என் மலர்
கன்னி
தமிழ் புத்தாண்டு ராசிபலன்
வளமான வருடம்! இளமைப் பொலிவு நிறைந்த கன்னி ராசி யினருக்கு தமிழ் புத்தாண்டான குரோதி வருடம் வளமான வருடமாக அமைய நல்வாழ்த்துக்கள்.
பாக்கிய குருவின் பலன்கள்
மே 1, 2024 முதல் கன்னி ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9ம்மிடத்திற்கு குருபகவான் செல்கிறார். தகப்பன், தர்மம், பாக்கியம், புண்ணியம் உயர் கல்வி, பித்ருக்கள் பற்றிக் கூறும் பாக்கிய ஸ்தானத்திற்கு குருபகவான் செல்வது வளர்ச்சியைக் கொடுக்கக் கூடிய அமைப்பாகும்.
அஷ்டம குருவால் ஏற்பட்ட பல்வேறு மனச் சங்கடங்களையும் இன்னல்களும் விலகக்கூடிய காலம் என்றால் அது மிகைப்படுத்த லாகாது. பாக்கிய ஸ்தானத்தில் குருவின் 5ம் பார்வை ராசியில் பதிவதால் ஆன்ம பலம் பெருகும். தேவையில்லாத எண்ணங்கள் மன சஞ்சலம் அமைதியற்ற நிலை விலகும்.
எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவீர்கள். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். குருவின் 7ம் பார்வை 3ம்மிடமான முயற்சி சகாய ஸ்தானத்தில் பதிகிறது. வாழ்க்கையில் மாற்றம் தரக் கூடிய நல்ல இடப்பெயர்ச்சி உண்டாகும்.
அண்டை அயலாருடன் ஏற்பட்ட சர்ச்சைகள் சுமூகமாகும். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட சர்ச்சைகள் சீராகும். பாகப்பிரிவினை சுமுகமாகும். கை மறதியாக வைத்த ஆவணங்கள் மற்றும் தொலைந்த பொருட்கள் கிடைக்கும்.
குருவின் 9ம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிவதால் தொழில் முன்னேற்றம், நல்ல உத்தியோகம், வீடு, வாகனம், திருமணம், புத்திரப்பேறு, பொருளாதார முன்னேற்றம் என உங்கள் வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். போட்டி பொறாமை குறையும். கடன் பிரச்சினைகள் தீரும். அரசியல் வெற்றி, அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பிறருக்கு கட்டளையிடும் பெரிய பதவிகள் தேடி வரும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு மிக சிறப்பான ஆண்டாக அமைய வாய்ப்புள்ளது. உங்களுக்கான பெயர், புகழ், பதவி கிடைக்கும். செல்வாக்கு உயரும். பங்குச் சந்தை ஆர்வம் அதிகரிக்கும். புதியதாக காதல் பூக்கும். குழந்தைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். குலதெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.
ஆறாமிட சனியின் பொதுபலன்கள்
இந்த குரோதி வருடம் முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 6ம்மிடமான ருண,ரோக, சத்ரு ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.
பொதுவாக அசுப கிரகங்கள் உப ஜெய ஸ்தானமான 6ம்மிடத்திற்கு வரும் போது 6ம்மிடம் தொடர்பான பாதிப்புகள் விலகும். இப்பொழுது கோட்சாரத்தில் 6ம் அதிபதி சனி ஆட்சி பலம் பெறுவதால் விசேஷமான நற்பலன்களை நடத்தி தரும். 6ல் நிற்கும் சனி பகவான் தனது 3ம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தை பார்க்கிறார்.
ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் விலகும். பய உணர்வால் தள்ளி வைத்த அறுவை சிகிச்சையை தற்போது செய்தே ஆக வேண்டிய சூழல் உண்டாகும். அறுவை சிகிச்சையால் படுக்கையில் கிடந்தவர்களின் உடல் நிலை தேறும். உங்களை துரத்திய அவமானம் மற்றும் வம்பு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். வழக்கின் தீர்ப்புகள் சாதகமாகும்.சிலருக்கு பணி நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். தனது 7ம் பார்வையால் அயன. சயன, விரய ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.
வெளியில் சொல்ல முடியாமல் தவித்த பிரச்சனைகளுக்கான தீர்வு கடவுள் அருளால் கிடைக்கும்.வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாகும். பிள்ளைகளுக்கு திருமணம், வளைகாப்பு, நல்ல உத்தியோகம், உயர் கல்வி போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். அதனால் சுப விரயங்கள் கூடும். சுப நிகழ்வுகளுக்கு தேவையான பணம் எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும். சொந்த வீட்டுக் கனவு நினைவாகும்.
பூர்வீகத்திற்கு சென்று வரும் வாய்ப்புகள் உள்ளது. சமூக சேவை புரிபவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உண்ண, உறங்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய கற்பனை பயம், சிந்தனைகள் இருந்து கொண்டே இருக்கும்.
சனியின் 10ம் பார்வை 3ம்மிடமான தைரிய வீரிய ஸ்தானத்தில் பதிகிறது. பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்கள் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்கவும். காழ்புணர்சியால், தவறான புரிதலால் பிரிந்த உடன் பிறப்பு உங்களை புரிந்து கொள்வார். பழைய நண்பர்களின் சந்திப்பு உற்சாகத்தை அதிகரிக்கும்.
ஜென்ம கேது / சப்தம ராகு:
ஜென்ம ராசியில் கேது 7ல் ராகு. கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம். பொறுமை மற்றும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய நேரம்.
மனதில் பெரிய திட்டங்கள் தோன்றும் புதிய முயற்சிகளை ஒரு முறைக்குப் பல முறை யோசித்து செய்ய வேண்டும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களிடம் கவனத்துடன் செயல்பட வேண்டும். இயன்ற வரை புதிய கூட்டுத் தொழில் துவங்குவதை தவிர்க்கவும். குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை அடைய முயற்சிப்பீர்கள். விட்டதை பிடிக்கிறேன் என அதிர்ஷ்டத்தை துரத்துவார்கள். கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள், விவாகரத்து பெற்றவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். இல்லற சந்நியாசியாக பிரிந்து வாழும் தம்பதிகளுக்கு இல்வாழ்க்கையில் ஈடுபாடு அதிகரிக்கும்.
கல்யாண வயதில் பிள்ளைகள் வைத்திருப்பவர்களுக்கு நல்ல சம்பந்தத்தை நல்ல சம்பந்திகளை அமைத்துக் கொடுப்பார்.
சம்பந்திகளுடன் ஏற்பட்ட மனக் கசப்பால் பெற்ற பிள்ளைகளை பிரித்து வைத்தவர்கள் சம்பந்திகளுடன் இணக்கமாகி தம்பதிகளை சேர்த்து வைப்பார்கள். சிலர் வாழ்க்கைத் துணை அல்லது நண்பர்கள் அல்லது மைத்துனருடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.
ஏற்கனவே கூட்டுத் தொழிலில் விரிசலை சந்தித்த கூட்டாளிகள் தங்கள் தவறுகளை உணர்ந்து தெளிந்து மீண்டும் தொழிலை நல்ல முறையில் நடத்துவார்கள். சிலருக்கு ஆத்மார்த்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சிலருக்கு உள்ளுணர்வை புரிந்து செயல்படும் எதிர்பாலின நட்பு கிடைக்கும். வாடிக்கையாளர்கள், நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும். சிலர் மதம் மாறி வேறு மத வழிபாடு செய்வார்கள்.
உத்திரம் 2 3, 4:
சூரியனின் உத்திரம் நட்சத்திரம் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டு எதிர் நீச்சல் போட்டு பெற்றி பெறும் சுப ஆண்டாகும். உங்களின் கற்பனை, கனவுகள் நினைவாகும். தொழில், உத்தியோகத்தில் நிலவிய நெருக்கடிகள் விலகி மேன்மைகள் உண்டாகும். வாடகைக்கு போகாமல் இருந்த அசையாச் சொத்துக்களுக்கு புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு தடைபட்ட குத்தகைப் பணம் கிடைக்கும்.
சிலர் அசையாச் சொத்தை அடமானம் வைத்து தொழிலுக்கு முதல் திரட்டலாம். அரசியல் பிரமுகர்களுக்கு தலைமையிட ஆதரவு உண்டு. இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். உடல் நலனை பேணுவது அவசியம்.திருமண முயற்சியில் ஏற்றமான பலன் உண்டு.
வீடுகட்டும் பணி துரிதமடையும். கணவன் மனைவி விசயத்தில் சம்பந்தமில்லாத நபர்களின் குறுக்கீடு வரலாம். வரவும் செலவும் சரியாக சரியாக இருக்கும். இழுபறியில் நின்ற தந்தைவழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதுடன் யாரையும் நம்பக்கூடாது. அங்காளம்மன் வழிபாடு நிம்மதியை அதிகரிக்கும்.
அஸ்தம்:
சந்திரனின் அஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டில் அமோகமான மாற்றங்கள் ஏற்படும். புத்தி சாதுர்யத்தால் சில காரியங்களை சாதிப்பீர்கள். தைரியம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். முதலீட்டாளர்களுக்கு வெளியூர் அல்லது வெளிமாநில வேலை தொடர்புகளால் ஆதாயம் உண்டு. பிறர் புகழ வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும்.
சிலர் தொழில், வேலைக்காக குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு வெளியூர் என வாழ நேரலாம். முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் நிதானமும், நம்பிக்கையும் உங்களை காப்பாற்றும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
மனைவி, குழந்தைகளின் அனுசரணை நிம்மதி தரும். அதிர்ஷ்டத்தின் மேல் நாட்டம் அதிகரிக்கும். தாராள வரவு செலவால் மனம் மகிழும்.உபரி வருமானத்தால் பொருளாதார நிலை உயரும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். குல தெய்வ அனுகிரகம்கிடைக்கும்.
விவாகரத்து வழக்குகளை ஒத்திப் போடவும். சொத்துகள் சேரும். நீண்ட நாள் மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு நோயின் தாக்கம் படிப்படியாக குறையும். மறு திருமண முயற்சி கைகூடும். சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபட நலம் உண்டாகும்.
சித்திரை 1, 2:
செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற சித்திரை 1, 2ம் பாதம் கன்னி ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருட புத்தாண்டு உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் வருடமாகும். புகழ், அந்தஸ்து, கவுரவம் அதிகரிக்கும்.நீங்கள் எதிர்கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் உறுதி. வராக்கடன் வசூலாகும். சேமிப்பு உயரும். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்.
குடும்ப உறவுகளின் அனுசரணையும் ஆதரவும் மகிழ்வைத் தரும். குடும்பத்திற்குத் தேவையான உயர்ரக பொருட்களை வாங்குவீர்கள். அரசின் சலுகைகளில் முன்னுரிமை உண்டு.குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு மன நிறைவைத் தரும். இழந்த பதவி தேடி வரும். பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். காணாமல் போன, கைமறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும்.
சிலருக்கு ஆலயத் திருப்பணிக்கான வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். கோபத்தை குறைத்து ஆரோக்கியத்தை கடைபிடிக்க வேண்டும். வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என சுய ஜாதக தசா புக்திக்கு ஏற்ற மாற்றம் உண்டாகும். பிரதோஷத்தன்று நந்தியையும் சிவனையும் வழிபடவும்.
திருமணம்:
ஜென்ம ராசியில் கேது 7ல் ராகு. கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம். திருமண வயதில் இருப்பவர்களுக்கு காலதாமதத் திருமணம் நல்லது. சுய ஜாதக ரீதியான தசாபுத்தி ரீதியான திருமணம் வாழ்வை வளமாக்கும். சஷ்டி திதியில் வள்ளி தெய்வானை சமேத முருகனை வழிபடவும்.
பரிகாரம்:
கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வதற்கும் நீங்கள் செல்ல வேண்டியது, சங்கரன் கோவில் சங்கரநாராயணர் ஆலயம். இங்கு அருளும் கோமதியம்மன் சந்நிதியின் புற்று மண் தீரா நோய் தீர்க்கும் மாமருந்து. கோமதியம்மனை வழிபட திருமணத் தடை நீங்கும். பிரிந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள். கோமதியம்மன் முன் உள்ள ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்து ஆத்மார்த்த வழிபாடு செய்ய நினைத்த செயல் நினைத்தபடியே நடக்கும்.