search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
    • இந்த வீடியோவிற்கு எதிராக பலர் குரல் கொடுத்தனர்.

    டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களில் ஒரு நபரின் உருவத்தில், வேறொரு நபரின் முகத்தை துல்லியமாக பதியச் செய்து போலியாக சித்தரிப்பதாகும்.


    சமீபத்தில் இந்த தொழில்நுட்பம் மூலமாக நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோல், ஆலியா பட் என பலரின் புகைப்படங்கள் ஆபாசமான முறையில் மார்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்த வீடியோக்கள் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பலர் இந்த டீப்ஃபேக் (Deepfake) வீடியோவிற்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்.

    இதையடுத்து இது போன்ற போலி வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.



    இந்நிலையில், பல குழப்பங்களை உருவாக்கிய டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் தற்போது எம்.ஜி.ஆருக்கு உயிர் கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் எம்.ஜி.ஆர் 'பணம் படைத்தவன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்போன போக்கிலே' பாடலை பாடுகிறார். இந்த வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள் பல குழப்பங்களை செய்த டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் தற்போது தான் அருமையான ஒரு செயலை செய்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • ஷாருக்கானின் மகள் சுஹானா கான்.
    • இவர் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

    பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. நடிகர் ஷாருக்கானுக்கு ஆர்யன் கான் என்ற மகனும் சுஹானா கான் என்ற மகளும் உள்ளனர்.


    இதில் ஆர்யன் கான் விரைவில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். இவரது மகள் சுஹானா கான் ஜோயா அக்தர் இயக்கியிருக்கும் 'ஆர்ச்சீஸ்' படம் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படம் சுற்று சூழலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நடிகை சுஹானா கானிடம் நடிகை ஆலியாபட் தேசிய விருது வழங்கும் விழாவில் தனது திருமண உடையை அணிந்திருந்தது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு சுஹானா, "புதிய உடைகளை தயாரிக்கும் பொழுது எவ்வளவு கழிவுகள் வெளியாகுகிறது என்பதை நாம் உணர்வதில்லை. ஆலியாவின் முன்னெடுப்பு சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் விதமாக இருந்தது.


    ஆலியாவே ஏற்கனவே அணிந்த உடையை உடுத்துகிறார் என்றால் நாமும் பார்ட்டி அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது ஆலியா பட்டை பின்பற்றி ஏற்கனவே அணிந்த உடையை அணியலாம்." என்று ஆலியாவை பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார்.

    நடிகை ஆலியா பட் 'கங்குபாய் கத்தியவாடி' திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமீர்- ஞானவேல் ராஜா பிரச்சனை பேசுப்பொருளாகியுள்ளது.
    • அமீருக்கு ஆதரவாக பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையைச் சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து இயக்குனர் ஞானவேல் ராஜா, அமீரிடம் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.


    இந்நிலையில், இந்த அறிக்கையை விமர்சித்து இயக்குனர் சசிகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன?

    'நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்...' என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள்' என்ன?


    சசிகுமார் அறிக்கை

    திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்னமாதிரியான வருத்தம்?

    இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன?

    பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.


    • சல்மான்கானுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.
    • திடீரென சல்மான் கானுக்கு இணைய தளத்தில் கொலை மிரட்டல் வந்தது.

    இந்தி திரை உலகில் முன்னணி நடிகராக இருபவர் சல்மான்கான். திரைத்துறையில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் காரணமாக ஏற்கனவே அவருக்கு போலீஸ், பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.


    இந்த நிலையில் திடீரென சல்மான்கானுக்கு இணைய தளத்தில் கொலை மிரட்டல் வந்தது. அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தாவூத் உங்களை காப்பாற்றுவார் என்ற மாயையில் இருக்கிகாதீர்கள். உங்களை யாராலும் காப்பற்ற முடியாது. சித்து மூஸ் வாலாவின் மரணத்திற்கு உங்கள் பதில் கவனிக்கப் படாமல் இல்லை. அவர் எப்படிப்பட்டவர் என்பதும் அவருக்கு இருந்த குற்ற சம்பவங்கள் பற்றியும் நாங்கள் அறிவோம். நீங்கள் விரும்பும் எந்த நாட்டிற்கும் தப்பி செல்லுங்கள். ஆனால் நினைவில் கொள்ளுங்கள். மரணத்திற்கு விசா தேவையில்லை என்று பதிவிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து சல்மான்கானுக்கு வந்த மிரட்டல் பற்றி மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கணக்கில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்து உள்ளது. லாரன்ஸ் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தற்போது சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மிரட்டலையொட்டி மும்பை போலீசார் சல்மான்கானின் பாதுகாப்பு அதிகரித்து இருக்கின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமீர்- ஞானவேல் ராஜா பிரச்சனை சினிமா துறையில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • அமீருக்கு ஆதரவாக பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடிப்பில் வெளியான படம் பருத்தி வீரன். இந்த பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் மீது சமீபத்தில் சில குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியிருந்தார்.

    அமீர் மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகள் தமிழ் திரைத்துறையில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஞானவேல் ராஜாவுக்கு இயக்குநர்கள் சமுத்திரகனி, சசிக்குமார், கரு.பழனியப்பன், பொன் வண்ணன் ஆகியோர் கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தனர்.



    பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். சில தினங்களாக இந்த பிரச்சனை நீண்டு கொண்டே இருந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அமீருக்கு வருத்தம் தெரிவித்து இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

     "பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே "அமீர் அண்ணா" என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன்.  



     ஞானவேல் அறிக்கை

    அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி!" என்று கூறியுள்ளார். இந்த அறிக்கை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
    • இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 'இறைவன்', 'சைரன்' போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.



    இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி, 'வணக்கம் சென்னை', 'காளி', 'பேப்பர் ராக்கெட்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வினய், யோகிபாபு, லால், ஜான் கெக்கன், லஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கவாமிக் யூ ஆரி ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


    காதலிக்க நேரமில்லை போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'காதலிக்க நேரமில்லை' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    • இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பலர் கருத்து.
    • களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது.

    இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    அந்த வரிசையில் இயக்குனர் பாரதிராஜா அமீருக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திரு.ஞானவேல் அவர்களே, உங்களுடைய காணொலியை பார்க்க நேரிட்டது. பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதர பிரச்சனை சார்ந்தது மட்டுமே.. ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் மிகச்சிறந்த படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கதக்கதாகும்."

    "உங்களை திரைத்துறையில் அடையாளப்படுத்தி, மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவாக்கியதில் திரு.அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிடவேண்டாம். பருத்திவீரன் திரைப்படத்திற்கு முன்பு அமீர் இரண்டுபடம் இயக்கி,அதில் ஒன்றைத் தயாரித்தும் இருக்கிறார்."

    "அவர் உங்கள் படத்தில் தான் வேலை கற்றுக் கொண்டார் என்பதை எக்காளமாக கூறி வன்மமாக சிரிப்பது என்போன்ற படைப்பாளிகளையும் அவமதிக்கும் செயலாகும்..! ஏனென்றால் உண்மையான படைப்பாளிகள் சாகும் அவரை கற்றுக்கொண்டேதான் இருப்பார்கள்..! நான் இப்போதும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன்..! மிகச் சிறந்த படைப்பாளியின் படைப்புகளையும்,அவர் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்து இருக்கிறார்.



    • அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் பேசுப்பொருளாகியுள்ளது.
    • அமீருக்கு ஆதரவாக பலர் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    'பருத்தி வீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இயக்குனர் கரு. பழனியப்பன் அமீருக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பருத்திவீரன் படம் பற்றியும் அமீர் பற்றியும் திரு ஞானவேல் பேசிய பிறகு அந்தப் படம் தொடர்புடைய சசிகுமார், தயாரிப்பாளர் கணேஷ்ரகு, சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சுதா கொங்குரா என ஒவ்வொருவராக அமீர் பக்கம் வந்து நிற்கிறார்கள்..


    சில நாட்களில் மற்றவர்களும் அமீர் பக்கம் நிற்பார்கள்... நிற்க. இந்த அறிக்கை பருத்தி வீரன் படம் பற்றி அல்ல. ஞானவேலின் பொய்க் குற்றச்சாட்டு பற்றி.! பொன்வண்ணன் மொழியில் சொல்வதானால் ஞானவேலின் வக்கிரமான உடல் மொழி பற்றி.! எகத்தாளமாய் எப்படி ஒருவரால் இத்தனை பொய் சொல்ல முடிகிறது? அமீரை திருடன் என்றும் பொய் கணக்கு எழுதுபவர் என்றும் சொல்லுகிறாரே. நான் சொல்லுகிறேன்.

    ஆறு ஆண்டு காலம் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் செயலாளராகவும், தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவராகவும், தயாரிப்பாளர்- தொழிலாளர் இடையே சுமூகம் ஏற்பட உருவாக்கப்பட்ட ஊதியக்குழுவின் தலைமையிலும் பணியாற்றிய அமீரை பக்கத்தில் இருந்து பார்த்த நான் சொல்லுகிறேன். இத்தனை ஆண்டுகளில் ஒரு வேளை உணவு கூட இந்த சங்கங்களின் பணத்தில் அமீர் உண்டதில்லை. அன்று உடனிருந்த நானும் ஜனநாதனுமே சாட்சி.



    இந்நாள் முன்னாள் சங்க நிர்வாகிகளைக் கேட்டாலும் இதையே சொல்வார்கள். பருத்திவீரன் தயாரிப்பில் நூறு முரண்பாடு இருக்கலாம். ஆனால் பொதுவெளியில் ஒரு இயக்குனரை திருடன் என்றும் ஒன்றும் தெரியாதவன் என்றும் என் காசில் தொழில் பழகியவன் என்றும் character assassination செய்வது அயோக்கியத்தனம். ஞானவேலின் எள்ளல் எகத்தாள திமிர் பேட்டியில், நானும் கார்த்தியும் பருத்தி வீரனுக்கு பிறகு நிறைய படம் எடுத்து விட்டோம் 25 படங்களை கடந்து விட்டோம் ஆனால் அமீர் ஓடாத குதிரை தோற்றுப் போனவர் என்கிறார்.

    அமீர் உங்களிடம் பணத்தில் தோற்றுப் போய் இருக்கலாம். ஆனால் உங்களுடைய படம் என்று நீங்கள் சொல்லும் பருத்தி வீரனை காலமும் உடன் களத்தில் பணியாற்றியவர்களும் ரசிகர்களும் அமீரின் பருத்தி வீரன் அமீரின் பருத்திவீரன் என்று சொல்லச் சொல்ல அவர் ஜெயித்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள். பருத்திவீரன் படத்தின் உயரத்தைத் தொட ஒவ்வொரு படமாக எடுத்து எடுத்து ஞானவேலும் அவரைச் சார்ந்தவர்களும் இன்று வரை தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். காலம் அப்படித்தான் கணக்கில் வைத்துக் கொள்ளும்.


    அமீர் அறிக்கை

    இப்படி பேச ஞானவேலுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? என்று கேட்டிருந்தார் சமுத்திரக்கனி. இந்தக்கேள்வி எழும்போதே ஞானவேலின் பின்னால் திரு.சிவக்குமாரும் அவர் பிள்ளைகளும் இருப்பார்களோ என்று சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தன் மகனுக்கு உலகத் தரத்தில் மாபெரும் வெற்றி படத்தைக் கொடுத்து திரை உலகில் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த இயக்குனர் அமீருக்கு, திரு சிவக்குமாரும் அவரைச் சார்ந்தவர்களும் திருப்பிக் கொடுத்தது என்ன? 18 ஆண்டுகால மன உளைச்சலும் திருட்டு பட்டமுமா??

    நூறு குறள்கள் படித்த திரு.சிவக்குமார் "அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை" என்ற குறளையும் படித்து இருப்பார். வள்ளுவர் வாக்கு பொய்க்காது என்று அறிந்த அவர், ஞானவேலை பொதுவெளியில் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும். திரு.சிவக்குமார் சொல்லுவார் என்று நம்புகிறேன்.!" என குறிப்பிட்டுள்ளார்.


    • விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'வள்ளி மயில்'.
    • இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார்.

    வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என கவனிக்க வைத்த பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இதைத்தொடர்ந்து, இவர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'வள்ளி மயில்'. இப்படத்தில் பிரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


    இந்த படத்தினை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வள்ளி திருமணத்தை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.


    இந்நிலையில், இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'எதிர்க்கிறவங்கள எப்போதும் சிஸ்டமும் அதிகாரமும் அழிக்கத்தான் நினைக்கும்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



    • டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார்.
    • படத்தில் வித்யா பாலன் நடிப்பு பல்வேறு விமர்சனங்களை பெற்றது.

    சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தி டர்ட்டி பிக்சர். இந்த படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார். அவருடன் இம்ரான் ஹாஸ்மி, நசுருதீன்ஷா உள்பட பலர் நடித்திருந்தனர். இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் படம் வெளியானது. படத்தில் வித்யா பாலன் நடிப்பு பல்வேறு விமர்சனங்களை பெற்றது.


    இந்நிலையில் கோவாவில் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. விழாவில் நடிகை வித்யா பாலன் கலந்து கொண்டு அங்கு நடைபெற்ற நேர்காணலில் கலந்துரையாடினார். அதில், தி டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடிப்பதற்கு நான் ஆர்வமுடன் இருந்தேன். அந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்குவார்கள் என நான் நம்பவில்லை.


    மக்கள் என்னால் அந்த கதாபாத்திரத்தை செய்ய முடியும் என்று நினைத்து பார்க்கவில்லை. படத்தில் நான் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது என்னிடம் பெரும்பாலானோர் இது நிச்சயமாக உங்கள் வாழ்க்கையை அழிக்கும் என்றனர். சிலர் எனக்கு பைத்தியம் என்று நினைத்தனர். படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்த போது நான் மகிழ்ச்சி அடைந்தேன். நான் வித்தியாசமான முறையில் முயற்சி செய்து நடிப்பதால் தான் நான் இன்றும் நடிகையாக இருக்கிறேன் என்று கூறினார்.

    • நடிகை சமந்தா பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் மயோசிட்டிஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்து வருகிறார்.

    பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.


    சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து சமந்தா தற்போது மயோசிட்டிஸ் நோய்க்காக மீண்டும் சிகிச்சை எடுத்து வருகிறார்.


    சமந்தா நடிப்பது மட்டுமல்லாமல் பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல தரப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், சமந்தா ஆதரவற்ற இரண்டு குழந்தைகளை இந்த அமைப்பின் மூலம்  தத்தெடுத்து வளர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2021-ல் அவரைப் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக விஷால் வீடியோ வெளியிட்டிருந்தார்.
    • இந்த புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து 'மார்க் ஆண்டனி' திரைப்படம் இந்தியில் ரீமேக் செயப்பட்டது.


    இதில், இந்தி வெர்ஷனை திரையிடுவதற்கு ரூ.3 லட்சமும், சான்றிதழுக்கு ரூ.3.5 லட்சம் என்று மொத்தம் ரூ.6.5 லட்சம் மும்பை சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுத்ததாக விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், மேனகா என்ற இடைத்தரகரிடம் மொத்தம் ரூ 6.5 லட்சம் பணத்தை இரு தவணைகளாக கொடுத்தாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதனுடன் பணம் செலுத்திய வங்கி கணக்கு ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார்.

    இந்த புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து. மும்பையில் 4 இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளை கைப்பற்றினர்.



    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஷாலை சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி தனது மேலாளர் ஹரிகிருஷ்ணனுடன் நடிகர் விஷால் சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.

    ×