என் மலர்
சினிமா செய்திகள்
- இசையமைப்பாளர் டி. இமான் பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
- இமான் அவ்வப்போது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்தும் வருகிறார்.
விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். பல படங்களில் பிசியாக இருக்கும் டி.இமான் அவ்வப்போது கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்தும் வருகிறார்.
சமீபத்தில் சிறுமி தர்ஷினி அப்பா குறித்து பாடும் பாடல் சமூக வலைதளத்தில் வைரலானது. இதை பார்த்த டி.இமான் சிறுமிக்கு உதவி செய்யும் நோக்கில் அவரது பெயர் மற்றும் தொடர்பு விவரம் கேட்டு கமெண்ட் செய்திருந்தார்.
டி.இமான்- தர்ஷினி
இந்நிலையில், டி. இமான், சிறுமி தர்ஷினியின் தந்தையை தொடர்பு கொண்டு சிறுமியின் குரல் வளத்தை பாராட்டியதோடு சினிமாவில் பாடல் பாடும் வாய்ப்பு தருவதாகவும் கூறியுள்ளார். இந்த செய்தி அறிந்த ரசிகர்கள் இமானை சமூக வலைதளத்தில் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
- இயக்குனர் ஷங்கர் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' பாடல் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பாடல் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருவதாகவும் இங்கு ராம் சரண் மற்றும் எஸ்.ஜே. சூர்யா காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
- இயக்குனர் வெற்றிமாறன் ‘விடுதலை-2’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- தொடர்ந்து சூர்யாவின் 'வாடிவாசல்' பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் தற்போது சூரியின் விடுதலை-2 படத்தை இயக்கி வருகிறார். தொடர்ந்து சூர்யாவின் 'வாடிவாசல்' பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் 'வாடிவாசல்' திரைப்படத்தில் இயக்குனர் அமீர் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன், அமீரை நேரில் சந்தித்துள்ளார். அதாவது, இயக்குனர் வெற்றிமாறன் அமீரை நேரில் சந்தித்து 'வாடிவாசல்' திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் குறித்து கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமீருக்கு ஏற்றபடி கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இவர்கள் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி’.
- இப்படம் தமிழில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
கடந்த 2004-ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயரம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் 'எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி'. இந்த திரைப்படத்தில் நதியா, அசின், பிரகாஷ் ராஜ், விவேக் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்த இப்படம் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியான 'அம்மா நன்னா ஒ தமிழா அம்மாயி' என்ற படத்தினுடைய ரீமேக் என்றாலும் தமிழில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று பல நாட்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்தது.
இந்நிலையில், 'எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இரண்டாம் பாகத்திற்கான கதை முழுவதும் எழுதி முடித்துவிட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த பாகத்தில் நடிகை நதியா காதாபாத்திரம் இடம் பெறாது என்றும் மோகன் ராஜா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நாதஸ்வரம் வாசித்தவர்கள் எம்.பி.என்.சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் ஆவார்கள்.
- 9 வயதில் பொன்னுசாமி தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் கடந்த 1967-ம் ஆண்டு வெளியான தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் இசை உலகிற்கு புதிய அத்தியாயத்தை கொடுத்தது. நாதஸ்வரத்தை ரசிக்காதவர்கள் கூட இந்த படத்தின் காட்சிகளை பார்த்து அந்த இசையை தனக்குள் ஈர்த்து மெய்மறக்கும் அளவுக்கு சென்றனர்.
இந்த திரைப்படத்தில் உண்மையாக நாதஸ்வரம் வாசித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான்களான எம்.பி.என்.சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் ஆவார்கள். கழுத்து நரம்புகள் புடைக்க நாதஸ்வரத்தை இசைப்பது போன்று நடிகர் சிவாஜிகணேசன் நடித்தபோதிலும், அதன் பின்னணியில் இருந்தது இந்த இசை சகோதாரர்கள் என்பதை மறுக்கமுடியாது.
9 வயதில் பொன்னுசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாதஸ்வரம் வாசித்து தனது இசைப் பயணத்தை தொடங்கினார். அவரது அண்ணன் சேதுராமன் தம்பியின் இசை ஆர்வத்தை உணர்ந்து தனது 11-வது வயதில் அவருடன் கைகோர்த்தார்.
1977-ல் தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருதை வழங்கி கவுரவித்தது. 1997-ல் கிருஷ்ண கான சபாவின் சங்கீதா சூடாமணி விருது, கர்நாடக மாநில அரசின் உயரிய விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கி குவித்த இந்த இசை சகோதரர்களின் பயணம் தமிழகம் மட்டுமின்றி, மாநிலம் கடந்தும், நாடுகளை கடந்தும் ஒலிக்க தொடங்கியது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இவர்களது நாதஸ்வர இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்பதை பல முறை பறைசாற்றி உள்ளனர்.
இதில் பொன்னுசாமி கடந்த சில ஆண்டுகளாக இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். ஆனால் நாதஸ்வரத்தை மறக்கவில்லை. தினமும் ஒருமுறையாவது அந்த நாதஸ்வரத்தை தொட்டு வணங்கி தனது நாடிக்கமலத்தில் இருந்து வரும் காற்றுக்கு இசை உருவம் கொடுத்த ஒப்பற்ற கலைஞராக அனைவராலும் போற்றப்பட்டு வந்தார். இசை நுணுக்கங்களை தெளிவாக கற்று அதனை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்து வந்தார். தில்லானா மோகனாம்பாள் திரைப் படத்திற்கு பிறகு கோவில் புறா என்ற படத்திலும் இசைக் கலைஞராக நடித்திருந்தார். அதன்பிறகு திரைக்கு வரவில்லை.
சமீப காலம் முதல் குறைந்த சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த பொன்னுசாமி உரிய சிகிச்சையும் பெற்றார். இந்த நிலையில் நேற்று மதியம் அவர் தனது 91-வது வயதில் மதுரை விளாங்குடி விசாலாட்சி மின் காலனியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். தில்லானா மோகனாம்பாள் படம் வெளியான பிறகு பிரபலங்கள் பலர் பங்கேற்ற விழாக்களில் நாதஸ்வரம் இசைக்கும் பணியை பொன்னுசாமி பெற்றுள்ளார். தலைமுறை தலைமுறையாக இவரது குடும்பத்தினர் நாதஸ்வரம் வாசித்து வந்துள்ளனர்.
பொன்னுசாமி
இவரது இழப்பு இசை உலகிற்கு பேரிழப்பு என்று கூறி பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மறைந்த பொன்னுசாமிக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளார். மகள் மதுரையில் உள்ள அரசு இசைக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
- 'ஹாய் நான்னா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
- இப்படம் டிசம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிக்கும் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் இணைந்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைக்கிறார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
'ஹாய் நான்னா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் நானி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இந்நிகழ்வினில் நடிகர் நானி பேசியதாவது, 'நான்னா' திரைப்படம் மிக அழகான படம். படத்தை முழுதாகப் பார்த்த பிறகு சொல்கிறேன், இந்தப்படம் எனக்கு பெருமை தரும் படம். டிசம்பர் 7 திரையரங்குகள் கொண்டாடும் படமாக இது இருக்கும். ஒரு காதல் படம், ஆனால் பரபரவென போகும் கதை என கண்டிப்பாக உங்கள் மனதில் இடம்பிடிக்கும் படமாக இருக்கும். தமிழில் நான் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து எப்போதும் எனக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இது ஒரு முறை பார்க்கும் படமாக இருக்காது, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும் என்றார்.
மேலும் அவர் பேசியதாவது, அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் என பிரிக்க முடியாது. அன்பு ஒன்று தான். அம்மா படங்கள் எல்லாம் நிறைய வந்துவிட்டன. இப்போது அப்பா படங்கள் வர ஆரம்பித்துள்ளன. அது நல்லது என்றே நினைக்கிறேன். எனக்கு தமிழ் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மணிரத்னம் சார், கமல் சார் படங்களின் தீவிர ரசிகன் நான். ஆனால் தமிழ் முழுமையாக பேச வராது, இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன். விரைவில் பேச முடியும் என நம்புகிறேன்.
ஆரம்பத்தில் தமிழ் இயக்குனர்களோடு வேலை பார்த்தேன். ஆனால் அதை இங்குள்ள மக்கள் தெலுங்குப் படமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். தெலுங்கு மக்கள் தமிழ்ப் படமாக பார்க்க ஆரம்பித்தார்கள். பின்னர் 'பாகுபலி', 'காந்தாரா' போன்ற படங்கள் வந்த பிறகு தமிழ் நடிகர், தெலுங்கு நடிகர் என்று பிரித்து பார்த்து படம் எடுக்க தேவையில்லை, சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால் போதும் அது மக்களிடம் போய்ச் சேரும் எனப் புரிந்தது. எனவே தான் நான் கதைகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன். தமிழ், தெலுங்கு எனப் பிரித்து வைக்க தேவையில்லை, என் எல்லாப் படங்களும் இங்கு தமிழில் வரும்.
நடிகை மிருணாள் இந்தப் பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று மொத்த டீமும் நினைத்து தான் தேர்வு செய்தோம், அதை அவர் அற்புதமாக செய்துள்ளார். ஒரு மிகச்சிறந்த தமிழ் இயக்குனர், எனக்குப் பிடித்தவர், அவர் எனக்காக ஒரு கதை சொன்னார், விரைவில் அப்படம் பற்றிய அறிவிப்பு வரும்.
எனக்கு இந்தப்படத்தில் சவாலாக இருந்தது என்னவெனில், நான் ஏற்கனவே 'ஜெர்ஸி'யில் அப்பாவாக நடித்துவிட்டேன். அது மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர். மீண்டும் அதே போல் ஆனால் அதிலிருந்து மாறுபட்டு நடிப்பது தான் சவாலாக இருந்தது.
முன்னர் எல்லாம் முத்தக் காட்சியில் திரை இருட்டாகிவிடும், 2023-ல் கிஸ் பெரிய விஷயம் இல்லை. இங்கு கல்யாணம் ஆனவர் இருப்பீர்கள், மனைவியை முத்தம் கொடுக்காமல் யாராவது இருப்பார்களா? முன்னர் மாதிரி மரத்தை சுற்றுவது, பூவைக் காட்டுவது என்று இப்போதைய ஆடியன்ஸை ஏமாற்ற முடியாது. முத்தத்தை திரையில் காட்டலாம் தவறில்லை.
நம் வாழ்க்கையில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள், படத்தில் மட்டும் ஏன் இருக்கக்கூடாது? என் படத்தில் அவர்கள் பெரிய இடம் வகிப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்தப்படம் ஆண்- பெண் உறவை மிகச்சிறப்பாக பேசும் படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் சிறப்பான படைப்பாக இருக்கும் என்று பேசினார்.
- விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'தளபதி 68' படத்தில் 'லவ் டுடே' படத்தின் கதாநாயகி இவானா, விஜய்யின் தங்கையாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'தளபதி 68' படத்தின் கதாபாத்திரங்கள் முன்பே வெளியான நிலையில், இவானா இந்த படத்தில் இணையவுள்ளதாக பரவி வரும் செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
- அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார்.
- நயன்தாராவின் 75-வது படமாக அன்னபூரணி உருவாகி இருக்கிறது.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அன்னபூரணி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
நயன்தாராவின் 75-வது படமாக உருவாகி இருக்கும் அன்னபூரணி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
#Annapoorani Trailer for you all https://t.co/jIzqsMWzn1 Releasing worldwide on Dec 1st ?
— Nayanthara✨ (@NayantharaU) November 27, 2023
சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
- ஹரி இயக்கத்தில் விஷால் புதிய படத்தில் நடிக்கிறார்.
- இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.
சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
'விஷால் 34' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஷால் 34 போஸ்டர்
இந்நிலையில், 'விஷால் 34' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் டைட்டில் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இப்படத்தின் டைட்டிலுக்காக ரசிகர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.
Flame up the excitement ?#Vishal34 - Title Reveal with FIRST SHOT on 1.12.2023. #Hari @stonebenchers @ZeeStudiosSouth pic.twitter.com/2dcnRAbchJ
— Vishal (@VishalKOfficial) November 27, 2023
- நடிகர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் வெளியானது.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள லோகேஷ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், "ஐந்து படங்களின் இயக்கத்திற்கு பின் கதைசொல்லல் மற்றும் பொழுதுபோக்கின் நிலப்பரப்பை மறுவரையறை செய்ய எனது தயாரிப்பு முயற்சி - ஜி ஸ்குவாட் தொடங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
முதல் சில தயாரிப்புகள் எனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்களின் ஆக்கப்பூர்வமான யோசனைகளை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும். நீங்கள் அனைவரும் இதுவரை எனக்கு அளித்த அதே ஆதரவை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். எங்கள் தயாரிப்பின் முதல் படத்தின் அப்டேட்டிற்காக காத்திருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- அமீர்- ஞானவேல் ராஜா விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
- இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
'பருத்தி வீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாடலாசிரியர் சினேகன், இயக்குனர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் "நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
நான் இயக்குனர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
— Snekan S (@KavingarSnekan) November 27, 2023
அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை.
பருத்தி வீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு…
- இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
- மனிஷா யாதவ் தன் படத்தில் நடிப்பார் என்று இயக்குனர் சீனு ராமசாமி குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சீனுராமசாமி. இவர் பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர், இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டினார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகை மனிஷா யாதவ் தனக்கு நன்றி தெரிவித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட இயக்குனர் சீனு ராமசாமி, மனிஷா யாதவ் தன் படத்தில் நடிப்பார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து நடிகை மனிஷா யாதவ் இனி சீனு ராமசாமியுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த சர்ச்சை திரைத்துரையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி ஒன்றில் மனிஷா யாதவ் கூறியதாவது, "கடந்த வாரம் சீனு ராமசாமியின் ஆபீசில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு புதிய படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாக சொல்லப்பட்டது. எனக்கு அது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
'இடம் பொருள் ஏவல்' படப்பிடிப்பின்போது அவர் என்னை நடத்திய விதத்தின் அடிப்படையிலும், அவர் என்னை அப்படத்தில் இருந்து நீக்கியதாலும் இனி அவருடைய படத்தில் நடிக்க விரும்பவில்லை. இது எல்லாவற்றுக்கும் காரணம் நான் அவரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளவில்லை என்பதும், அவர் செய்த எல்லாவற்றுக்கும் ஒத்துழைக்கவில்லை என்பதும்தான்.
இந்த விஷயம் என்னை மிகவும் பாதித்ததால் அது குறித்து நான் யாரிடமும் பேசகூட விரும்பவில்லை. எனக்கு நடிப்பு வரவில்லை என்று அவர் துறையில் இருக்கும் அனைவரிடமும் கூறிவிட்டார் என்று நினைக்கிறேன். 'ஒரு குப்பை கதை' பட விழா மேடையில் நான் அனைவருக்குமே நன்றி சொன்னதால் அவருக்கும் சேர்த்து நன்றி சொன்னேன்.
நல்ல மனம் கொண்ட பெரிய இயக்குனர்களிடம் நான் பணியாற்றியிருக்கிறேன். திறமையானவர்களாக இருந்தும் தார்மீக உணர்வு இல்லாதவர்களை நான் மனிதர்களாகவே மதிப்பதில்லை" என்று கூறினார்.