search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்

    ரிஷபம்

    கார்த்திகை மாத ராசிபலன்

    எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காணும் ரிஷப ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு ஞானகாரகன் கேதுவும் இருப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் விதம் லாப ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கின்றார். எனவே இம்மாதம் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.

    வக்ர குருவின் ஆதிக்கம்

    மாதம் முழுவதும் மேஷ ராசியில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால் அவருக்கு பகை கிரகமான குரு பகவான் வக்ரம் பெறுவது நன்மைதான். இருப்பினும் லாபாதிபதியாகவும் குரு விளங்குவதால் ஒருசில சமயங்களில் பொருளாதார பிரச்சினை அதிகரிக்கும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய நண்பர்கள் வழிகாட்டுவர்.

    குடும்பத்தில் மூன்றாம் நபரின் குறுக்கீடு காரணமாக ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். தேங்கிய காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காணும் இந்த நேரத்தில் குரு வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

    துலாம்-சுக்ரன்

    உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்று வலிமை இழந்து சஞ்சரிக்கின்றார். எனவே குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச்செலவுகளும் வந்து கொண்டுதான் இருக்கும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது, அலைச்சலைக் குறைத்துக் கொள்வது போன்றவற்றின் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயலும்.

    அதே நேரம் கார்த்திகை மாதம் 14-ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருகின்றார். இதன் விளைவாக நல்ல மாற்றங்கள் உங்களுக்கு வந்து சேரும். குறிப்பாக உத்தியோகம், தொழிலில் முன்னேற்றம் உண்டு. மேலதிகாரிகள் இணக்கமாக நடந்து கொள்வர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பர். அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படும் நிலை உருவாகும்.

    தனுசு-புதன்

    உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் கார்த்திகை மாதம் 14-ம் தேதி அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அங்கிருந்தபடி தன் வீட்டைத் தானே பார்க்கின்றார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. எனவே வாங்கல் கொடுக்கல்கள் சரளமாக இருக்கும்.

    வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்க வாய்ப்புகள் கைகூடிவரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே என்று ஏங்கியவர்கள் இப்பொழுது சுயதொழில் தொடங்க முன்வருவர். வீடு மாற்றங்கள், இட மாற்றங்கள் வெற்றிகரமாக அமையும்.

    ரிஷபம்

    ஐப்பசி மாத ராசிபலன்

    18.10.2023 முதல் 16.11.2023 வரை

    கொடுத்த பணியை ஒழுங்காகச் செய்து பாராட்டு பெறும் ரிஷப ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் குருவால் பார்க்கப்படுகின்றார். குரு பகை கிரகமாக இருந்து பார்த்தாலும் அது வக்ர இயக்கத்தில் இருந்து பார்ப்பதால் நன்மைகள் அதிகம் கிடைக்கும். காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவரும். கடமையைச் செவ்வனே செய்து பாராட்டுப் பெறுவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். புதிய முயற்சிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சென்ற மாதத்தைக் காட்டிலும் சிறப்பான மாதமாக இந்த மாதம் அமையப்போகின்றது.

    சனி வக்ர நிவர்த்தி!

    ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் சனி ஆவார். குறிப்பாக 9, 10-க்கு அதிபதியானவர் சனி என்பதால் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகின்றது. எனவே சகல வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும். தனித்தியங்கி வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். முக்கியப் புள்ளிகளின் ஆதரவோடு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர். கருத்து மோதல்கள் அகலும். கவலைகள் தீரும்.

    குரு வக்ரம்!

    மாதம் முழுவதும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகை கிரகம் என்பதால் அவர் வக்ரம் பெறுவது நன்மை தான். எதிர்பாராத சில நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறலாம். புதிய திருப்பங்கள் பலவும் காண்பீர்கள். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து, செய்யும் தொழிலைச் சிறப்பாக நடைபெற வழிவகுத்துக் கொடுப்பர். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

    நீச்சம் பெறும் சுக்ரன்!

    ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை பெறுகின்றார். உங்கள் ராசிநாதன் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படாதிருக்க ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள். உறவினர் பகை உருவாகலாம். 6-க்கு அதிபதியாகவும், சுக்ரன் விளங்குவதால் உத்தியோகத்தைப் பொறுத்தவரை பாதிப்பு ஏற்படாது. உங்களுக்கு இடையூறு செய்தவர்கள் விலகுவர். மேலதிகாரிகள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

    விருச்சிக புதன்!

    ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து பொருளாதார நிலையை உயர்த்தும். குடும்ப உறுப்பினர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு உருவாகும். பிள்ளைகளின் திருமண வாய்ப்புகளைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடுதலாக வந்து சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்து மகிழ்ச்சியை உருவாக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் கவுரவிக்கப்படுவர். மாணவ-மாணவியர்களுக்கு படிப்பில் மேன்மை உண்டு. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். வீடு மாற்றங்கள் இனிமை தரும். வருமானம் திருப்தி அளிக்கும். வாரிசுகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 23, 24, 27, 28, நவம்பர் 2, 3, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.

    ரிஷபம்

    புரட்டாசி மாத ராசிபலன்

    18-09-2023 முதல் 17-10-2023 வரை

    கொள்கைப் பிடிப்போடு செயல்படும் ரிஷப ராசி நேயர்களே! புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். விரய ஸ்தானத்தில் லாபாதிபதி குரு இருப்பதால் விரயத்திற்கு ஏற்ற வருமானம் உண்டு. வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படலாம். வரும் மாற்றங்கள் நன்மை தரும் விதம் அமையும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னால் இடையூறு சக்திகள் அகலும். இனிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும்.

    புதன் வக்ரம்

    புரட்டாசி மாதம் 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். அதே நேரத்தில் அந்த வீடு புதனுக்கு உச்ச வீடாகும். தன - பஞ்சமாதிபதியான புதன் உச்சம் பெறும் பொழுது பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது. பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. பிள்ளைகளின் வழியில் இதுவரை தாமதப்பட்ட காரியங்கள் இனி ஒவ்வொன்றாக நடைபெறும். சில்லரைக் கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.

    துலாம் - செவ்வாய்

    புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். சப்தம - விரயாதிபதியான செவ்வாய் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது, வாழ்க்கைத் துணை வழியே எடுத்த சில முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை அல்லது தொழில் சம்பந்தமாகச் செய்யும் முயற்சிகள் கைகூடும். 'வாங்கிய இடத்தை விற்க முடியவில்லையே, வாங்கிய இடத்தில் வீடு கட்ட முடியவில்லையே' என்றெல்லாம் வருத்தப்பட்டவர்களுக்கு, இப்பொழுது சொத்து சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர். செவ்வாய் விரயாதிபதியாகவும் விளங்குவதால் ஒருசில நல்ல காரியங்களுக்காகச் செலவிடும் சூழல் உண்டு.

    துலாம் - புதன்

    புரட்டாசி 28-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் மறைவிடத்திற்கு வருகிறாரே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் உண்டு. எனவே பொருளாதார நிலை உயரும். எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமென்று நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்துமுடிக்க இயலும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ- மாணவிகளுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணையும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். சுபகாரிய முயற்சி கைகூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்: 25, 26, 29, 30, அக்டோபர்: 6, 7, 11, 12. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிபலன்கள்

    18-08-2023 முதல் 17-09-2023 வரை

    சமூக சேவையில் ஆர்வம் காட்டும் ரிஷப ராசி நேயர்களே!

    ஆவணி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாத தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் கூட்டுக்கிரக யோக அமைப்பில் சஞ்சரிக்கிறார். சுக ஸ்தானத்தில் 5 கிரகங்கள் சேர்க்கை பெற்றிருக்கின்றன.

    அதோடு, 'சுக்ர மங்கல யோகம்', 'புத சுக்ர யோகம்', 'புத ஆதித்ய யோகம்' போன்ற யோகங்களும் இருப்பதால் தடைகள் தானாக விலகும். கடக - சுக்ரன் ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால், அவர் வக்ரம் பெறுவது ஒரு வகையில் நன்மைதான்.

    'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரிடும். சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் அகன்று மன மகிழ்ச்சியை வழங்கும். உத்தியோகத்தில் பணி நீடிப்பும், கூடுதல் பொறுப்புகளும் வருவதற்கான அறிகுறி தென்படும்.

    கன்னி - செவ்வாய் ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் 5-ம் இடத்திற்கு வருவதால் பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படலாம். அவற்றை சுப விரயங்களாக மாற்றிக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

    வேலைவாய்ப்பிற்கான முயற்சிகளைச் செய்தல், கல்யாணக் கனவுகளை நனவாக்குதல் போன்ற சுப காரியங்களில் கவனம் செலுத்தலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.

    மகர - சனி சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அங்கு சுமார் 4 மாத காலம் சஞ்சரித்த பின்னர், மீண்டும் கும்ப ராசிக்கு செல்லப்போகிறார். வாக்கிய கணித ரீதியாக வரும் இந்த மாற்றம் உங்கள் வளர்ச்சியில் திடீர் முன்னேற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. முன்பு மகரத்தில் சஞ்சரித்த பொழுது கொடுக்காத சில பலன்களை, சனி பகவான் இப்பொழுது வழங்குவார்.

    குறிப்பாக அண்ணன், தம்பிகளுக்குள் ஏற்பட்ட மனவருத்தங்கள் மாறும். தந்தை வழி ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். சிந்தனைகள் வெற்றி பெற செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் சந்ததிகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்து சேரும். புதன் வக்ர நிவர்த்தி சிம்மத்தில் வக்ரமாக சஞ்சரித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகி பலம் பெறுகிறார்.

    உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தன - பஞ்சமாதிபதியான புதன் பலம்பெறுவது யோகம்தான். பொருளாதாரத்தில் உச்சநிலை அமையும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு லாபம் வந்துசேரும் நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பணி நீடிப்பும், கூடுதல் பொறுப்புகளும் உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும்.

    மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சியும், நல்ல பெயரும் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 18, 19, 29, 30, செப்டம்பர்: 2, 3, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.7.23 முதல் 17.8.23 வரை

    தனக்கென தனிப்பாணியை அமைத்துக் கொள்ளும் ரிஷப ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் விரயாதிபதி செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கிறார். மேலும் தொழில் ஸ்தானத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் சனியையும் பார்க்கிறார். எனவே தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கலாம். ஆரோக்கியத் தொல்லைகளும், அடிக்கடி வந்து அலைமோதும். அவ்வப்போது நீங்கள் மேற்கொள்ளும் ஆலய வழிபாடு நன்மைக்கு வழிவகுக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிநாதன் மீது பதிவதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.

    மேஷ - குரு சஞ்சாரம்

    நவக்கிரகத்தில் சுபகிரகம் என்று சொல்லப்படுபவர் குரு பகவான். அவர் உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமாக கருதப்படுபவர். அந்த குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் ராகுவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். அவரது பார்வைக்கு பலன் உண்டு என்பதால், அந்த அடிப்படையில் சில நல்ல பலன்களும் உங்களுக்கு ஏற்படலாம். குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே தாய்வழி ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றலாமா? என்று சிந்திப்பீர்கள். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சிக்கு, கேட்ட இடத்தில் தொகை கிடைக்கும்.

    குருவின் பார்வை ரோக ஸ்தானத்தில் பதிவதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். ரண சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை மாறி, சாதாரண சிகிச்சையிலேயே நோய் குணமாகும். ராகுவோடு குரு இணைந்திருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். தூர தேசத்தில் இருந்து கூட அழைப்புகள் வரலாம். கேதுவின் மீது குருவின் பார்வை பதிவதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அஷ்டம ஸ்தானத்திலும் குரு பார்வை பதிவதால் இழப்புகளை ஈடுசெய்யப் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். விலகியிருந்த சொந்தங்கள் மீண்டும் வந்திணைவர். பழைய தொழிலைக் கொடுத்துவிட்டுப் புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இடமாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை அவரவர் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ற விதம் அமையும். வரும் மாற்றங்கள் வளர்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும்.

    சிம்ம - புதன்

    ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்திற்கு வருவது நன்மைதான். 'புத சுக்ர யோகம்' செயல்படும் இந்த நேரத்தில், சுக்ரன் மீது குருவின் பார்வையும் பதிவதால், இக்காலம் ஒரு இனிய காலமாகும். பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் வெற்றி நடை போடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்களும் வந்துசேரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்குச் சாதகமான நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் சில கைநழுவிப் போகலாம். மாணவர்களுக்கு மறதி அதிகரிக்கும். கிரகிப்புத் திறன் கொஞ்சம் குறையலாம். பெண்கள், தங்களுடைய நெருங்கிய உறவினர்களுடன் வாக்குவாதம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஜூலை: 17, 18, 21, 22, ஆகஸ்டு: 2, 3, 6, 7, 14, 15.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    மனதில் நினைத்ததை மறுகணமே செய்ய நினைக்கும் ரிஷப ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு விரயாதிபதி செவ்வாய் இருப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். அதே நேரத்தில் வருமானத்திற்கு குறைவிருக்காது. பயணங்கள் அதிகமாகும். ஒரு சிலருக்கு இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சினைகள் குறையும். மனதை உறுத்திய சில பிரச்சினைகளுக்குத் தெளிவான முடிவெடுக்கும் நேரம் இது.

    மிதுன - புதன்

    ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். அது அவருக்கு சொந்த வீடாகும். தனாதிபதி வலிமையடையும் இந்த நேரம் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். வருமானப் பற்றாக்குறை அகல புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபார நுணுக்கங்களை அறிந்து கொண்டு அதை மேம்படுத்துவீர்கள். அரசாங்கம் மூலம் நடைபெறும் காரியங்கள் சாதகமாக இருக்கும். மேலும் மிதுனத்தில் உள்ள சூரியனோடு புதன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு தலைமைப் பொறுப்புகள் தானாக வந்துசேரும்.

    சிம்ம - செவ்வாய்

    ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகிறது. எனவே 'குரு மங்கல யோகம்' உருவாகிறது. இதன் விளைவாக தாய் வழி ஆதரவு கிடைக்கும். தக்க விதத்தில் உடல்நலம் சீராகும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. பத்திரப்பதிவில் இருந்த தடை அகலும். நீண்டதூரப் பயணங்கள் சாதகமாக அமையும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். எனவே இக்காலத்தில் நவக்கிரகப் பரிகாரங்களைச் செய்வதன் மூலம் நற்பலன்களை வரவழைத்துக் கொள்ள இயலும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆனி 18-ந் தேதி, சிம்மத்திற்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். இது ஒரு பொற்காலமாகும். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகிச்செல்வர். குருவின் பார்வை பதிந்த செவ்வாய், சனியைப் பார்ப்பதால் கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் வந்துசேரும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    கடக - புதன்

    ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சகாய ஸ்தானத்திற்கு வரும்பொழுது குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராக அமையும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவும், கடல் தாண்டிச் சென்று மேற்படிப்பு படிப்பது சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி கைகூடும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு மாதத்தின் பிற்பாதியில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இலாகா மாற்றம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 18, 19, 24, 25, ஜூலை:- 3, 6, 9, 10.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.5.23 முதல் 15.6.23 வரை

    விடாமுயற்சியே வெற்றிக்கு வழி என்று சொல்லும் ரிஷப ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். அதே நேரத்தில் விரய ஸ்தானத்தில் லாபாதிபதி குரு சஞ்சரிக்கிறார். எனவே விரயங்கள் மிக அதிகமாக இருக்கும் என்றாலும், அதற்கேற்ப வரவும் வந்து கொண்டேயிருக்கும். வருமானத்தை பொறுத்தவரை கவலைப்படத் தேவையில்லை. சுப காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறப் போகிறது. வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் சனி பலம் பெற்று இருப்பதால், எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் அதில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். சூரிய பலத்தால் பொதுவாழ்வில் புகழ் கூடும்.

    ராகு-கேது சஞ்சாரம்

    பின்னோக்கிச் செல்லும் கிரகங்களான ராகு பகவான், உங்கள் ராசிக்கு 12- ம் இடமான விரய ஸ்தானத்திலும், கேது பகவான் 6-ம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர். இதன் விளைவாகப் பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். குருவோடு இணைந்திருக்கும் ராகுவால் ஓரளவு நற்பலன்களை எதிர்பார்க்கலாம். அதே நேரம் கேது பகவான் ஆறில் இருப்பதால் மனச்சஞ்சலங்கள் அதிகரிக்கும். சில நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். விலை உயர்ந்த பொருட்கள், அடிக்கடி பழுதாகி வேதனையைத் தரும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைத்து மனச்சஞ்சலத்தை அதிகரிக்க வைக்கும். சங்கிலித் தொடர்போல கடன் சுமை அதிகரிக்கும்.

    கடக - சுக்ரன்

    வைகாசி 16-ந் தேதி கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். சகோதர ஸ்தானம் பலப்படுவதால் உடன்பிறப்புகள் வழியில் நன்மை கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் திருமணம் கைகூடும். வழக்குகள் சாதகமாக அமையும். வருமானப் பற்றாக்குறை அகலப் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பாதியில் நின்ற பல பணிகள், தற்போது துரிதமாக நடைபெறும். 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால், புதிய வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றிபெறும். கூடுதல் சம்பளத்துடன் வேலை கிடைக்கலாம். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

    ரிஷப - புதன்

    வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் வருகிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி, கலை சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். ஒரு சிலர் இழந்த பதவிகளை மீண்டும் பெறுவர். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு ஒரு சில நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்த்தபடி வந்துசேரும்.

    வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு போதிய மூலதனம் கிடைத்து தொழிலை விரிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். மேலிடத்து ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான நேரம் இது. பெண்களுக்கு மனதை அரித்த கவலை அகலும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 16, 17, 22, 23, 27, 28, ஜூன்: 8, 9, 12, 13.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    14.4.2023 முதல் 14.5.2023

    கொள்கைப் பிடிப்போடு செயல்படும் ரிஷப ராசி நேயர்களே!

    சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே பலம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு இணைந்திருக்கின்றனர். லாப ஸ்தானத்தில் குரு பலம்பெற்று இருக்கின்றார். எனவே இந்த மாதம் எதிர்பாராத விதத்தில் உதவிகள் கிடைத்து இதயம் மகிழப்போகிறீர்கள். தனவரவு திருப்தி தரும். புது முயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்புக் கிட்டும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் விதத்தில் சனி, செவ்வாய் சஞ்சாரமும் இருக்கின்றது. தொழில் ஸ்தானம் பலம் பெற்றாலே தொழில் வளம் சிறப்பாக இருக்குமல்லவா? அந்த அடிப்படையில் 10-ம் இடம் எனப்படும் தொழில் வளர்ச்சியைப் பற்றி குறிப்பிடும் இடத்தில், சனி பகவான் பலம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார். எதிர்கால நலன்கருதி புதிய திட்டங்களைத் தீட்டி அதில் வெற்றி காணப்போகின்றீர்கள்.

    சனியின் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், மாதத் தொடக்கத்தில் 10-ம் இடத்தில் பலம் பெற்றிருப்பதால் 'தர்ம கர்மாதிபதி யோகம்' செயல்படப் போகின்றது. இதனால் தொழில் வளர்ச்சிக்கு தொல்லை தந்தவர்கள் விலகுவர். இடையூறு செய்தவர்கள், இருந்த இடம் தெரியாமல் மாறிச்செல்வர். உத்தியோகத்தில் உள்ளவர்கள், விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு சுயதொழில் தொடங்கும் முயற்சியில் தீவிரம் காட்டுவர். கணிசமான தொகை கைகளில் புரளும். உறவினர்கள் உங்களுக்குப் பகையாக மாறினாலும், நண்பர்கள் உங்களுக்கு நல்லது நடக்க வழிவகுப்பர். களைப்பைத் தவிர்த்து உழைப்பில் ஈடுபட்டு, பிழைப்பின் மூலம் பெருந்தொகை சேரும் நேரம் இது. இருந்தாலும், பெற்றோர்களின் உடல்நலத்தில் பிரச்சினை உருவாகலாம், கவனம் தேவை.

    மேஷ - குரு

    சித்திரை 9-ந் தேதி, உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சியாகின்றார். விரய ஸ்தானத்திற்கு குரு வந்தாலும், உங்கள் ராசிக்கு அவர் அஷ்டம - லாபாதிபதி என்பதால், விரயத்திற்கேற்ற லாபம் வந்துகொண்டே இருக்கும். கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்துவீர்கள். 'அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்யலாமா?' என்று சிந்திப்பீர்கள். விரய ஸ்தான குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே ஆரோக்கியம் சீராக இருக்கும். வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். வீடு, இடம் வாங்குவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது போன்ற விஷயங்கள் கைகூடும். உத்தியோகத்தில் எடுத்த புது முயற்சி பலன் தரும். தேங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

    மிதுன - சுக்ரன்

    சித்திரை 20-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன் 2-ம் இடத்திற்கு செல்வது யோகம்தான். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். தங்கம், வெள்ளி மற்றும் வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் சம்பாதிக்கும் வாய்ப்பு உருவாகும்.

    இம்மாதம் லட்சுமிதேவி வழிபாடு இனிமை சேர்க்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 14, 15, 18, 19, 25, 26, 30, மே: 1, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு.

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.3.2023 முதல் 13.4.23 வரை

    பிறரை பேச்சால் வசப்படுத்தும் வல்லமை பெற்ற ரிஷப ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் விரய ஸ்தானத்தில் ராகுவோடு கூடி சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் விரயாதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். எனவே கடினமாக உழைத்தால் மட்டுமே தொழிலில் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும். எதிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படுவதன் மூலமே நிம்மதி கிடைக்கும். நிலையான வருமானத்தையும் கைப்பற்றிக் கொள்ள இயலும்.

    செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிவது அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிக்கு சப்தமாதிபதியாகவும், களத்திர ஸ்தானாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். தேவையற்ற வீண் பேச்சுக்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு குந்தகம் விளைவிக்கும். வாழ்க்கைத் துணை பணிபுரியும் இடத்தில் மாறுதல் கேட்டு விண்ணப்பித்திருந்தால் இனிமை தராத மாறுதல்கள் கிடைக்கும். உழைப்பின் பயனை அடைய முடியாமல் சில இடையூறுகள் ஏற்படலாம். அசையா சொத்துகள் வாங்கும் பொழுது பத்திரங்களை சரிபார்த்து வாங்குவது நல்லது. விரயங்களை சமாளிப்பது உங்களுக்கு கைவந்த கலையாகும்.

    மேஷ - புதன்

    பங்குனி 15-ந் தேதி, உங்கள் ராசிக்கு தனாதிபதியான புதன் விரய ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கிறார். எனவே விரயங்கள் கூடுதலாக இருக்கும். குடும்பச்சுமை அதிகரிக்கும். வரவு இல்லாமல் கூட சிலருக்கு செலவுகள் ஏற்படலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கி, சங்கிலித் தொடர் போல கடன்சுமை அதிகரிக்கலாம். எனவே இக்காலத்தில் எதையும் திட்டமிட்டுச் செய்வதே நல்லது. வீட்டுச் செலவுகளில் தாராளம் காட்ட வேண்டாம். கட்டுப்பாடான வாழ்க்கையே வெற்றிக்கு வித்திடும். பஞ்சமாதிபதியாகவும், புதன் விளங்குவதால் பிள்ளைகளால் விரயங்கள் அதிகரிக்கலாம். அவர்களின் கல்விச் செலவு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்காகவும் செலவிடும் சூழ்நிலை உண்டு.

    ரிஷப - சுக்ரன்

    பங்குனி 24-ந் தேதி உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால் உடல்நலம் சீராகும். உற்சாகம் குடிகொள்ளும். கடன்சுமை குறைந்து கவலைகள் பறந்தோடும். அந்தஸ்து உயரும். அடுத்தவர்கள் மதிக்கும் அளவுக்கு வாழ்க்கை அமையும். செய்தொழிலில் மேன்மைபெற்று சிறப்புகள் தேடிவரும். கைதவறிப் போனவைகள் கச்சிதமாய் திரும்பிவரும். உத்தியோக உயர்வால் உள்ளம் மகிழ்வீர்கள். நற்செய்தியை சுமந்துகொண்டு நாளும் நண்பர்கள் வருவர்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் நடத்துபவர்கள் போட்டிகளை முறியடித்து வெற்றி காண்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதக் கடைசியில் மகிழ்ச்சி தரும் தகவல்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு இல்லம் தேடி வரும். மாணவ-மாணவியர்களுக்கு விரும்பிய துறையில் மேற்படிப்பு அமையும். பெண்களுக்குப் பிள்ளைச் செல்வங்களால் பெருமை உண்டு. கணவன் - மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விருப்ப ஓய்வுபெறும் சிந்தனை மேலோங்கும்.

    இம்மாதம் அம்பிகை வழிபாடு அனைத்து யோகங் களையும் வழங்கும்.

    பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 18, 19, 22, 23, 29, 30, ஏப்ரல்: 2, 3.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    13.2.2023 முதல் 14.3.2023 வரை

    விடாமுயற்சியால் வெற்றியை எட்டிப்பிடிக்கும் ரிஷப ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே விரயாதிபதி செவ்வாய் வீற்றிருக்கிறார். எனவே வரவைக் காட்டிலும் செலவு கூடும். இருப்பினும் லாபாதிபதி குரு, லாப ஸ்தானத்தில் இருப்பதால் விரயம் வருவதற்கு முன்னதாகவே வரவு வந்துசேரும். சேமிக்க இயலாமல் போனாலும் செயல்பாடுகளில் வெற்றி உண்டு.

    மாதத் தொடக்கத்தில் 6-ல் கேதுவும், 12-ல் ராகுவும் இருப்பதால் பயணங்கள் அதி கரிக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராகச் சிலர் செயல்பட்டு உங்கள் முன்னேற்றத்தை தடுக்க நினைக் கலாம். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவதால் சகோதர ஸ்தானம், புத்திர ஸ்தானம், களத்திர ஸ்தானம் பலப்படுகிறது. எனவே உடன்பிறப்புகளின் உதவியோடு ஒரு நல்ல காரியம் இல்லத்தில் நடக்கலாம். கல்யாண முயற்சிகள் கைகூடும்.

    உச்ச சுக்ரன் சஞ்சாரம்

    மாசி 4-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் சுக்ரனுக்கு, அது உச்ச வீடாகும். அதோடு உங்கள் ராசிநாதனாகவும் விளங்கும் சுக்ரன், லாப ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் இது ஒரு பொற்காலமாக அமையும். எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் பல நடைபெறும். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    மாசி 9-ந் தேதி, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அரசு வேலைக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தால், அது பலன் தரும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் மேற்படிப்பு மற்றும் வேலை சம்பந்தமான வெளிநாடு முயற்சி கைகூடும்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாசி 25-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். தனாதிபதி நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. வருமானப் பற்றாக்குறை ஏற்படும். 'வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படுகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. கொள்கைப் பிடிப்போடு செயல்பட முடியாது. புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டினாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்வதில் சிக்கல்கள் உருவாகும்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    உங்கள் ராசிநாதன் சுக்ரன், மாசி 29-ந் தேதி விரய ஸ்தானத்திற்குச் செல்கிறார். இக்காலத்தில் எதிலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக இடம், பூமி விற்பனை நடைபெறும். இனிய உறவுகள் பகையாகலாம். கடுமையாக முயற்சித்தாலும், காரியம் கடைசி நேரத்தில்தான் கைகூடும். ஆரோக்கியத் தொல்லை உண்டு. ஆதாயம் தராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு வேலை தேடிச் சென்றவர்களுக்கு பிரச்சினை ஏற்படலாம்.

    மிதுன - செவ்வாய் சஞ்சாரம்

    மார்ச் 30-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் மிகமிக கவனம் தேவை. மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்ப்பதால் வாக்குவாதம் உண்டாகும். தேவையற்ற வழியில் வருமானம் செலவாகும். குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தேக்கநிலை வரலாம். தெளிந்த மனத்தோடு செயல்பட இயலாது. இந்த காலகட்டத்தில் யோக பலம் பெற்ற நாளில் அங்காரக வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

    இம்மாதம் பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 19, 20, 23, 24, மார்ச்: 2, 3, 6, 7.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    ரிஷபம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    16.12.22 முதல் 14.1.23 வரை

    தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றும் ஆற்றலைப் பெற்ற ரிஷப ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், சூரியன் மற்றும் புதனுடன் இணைந்து அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே சுபச்செலவுகள் அதிகரிக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.

    புதன் வக்ர இயக்கம்

    மார்கழி 3-ந் தேதி, தனுசு ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். வாக்கு, தனம், குடும்பம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் புத்திர ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், வக்ரம் பெற்று இப்படி வலிமை இழப்பது அவ்வளவு நல்லதல்ல. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்ளமாட்டார்கள். பிள்ளைகளால் பிரச்சினைகள் உருவாகி மறையும். குழந்தைகளை நெறிப்படுத்தி வளர்ப்பதோடு உங்கள் மேற்பார்வையிலும் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் இடத்தில் பிரச்சினை மேல் பிரச்சினை அதிகரிக்கும்.

    மகர - சுக்ரன் சஞ்சாரம்

    மார்கழி 15-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கும் 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும். எதிரிகள் விலகுவர். லாபம் திருப்தி தரும். புதியவர்களின் தொடர்பால் பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொள்வீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிநிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும்.

    புதன் வக்ர நிவர்த்தி

    மார்கழி 24-ந் தேதி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால் நிறைய மாற்றங்களை சந்திக்கப் போகிறீர்கள். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். நிறைந்த மனதோடு நிம்மதி கிடைக்கும் நேரம் இது. மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    மார்கழி 29-ந் தேதி ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான அவர், வக்ர நிவர்த்தியாவதால் இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். சுப காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து வருமானம் கூடும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து அதிக சம்பளத்துடன் அழைப்புகள் வரலாம்.

    உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கும் அதிபதியாக செவ்வாய் விளங்குவதால் விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். என்றாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. உடன்பிறப்புகளால் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பணிநிரந்தரமாகும். பயணங்களால் பலன் கிடைக்கும் நேரம் இது.

    இம்மாதம் பிரதோஷ காலத்தில் சிவன், உமையவள் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 16, 17, 26, 27, 30, 31, ஜனவரி: 11, 12. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    ரிஷபம்

    இந்த வார ராசிப்பலன்

    17.11.21 முதல் 15.12.21 வரை

    நாகரிகமான முறையில் பேசி எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ரிஷப ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். 6-க்கு அதிபதியாகவும் விளங்கும் சுக்ரன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது, விபரீத ராஜயோக அடிப்படையில் நல்ல வாய்ப்புகள் பலவும் இல்லம் தேடி வரலாம்.

    செவ்வாய்-சனி பார்வைக் காலம்

    மாதத் தொடக்கத்தில் இருந்து கார்த்திகை 20-ந் தேதி வரை செவ்வாய்-சனியின் பார்வை இருக்கின்றது. மகரத்திலுள்ள சனி துலாத்தில் உள்ள செவ்வாயைப் பார்க்கின்றார். செவ்வாய் மகரத்திலுள்ள சனியைப் பார்க்கின்றார். யோககாரகன் சனியை விரயாதிபதி செவ்வாய் பார்ப்பதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். செவ்வாயோடு புதனும் இருப்பதால் உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவதுடன், பொருளுதவியும் செய்வீர்கள்.

    விருச்சிக புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை முதல் நாளே விருச்சிக ராசிக்கு புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் வரும்பொழுது குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலைவாய்ப்பு கிடைக்கலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    தனுசு புதனின் சஞ்சாரம்

    கார்த்திகை 18-ந் தேதி தனுசு ராசிக்குப் புதன் செல்கின்றார். அங்குள்ள சுக்ரனோடு சேர்ந்து புத-சுக்ர யோகத்தை உருவாக்குகின்றார். இதன் விளைவாக ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரலாம். வீடு மாற்றங்கள் அல்லது வீடு வாங்கும் முயற்சி பற்றிச் சிந்திப்பீர்கள். வைத்திருக்கும் பழைய வாகனத்தைக் கொடுத்து விட்டுப் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள் வந்து சேரலாம்.

    மகர சுக்ரனின் சஞ்சாரம்

    கார்த்திகை 19-ந் தேதி மகர ராசிக்குச் சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும் நேரமாகும். பயணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் உங்கள் பணிக்கு உறுதுணைபுரிவர். உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.

    விருச்சிக செவ்வாயின் சஞ்சாரம்

    கார்த்திகை 20-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் சகோதர ஒற்றுமை பலப்படும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். இடம், பூமி சேர்க்கையும் ஏற்படும். உற்சாகத்துடன் செயல்படும் விதத்தில் உடல்நலனும் இடம் கொடுக்கும். துர்க்கையை வழிபடுவதன் மூலம் துயரங்களிலிருந்து விடுபடலாம்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    நவம்பர்: 22, 23, 27, 28, டிசம்பர்: 8, 9, 12, 13,

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

    ×