வீடு மனை பூமி தொடர்பான நெடுநாள் கனவுகள் நிறைவேறும். திருமண தடைகள் நீங்கி வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் பணி நிரந்தரம் ஆகாதவர்களுக்கு பணிநிரந்தரம் உண்டாகும்.

    குருவின் 7ம் பார்வை 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது. இடப்பெயர்ச்சி நிச்சயம் உண்டு. உங்களின் திறமையின் மீது நீங்கள் கொண்ட வைராக்கியம், பிடிவாத குணம், ஆளுமை திறன் உங்களின் தொழில், உத்தியோகம் மூலம் உங்களை வெளி உலகிற்கு அடையாளம் காட்டும். உங்களின் முன்னேற்றத்தை தடுத்தவர்கள் காணாமல் போவார்கள்.

    திருமணம், சடங்கு போன்ற விசேஷங்களில் குடும்பப் பகை, வருத்தம், சம்பந்திகள் சண்டை, பங்காளி பகையும் மறையும். இரு தரப்பினரும் நடந்ததை மறந்து விட்டு கொடுத்து செல்வீர்கள். கெளரவப் பிரச்சனையால் பல வருடமாக தடைபட்ட குல தெய்வ வழிபாடு தொடரும். குருவின் 9ம் பார்வை 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது.

    முன்னோர் வழி சொத்தில் இருந்த வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத பிறர் பணம், எதிர்பாராத தன லாபம், லாட்டரி, புதையல், உயில். ஆயுள் காப்பீடு போன்ற வகையில் கிடைக்கும்.

    விரயச் சனியின் பலன்கள்:

    மீன ராசிக்கு லாபாதிபதி மற்றும் விரயாதிபதியான சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் விரய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.

    மூட நம்பிக்கை, அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும்.சோம்பலும், கோபமும் மிகுதியாகும்.உழைப்பில் ஆர்வம் குறையும் சுய தொழிலில் இருப்பவர்களுக்கு உத்தியோகத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் எண்ணம் உதயமாகும். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் வேலை பார்க்கும் இடம், வேலையைப் பற்றிய முழு விபரமும் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். சனியின் 3ம் பார்வை தனம் வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது.

    தொட்டதெல்லாம் துலங்கும். எந்த வழியிலாவது உங்கள் தேவைக்கு ஏற்ற பொருளாதாரம் கிடைக்கும். கிடைக்கும். பொருளை பன்மடங்காக பெருக்க குறுக்குவழியில் நாட்டம் மிகும்.காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனைகள் அறுவை சிகிச்சையில் சீராகும்.

    கண்ணுக்கு தெரியாத தீய சக்தியை நாடி பொருள் விரயம் செய்வீர்கள். சனியின் 7ம் பார்வை 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் பதிகிறது.

    சனி பார்வை பட்ட இடம் பாழ். எனவே இது வரை கடனுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கேட்ட இடத்திலும் கேட்காத இடத்திலும் கூட கடன் கிடைக்கும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க உங்கள் வீட்டு வாசலில் காத்து இருப்பார்கள். கடனால் அவதிப்படுபவர்களுக்கு கடன் அடைக்கும் மார்க்கம் தென்படும்.சனியின் 10 பார்வை 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானதில் பதிகிறது.

    பணிபுரிபவர்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானகவே வந்து சேரும். வெளிநாடு சென்றவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது. இங்கே குருப் பார்வை இருப்பதால் சிலருக்கு அரசியல் ஆசை துளிர் விடும்.

    ராசியில் ராகு 7ல் கேது:

    ஜென்ம ராசியில் ராகு. 7ல் கேது. இது கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம். ஆண்டு முழுவதும் ராகு கேதுக்கள் ராசியிலும் ஏழாமிடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார். ராகு தான் நின்ற பாவக பலனை பிரமாண்டப்படுத்துவார். கேது தான் நின்ற பாவக பலனை சுருக்குவார். ராசியில் நிற்கும் ராகு உங்கள் செயல்பாடு மற்றும் தோற்றத்தில் பிரமாண்டத்தைக் கொடுப்பார்.தன்னம்பிக்கை உயரும்.

    புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் உருவாகும். உழைப்பும் பொறுப்புகளும் அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டாகும். இன்னல்களை எதிர்கொள்ளும் மனோதிடம் உருவாகும். கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும்.வீடு, நிலம், தோட்டம் வாங்கும் அமைப்பும் சிலருக்கு உருவாகும். வாடகை வீட்டில் வாழ்ந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறுவார்கள்.

    பிள்ளைகளின் திருமணத்திற்கு சீர்வரிசைகள் வாங்குவதில் ஆர்வம் செலுத்துவீர்கள். சிலருக்கு உஷ்ணம் சார்ந்த பிரச்சினைகளும் ஜீரணக் கோளாறுகளும் ஏற்படும். விண்ணப்பித்த அரசு வேலை கிடைக்கும்.

    பங்குச்சந்தை இழப்புகள் குறையும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை கோட் சார ராகு / கேது.

    ஏழரை சனியும் புரிய வைப்பார்கள். கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும்.

    தொழில் கூட்டாளிகளால் பணப்பரிவர்தனையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். கூட்டு தொழில் மற்றும் புதிய தொழில் ஒப்பந்தங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும். உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும். ஆயுள் பலம் உண்டு.

    பூரட்டாதி 4:

    குருவின் பூரட்டாதி நட்சத்திரம் மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் குரோதி வருடம் பொற்காலம் என்றால் மிகைப்படுத்தலாகாது. மனநிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். இருளடைந்த உங்கள் வாழ்க்கையில் மீண்டும் ஒளிபிறக்கும். குடும்பம், தொழிலுக்கு தேவையான பணத்தை திரட்டுவதில் வெற்றி பெறுவீர்கள்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பொருளாதாரம் சீராக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். தந்தையின் அன்பும், அசீர்வாதமும் கிடைக்கும். கர்ப்பிணிகளுக்கு ஆண் குழந்தை பிறக்கும். அழகான, எழில் நிறைந்த வீடு கிடைக்கும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். மனைவி மூலம் ஆதாயம் உண்டாகும்.

    உயர் கல்விக்கு முயற்சி செய்பவர்களுக்கு விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும். வேலை மாற்றம் நடக்கும்.இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். சிலர் உறவுகளிடம் மனஸ்தாபத்தால் தனிமையாக வாழ விரும்பலாம். அறிமுகமில்லாத எதிர்பாலின நட்பைக் தவிர்க்கவும். காலபைரவரை வழிபடவும்.

    உத்திரட்டாதி:

    சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு பிறக்கும் குரோதி வருடத்தில் குடும்பத்தில் நிலவிய பிணக்குள் நீங்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பண வரவு உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் கம்பெனியின் மூலம் பதவி உயர்வுடன் வெளி மாநிலம், வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவீர்கள்.

    தொழில் அதிபர்களின் நீண்ட நாள் கனவான ஏற்றுமதி இறக்குமதி தொழில் வாய்ப்பு தேடி வரும்.கடந்த கால வம்பு வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும். சிக்கல்கள் முழுமையாக குறையும்.வயோதிகர்கள் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள், பேரன், பேத்திகளுடன் சென்று சிறிது காலம் தங்கி வருவார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும் கட்டுக்கடங்காத விரயமும் இருக்கும்.

    கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல் சுபச் செலவுகள், சுப மங்கள விரயம் உண்டாகும். இடது கண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும். நிம்மதியான தூக்கம் வரும். அரசியல்வாதிகளுக்கு சத்ரு ஜெயம் உண்டு. மாணவ மாணவிகளுக்கு போட்டித் தேர்வில் வெற்றி வாய்ப்பு அதிகம்.அரசு வகை காரியத்தில் எடுக்கும் முயற்சிகள் பெற்றி தரும். வைத்தியம் பலன் தரும்.துர்க்கை வழிபாடு நல்லது.

    ரேவதி:

    புதனின் ரேவதி நட்சத்திரம் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டில் தடைகள் தகறும். தெளிவான முடிவு எடுக்கும் தன்மை அதிகரிக்கும். ஞாபக சக்தி கூடும். உறவுகள் பெருந்தன்மையோடு நடந்து கொள்வார்கள். வாழ்வில் முக்கியமான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் வெற்றியை உறுதி செய்வீர்கள். பணத்தேவைகள் நிறைவேறும். பிரயாணத்தில் ஆதாயமும் சுப பலனும் உண்டாகும்.

    பிள்ளைகளின் எதிர்கால நலனில் கவனமாக இருப்பீர்கள். சொத்து வாங்கும், விற்கும் முயற்சிகள் சாதகமாகும். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். பணம் பொருள் இவற்றிற்கு ஜாமீன் போடக்கூடாது. பங்குச் சந்தை முதலீட்டில் மிகவும் கவனம் தேவை.

    பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகளை சீராகும். தொழில் ரீதியான முன்னேற்றம் இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மகிழ்வீர்கள்.

    சிலருக்கு அரசு உத்தியோக வாய்ப்பு தேடி வரும். ஏழரைச்சனியின் காலம் என்பதால் எதைச் செய்தாலும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்யவும். சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் ஏற்பட்ட அவப்பெயர் விலகும். மருத்துவச் செலவுகள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

    திருமணம்:

    ராகு, கேது மற்றும் சனியின சஞ்சாரம் சற்று சாதகமற்று இருப்பதால் சிலருக்கு கோட்சார ரீதியாக திருமணத் தடை ஏற்படலாம்.

     பரிகாரம்:

    ஜென்ம ராசியில் ராகு ஏழில் கேது, விரய ஸ்தானத்தில் சனி என கோட்சார கிரகங்களின் சஞ்சாரம் சற்று சுமாராக உள்ளது. ராகு கேது மற்றும் சனியினால் சுப பலன்கள் அதிகரிக்க நீங்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகா் கோவில். இங்கு மூலவா் கற்பகவிநாயகா் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார். இவரை வழிபட நவகிரக தோஷமும் விலகும்.

    மீனம்

    சோபகிருது வருட பலன் 2023

    வெற்றி வாய்ப்புகள் குவியும்!

    வெளிப்படையான பேச்சினாலும், எண்ணங்களாலும் அனைவரையும் கவரும் ஆற்றல் கொண்ட மீன ராசியினருக்கு சோபகிருது வருடத்தில் வெற்றி மேல் வெற்றி குவிய நல்வாழ்த்துக்கள். திருக்கணிதப் பஞ்சாங்கப் படி ஆண்டின் துவக்கத்தில் ஏப்ரல் 22-ல் குருபகவான் தன ஸ்தானம் செல்கிறார். ஜனவரி 17-ல் நடந்த சனிப் பெயர்ச்சி முதல் சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியின் முதல் பகுதி. தற்போது 2,8-ல் சஞ்சரிக்கும் ராகு கேதுக்கள் அக்டோபர் 30 முதல் ராசி மற்றும் ஏழாமிடத்திற்கு மாறுகிறார்கள்.

    உங்கள் உடல் நிலையில் மன நிலையில் மாற்றம் எற்படும். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருந்த நிலை மாறும். உடலும் மனமும் பொழிவு பெறும். தடைபட்ட மகிழ்சியும் சந்தோஷமும், நம்பிக்கையும் துளிர் விடும். எதிர்காலம் பற்றிய பயம் விலகும் புத்திக் கூர்மை பளிச்சிடும்.

    மன ஆற்றலும், மன உறுதியும் கொண்ட நீங்கள் எந்தப் பிரச்சினையையும் கண்டு சோர்ந்து போக மாட்டீர்கள். முக்கியமான பிரச்சினை வம்பு, வழக்குகளில் தலையிடாமல் தாமரையிலை தண்ணீர் போல் விலகி விடுவீர்கள். தொழில் விறுவிறுப்பு அடையும். தொழிலுக்காக வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயற்சிப்பீர்கள். ஆயுள் பயம் அகன்று ஆரோக்கியம் அதிகரிக்கும். பருவ வயதினருக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கர்மம் செய்ய புத்திரன் கிடைப்பான். சிலருக்கு தத்து புத்திர யோகம் உண்டாகும்.

    குடும்பம், பொருளாதாரம் : உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகப் போகிறது. உறவினர்களுக்கிடையே உறவு நிலை மேம்படும். குருபகவான் தற்போது தன ஸ்தானம் செல்வதால் பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும் நீண்ட காலமாக உங்களுக்கு வர வேண்டிய பணம் தாமதமாகிக் கொண்டு இருந்தால் இப்பொழுது வசூலாகும். சம்பள பாக்கி வசூலாகும். சேமிப்புகள் அதிகமாகும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கள் அகலும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் நிலவிய மனக்கசப்பு மறைந்து ஒத்துழைப்பு, ஆதரவு உண்டாகும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். வீடு வாகன யோகம், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு போன்ற எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும். சிலருக்கு இடப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும்.

    பெண்கள்: மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். பணப்புழக்கம்அதிகரிக்கும் நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும். நகை புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வீர்கள். வாகன வசதிகள் மேம்படும். புதிய சொத்து மகிழ்ச்சி தரும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சிினைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும்.

    பூரட்டாதி 4 : செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடையும் காலம். புகழுக்கும், பெருமைக்கும் ஆசைப்படுவீர்கள். அதற்கான வழிமுறைகளை கையாளுவீர்கள்.

    திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும். உடன் பணிபுரிந்தவர்களுடன் உண்டான கருத்து வேறுபாடு அகன்று நட்பு நிலை நீடிக்கும். தொழிலில் ஏற்பட்ட தளர்வுகள் அகலும். வெளிநாட்டு பயணம், வீடு, வாகன யோகம் உள்ளது. வசீகரமான பேச்சால் உறவுகளை கட்டிப்போடுவீர்கள்.

    நன்மைகளே மிகுதியாக நடக்கும், எனினும் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். சுபச் செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். குழந்தைகள் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்ல நேரும். தினமும் குரு கவசம் படிக்கவும்.

    உத்திரட்டாதி : வாழ்க்கையில் மற்றவர்கள் அடையாததை அடைய வேண்டும் என்று நினைப்பீர்கள்.முயற்சியால் தேவைகள் அனைத்தையும் அடைவீர்கள். வம்பு, வழக்கு அவமானங்கள், ஆரோக்கிய குறைபாடு விலகி எல்லாவற்றிலும் சாதகமான சூழ்நிலை நிலவும். இன்சூரன்ஸ், பாலிசி முதிர்வு தொகை, உயில் சொத்து கிடைக்கும். தாய் வழிச் சொத்தின் மூலம் சகோதரர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டை தவிர்க்க முறையான பத்திரப் பதிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். சிலருக்கு அடமானத்தில் உள்ள சொத்து மீண்டு வரும். வீடு, வாகனம் போன்ற சுபச் செலவு ஏற்படலாம்.வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்தப் படுவீர்கள்.தாய் மாமன் உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணையும் காலம். தினமும் தட்சிணாமூர்த்தி காயத்திரி மந்திரம் படிக்கவும்.

    ரேவதி: எண்ணற்ற புதிய வாய்ப்புகள் தேடி வரும் காலம்.நன்மைக்கு மேல் நன்மை நடக்கும்.கடின உழைப்பு லாபத்தை ஈட்டித்தரும். திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் கூடும். நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள்.

    தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். வீட்டுப் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மரியாதைகள் உயரும். தாயிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். தினமும் தட்சிணாமூர்த்தி அஷ்டோத்திரம் படிக்கவும்.

    பரிகாரம்: மீன ராசியினர் தன குருவின் முழு பலன்களையும் அனுபவிக்க ஆலங்குடி ஆபாத்சகா யேஸ்வரர் கோவில் சென்று வரவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    சுபகிருது வருட பலன் - 2023

    வெளிநாட்டு மோகம் நிறைந்த மீன ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டுசகல சௌபாக்கியங்களும் வழங்க நல் வாழ்த்துக்கள்.

    ராசிக்கு 2ல் ராகுவும், 8ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். குருபகவான் ராசியிலும் 11,12ம் இடத்தில் சனி பகவானும் உலா வருகிறார்கள்.ராசி அதிபதி குரு ராசியில் ஆட்சி பலம் பெறுவதால் தங்களின் தோற்றம் மற்றும் செயல்களில் மாற்றம் ஏற்படும். பொது நலமான சிந்தனை தோன்றி அதன் படி செயல்பட்டு நற்பெயர் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும் . பெரிய மனிதர்களின் ஆசி கிட்டும். உங்களின் தனித் திறமை வெளிஉலகத்திற்கு தெரிய வரும்.

    எண்ணிய எண்ணம்பலிதமாகும். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற தாய், தந்தை பக்கபலமாக இருப்பார்கள். 2ம்மிடத்தில் ராகு பகவான் நிற்பதால் சம்பந்தமில்லாத நபர்கள் உங்கள் குடும்ப பிரச்சனையில் தலையிட்டு உங்களை மனசஞ்சலப்படுத்தலாம் என்பதால் கவனம் தேவை. 8ம்மிட கேதுவால், வெகு சிலருக்கு எட்டாம் பாவக பலன்களான அவமானம், கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். . ஆயுள் பலம் உண்டு. தீடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து ,எதிர்பாராததன வரவு வரும் வாய்ப்பு உள்ளது. 11ம்மிட லாபச் சனியால் தங்கு தடையில்லாத பொருளாதார முன்னேற்றம் ஏற்படவுள்ளது. வழக்குகள் சாதகமாகும்.

    குடும்பம்:குடும்ப வாழ்க்கை மனநிறைவு தரும். உற்றார் உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போகும். திருமண வயதில் உள்ள மகள், மகனின் திருமணத்தை தடபுடலாக நடத்துவார்கள். லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக நாட்டம் சற்று மிகுதியாகும். வீடு வாகன யோகம் உண்டாகும்.

    ஆரோக்கியம்: ராசி அதிபதி குரு ராசியில் ஆட்சி பலம் பெறுவதால் நோய் தாக்கம் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இல்லை.ஆரோக்கியத்தை அதிகரிக்கும் யோகா, தியானம் போன்ற வற்றில் ஆர்வம் அதிகரிக்கும்.

    திருமணம்:2ல் ராகுவும் 8ல் கேதுவும் இருப்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தால் திருமணம் தடைபடலாம். மேலும் ராசி அதிபதி குருஆட்சி பலம் பெற்று 7ம் இடத்தை பார்ப்பதால் ஜனன கால தசாபுத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். மேலும் 2023 ஏப்ரலில் குரு மேஷத்திற்குள் வந்து 8 ல் உள்ள கேதுவைபார்க்கும் போதுகோட்சார ராகு கேதுவால் ஏற்படும்திருமணத் தடை முற்றிலும் அகலும். 2023 ஜனவரியில் ஏழரைச் சனி ஆரம்பிப்பதால் தடைபட்ட திருமணங்கள் நடக்கும்.

    பெண்கள்: பெண்களுக்கு வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியான நிலை நீடிக்கும். வீட்டுப் பெரியவர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தங்கம், வெள்ளி பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சிலர் தொழில், உத்தியோக நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ நேரும். சிலர் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து புதிய தொழில் தொடங்கலாம். உங்கள் பிரார்த்தனை மற்றும் வேண்டுதலுக்கு கடவுளின் அருள் கிடைக்கும் காலம்.

    மாணவர்கள்:ராசிக்குள் குரு வந்து ஆட்சி பலம் பெறுவதால் உங்கள் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். படிக்கும் பாடம் நன்கு புரியும். வேற்று மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். பேச்சுப் போட்டி, பட்டிமன்றங்களிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

    உத்தியோகஸ்தர்கள்: நேர்மையான வழியில் உழைப் பவர்களுக்கு 8 மிட கேது உபரி வருமானம் பெற்றுத் தருவார்.ஊதிய உயர்வு நிச்சயம் உண்டு. முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் மேல் வீண் பழி சுமத்தப்படலாம். அவப் பெயர் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

    முதலீட்டாளர்கள்:சுய தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். நீண்ட காலமாக தடைபட்ட பணவு வரவு இப்பொழுது வந்து சேரும். கடன் வாங்காமலேயே உபரி வருமானத்தில் தொழிலை விரிவு படுத்துவீர்கள்.சிலர் தொழிற்சாலையை இட மாற்றம் செய்ய நேரும். தொழில் தர்மத்தை கடைபிடித்து நியாயமான முறையில் சம்பாதித்து புகழடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும். தொட்டது துலங்கும். வழக்கத்தை விட அதிகமான பணம் சம்பாதிப்பீர்கள். வாடிக்கையாளர்கள் உங்களுக்கு முழுஆதரவு வழங்குவார்கள்.

    அரசியல்வாதிகள்:இரண்டாம் இடத்தில் நிற்கும் ராகு பகவான் நிறைவேற்ற முடியாத ஒரு வாக்கை கொடுக்க வைத்து எட்டாம் இட கேது மூலம் வம்பு வழக்கை விட்டு வாசலில் நிறுத்துவார்.கொள்கை கோட்பாடுடன் தூய்மையாக செயல்பட்டால் நிலைக்கலாம். நீடிக்கலாம். சந்தர்ப்பவாதியாக செயல்பட்டால் வீழ்ச்சியை சந்திப்பதில் சந்தேகம் இல்லை.

    கலைஞர்கள்:கலைத்துறையின் அனைத்து பிரிவினருக்கும் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 2ம் இடத்தில் ராகு என்பதால் பிற மொழி படங்களில் அதிக வாய்ப்பு கிடைக்கும். பல மொழிகள் கற்கும் ஆர்வம் உண்டாகும். உங்கள் நடிப்பு திறமைக்கு புது ரசிகர் கூட்டம் உருவாகும்.

    விவசாயிகள்:உங்களின் உழைப்பு பணமாக காய்க்கும் நேரம். பணத்தை, பயிரையும் சேர்த்து அறுவடை செய்வீர்கள். அமோக விளைச்சல் அக்கம் பக்கத்து நிலத்தினரை பொறாமைப்பட வைக்கும். கண் திருஷ்டி உருவாகும். சிலருக்கு புதிய நிலம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். உண்மையாக உழைப்பவர்களுக்கு இந்த புத்தாண்டு வெற்றிகரமான திருப்புமுனையைத் தரும்.

    கவனமாக செயல்பட வேண்டிய காலம்

    ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில்வாக்கில் நிதானம் தேவை. உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும்.அலைச்சல் மிகுதியாக இருக்கும்.பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. பங்குச் சந்தை முதலீடுகள் உங்களை நிலை தடுமாற வைக்கும். வரவு இல்லாமல் இருந்தால் இருந்தால் கூட பரவாயில்லை. முதலுக்கே மோசமாக முடியும் என்பதால் கவனம் தேவை. லௌகீக நாட்டம் குறையும். பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தையில் தந்தை வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு அதிகமாகும்.

    குரு:29.7.2022 முதல் 23.11. 2022 வரை ராசிக்கு 11ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் உங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகலாம். நம்பியவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். பிறர் பிரச்சனைகளை உங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதால் ஒதுங்கி நிற்பது நல்லது. எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும்.

    பரிகாரம்:மீன ராசியினர் அடிக்கடி புண்ணிய தீர்த்தங்களில் உடலும், உள்ளமும் குளிர புனித நீராட வரலாறு படைப்பீர்கள்.

    அதிர்ஷ்டம் கதவை தட்டும்

    தன ராகுவாலும், 11ம்மிடமான லாப ஸ்தான சனியாலும் தொழிலில் பல வருடமாக உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும் நேரம். லாபம்வீடு தேடி வந்து கதவை தட்டும். ஜனன கால ஜாதகத்தில் சனி சுப வலு பெற்றவர்களுக்கு அதிக முயற்சி இல்லாமலே கமிஷன், தரகு போன்றவைகள் மூலம் பெரிய தொகை கிடைக்கும். மனைவிக்கு தாய் வழி சொத்து கிடைக்கும். அதிர்ஷ்டம் தொழில், பதவிரூபத்தில் வந்து கதவைத் தட்டும். புதிய தொழில் சந்தர்ப்பம் தேடி வரும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனை இனி இல்லை. பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். உங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் கூட பணத்தை கொடுக்க முன் வருவார்கள். வராக்கடன்கள் வசூலாகும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×