search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது.
    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 24-ந்தேதி நடைபெற இருந்த ‘கலைஞர் 100 விழா’ தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் 'கலைஞர் 100 விழா' பிரமாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

    அதன்படி தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும்விதமாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 'கலைஞர் 100 விழா' பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 24-ந்தேதி நடைபெற இருந்த 'கலைஞர் 100 விழா' தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

    மிச்சாங் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவர் ஸ்டார் சீனிவாசன் ரூ.14 லட்சத்தை அட்வான்ஸ் தொகையாக பெற்றுக் கொண்டுள்ளார்.
    • பணத்தை திருப்பி கொடுக்காததால் முனியசாமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், ராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டிணத்தை சேர்ந்த முனியசாமி என்பவருக்கு ரூ.15 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சத்தை அட்வான்ஸ் தொகையாக பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், கடனும் வாங்கி கொடுக்காமல் பெற்று கொண்ட ரூ.14 லட்சத்தையும் திருப்பி கொடுக்காததால் முனியசாமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


    இந்த வழக்கு நீதிமன்றத்தில் பல முறை விசாரணைக்கு வந்தும் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாததால் இன்று நடுவர் நீதிமன்ற நீதிபதி பவர் ஸ்டாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இந்த பிடிவாரண்ட் சென்னை, அண்ணா நகர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 2-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பலரை இதுபோன்று ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்பம் 'பைட் கிளப்' .
    • 'பைட் கிளப்' திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைட் கிளப்' (Fight Club). இந்த படத்தில் 'உறியடி' விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயன், சந்தானம், ஷங்கர் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ரீல்ஸ் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், 'பைட் கிளப்' (Fight Club) திரைப்படத்தின் முதல் பாடலான 'யாரும் காணாத' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 'பைட் கிளப்' (Fight Club) திரைப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.




    • நடிகர் யஷ்ஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
    • யஷ் நடிக்கும் 19-வது படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'கே.ஜி.எப்' படத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் பிரபலமானவர் யஷ். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்த நடிகர் யஷ்ஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


    நடிகர் யஷ்ஷின் 19-வது படத்தை இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இதில், சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மாஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி, இப்படத்திற்கு 'டாக்ஸிக்' (TOXIC) என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இப்படம் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    இயக்குனர் கீது மோகன்தாஸ், தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான 'பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அதுமட்டுமல்லாமல், மாதவன் நடித்த 'நள தமயந்தி' படத்தில் கதாநாயகியாக நடித்தார். மலையாளத்தில் 2019-ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த 'மூத்தோன்' என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’.
    • இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.



    இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு 'தங்கலான்' படக்குழு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், "உங்கள் கலைத்திறன் உண்மையிலேயே சினிமாவிற்கு கிடைத்த பரிசு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


    • அணை தண்ணீர் திறந்துவிட்டால் இங்கே தண்ணீர் வந்துதான் ஆகும்.
    • நான் கொஞ்சம் உயராமாக வீடு கட்டியதால் தப்பித்தேன்.

    'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகர்கள் மற்றும் சின்னத்திரை பாலா மற்றும் பலர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.


    இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் அரும்பாக்கத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக காரின் மேல் அமர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்," இது அரும்பாக்கம், திருக்கமலம் கோயில் மூன்றாவது தெரு. 100 மீட்டர் தொலைவில் கூவம் ஆறு உள்ளது. செம்பரம்பாக்கம் தண்ணீர் நம்ம ஏரியாவிற்கு வருவது அரிது. அணை தண்ணீர் திறந்துவிட்டால் இங்கே தண்ணீர் வந்துதான் ஆகும். கூவம் ஆறை ஒட்டியுள்ள பகுதி இது என்பதால் தண்ணீர் வரும். பலரும் தாழ்வாக கட்டிவிட்டார்கள். நான் கொஞ்சம் உயரமாக வீடு கட்டியதால் தப்பித்தேன்.


    எல்லாவற்றிற்கும் பெருநகர மாநகராட்சியை, அரசை குறை சொல்ல முடியாது. ஏனெனில், செம்பரம்பாக்கம் அணையில் நீர் அதிகமாக இருந்தால் அதை திறந்துவிட்டே ஆக வேண்டும். இல்லையெனில் அணை உடைந்துவிடும். ஏரி கரையில் உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வந்துவிட்டது. ஏனெனில், பெரும் மழை, புயல். எதுவும் செய்ய முடியாது. அரசை குறை சொல்லி ஒரு பயனும் இல்லை. நிஜத்தை பேசணும். கூவம் ஆற்றிற்கு அருகில் தாழ்வான பகுதிகளில் உள்ள எல்லாரும் பாதிக்கப்படுவார்கள். எல்லாம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டது. ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதால் இந்த வேதனைகளையெல்லாம் தாங்க வேண்டியதாக இருக்கிறது. செம்பரம்பாக்கம் அதிக கொள்ளளவு கொண்ட ஏரி. அது நீர் நிரம்பி உடைந்துவிட்டால் சென்னையே மூழ்கிவிடும்." என்று கூறினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


    • பனகல் மாளிகை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இயக்குனர் பார்த்திபன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
    • ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாதபோது, பேஷன் ஷோ எதற்கு?

    'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகர்கள் மற்றும் சின்னத்திரை பாலா மற்றும் பலர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    இவர்களை போன்று இயக்குனர் பார்த்திபன் சைதாப்பேட்டை பனகல் மாளிகை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அவர் அதுகுறித்த விடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். த(க)ண்ணீர் தேசம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.



    மேலும், இயக்குனர் பார்த்திபன் இதுகுறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன்.ஏன் இந்த அவல நிலை?சென்னை மட்டுமல்ல,சமீபத்தில் கண்டுங்காணா குண்டுங்குழி நிறைந்த மும்பாபையிலும்(பணக்கார முதலைகள் சாலையை கடக்கும் மாநிலம்)இதே நிலை.

    தனி மனிதனாகவும்,தமிழ்நாடாகவும்,வல்லரசு(?) நாடாகவும்,இந்தியா தன்னிறைவடையாத (தண்ணீரும் வடியாத)நாடு! தண்ணீர் இருக்கிறதா?என ஆராய,சந்திரனுக்கு சந்திரயானும்,செவ்வாய்க்கு செங்கல்வராயனும் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்?ஒரு ப்ளாஸ்டிக் படகு எடுத்துக் கொண்டு (வேளச்)ஏரிக்குள் கட்டப்பட்டிருக்கும் lake view apartments-க்கு மிக அருகாமையில் நிறைமாத நீரை பார்வையிடலாமே?

    அதிவேக புல்லட் ரயில்,அதிநவீன தொழில் நுட்ப முன்னேற்றம் இப்படிப்பட்ட நாளைய இந்தியப் பெருமையில் எருமை urine போக! அடிப்படை தேவைகள்,வேலை வாய்ப்புகள்,சாலை வசதிகள்,மாசற்ற காற்று,இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளும் இடரற்ற சக்தி,ஏழை மக்களும் எதற்கும் கையேந்தாமல் கவுரவமாக வாழும் உயர்நிலை இவைகளை வழங்க,வழங்கும் வரி பணத்தையெல்லாம் பயன்படுத்திவிட்டு பின்பு வுடலாம் ராக்கெட்டு! ஒரு சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 உயிர்களை மீட்ட போது எப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம்.ஆனால் இந்தியா என்ற சுரங்கத்திற்குள் இருந்து இத்தனை கோடி உயிர்களை மீட்க முடியாத இழிநிலையில் சுதந்திர தின மூவர்ண பல்லி மிட்டாய்களும்,குடியரசுதின பைக் சாகச கொண்டாட்ட செலவினங்கள் எதற்கு?



    ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, ஃபேஷன் ஷோ எதுக்கு? இப்படி நூறாயிரம் கேள்விகளில் தூக்கம் தொலைந்தது. நானோ,kpy பாலாவோ,அறந்தாங்கி நிஷாவோ இன்னும் சிலரின் உண(ர்)வு பொட்டலங்கள் செய்திக்கு செய்தி சேர்க்குமே தவிற, அடுத்த வேளை அடுப்புக்கு நெருப்பும்,அதில் பொங்க அரிசியும் சேர்க்காது. சமீபத்தில் கீர்த்தனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்… இன்னும் 50 ஆண்டுகளில் என் காலத்திற்கு பிறகும் இந்தியாவிலேயே பறக்கும் கார்கள்(இப்போது மிதக்கும் கார்கள்) போன்ற அதியற்புத வளர்ச்சியை காணலாமென.

    அதை விட… இந்திய வரைபடத்தில், வறுமை கோடும் அதனடியில் சில எலும்புக் கூடும் வாழும் நிலை மாற வேண்டும். (நான் குற்றஞ்சுமத்துவது அரசியல்வாதிகளை அல்ல.பொருளாதாரம் சார்ந்த அரசியலை.அதை சீர் செய்ய தொலைநோக்குள்ள தன்னலமற்றவர்கள் தகுதி பெற வேண்டும்!) இது ஒரு தனிமனித சிந்தனை எனவே தவறு இருக்கலாம்.இருப்பின் பொருட்படுத்தாதீர்கள். இன்றும் இயன்றதைச் செய்து இடர் குறைப்போம்!" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை விமர்சித்து பலரும் பதிவிட்டு வந்தனர்.

    இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் பார்த்திபன் புதிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தேர்ந்தெடுக்கும் உடைகளில் ஒருவரது நாகரீகமும், பயன்படுத்தும் வார்த்தைகளில் அவர்களது தரமும் விளங்கும். என் கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அது தனிநபர் தாக்குதலோ,ஒரு கட்சி சார்ந்த சாடலோ அல்ல.சுதந்திர இந்தியாவை இதுவரை பல கட்சிகள் ஆண்டுள்ளன. இன்றைய நிலைக்கு இதுவரை யாவும் காரணம். இது மாற… இனியொரு விதி செய்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'.
    • 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது.


    இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படம் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பிரசாந்த் நீல் 'கேஜிஎப் 3' குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், "கேஜிஎப் மூன்றாம் பாகம் உருவாவது உறுதி. அதற்கான கதையும் ரெடியாகிவிட்டது. அதற்கான அறிவிப்பை வெளியிடும் முன் நாங்கள் கதையை தயார் செய்ய முடிவு செய்தோம். யஷ் மிகவும் பொறுப்பான நபர், வெறும் வியாபார நோக்கத்துடன் மட்டுமே எதையும் செய்யமாட்டார். 'கேஜிஎப்' மூன்றாம் பாகத்தை நான் இயக்குவேனா இல்லையா என்று தெரியாது. ஆனால், அதில் கண்டிப்பாக யஷ் இருப்பார்" என்று தெரிவித்தார்.

    • நடிகர்கள் பலர் தங்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்து வருகின்றனர்.
    • மக்கள் இயக்க நிர்வாகிகள் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் தண்ணீர் வடிந்தாலும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.


    இதையடுத்து நடிகர்கள் பலர் தங்களால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய் "வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

    இந்த வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்ய கேட்டுக்கொள்கிறேன்" என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.


    இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை பாராட்டி இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எண்ணூர் cpcl அருகே இந்த கொடுரம்.. இந்த oil நம் பார்வையில் படுவதால் தெரிகிறது.. ஆனால் இந்த மாதிரி நிலைமையை பயன்படுத்தி காற்றில் விஷவாயுக்களையும் கலந்து விட்டுள்ளனர்.. இந்த பக்கம் ஒரு முறை வந்து சுவாசித்து பார்த்தால் புரியும்.. வாழ்த்துகள் இந்த விஜய் மக்கள் இயக்க நண்பர்களுக்கு" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அந்த பகுதியிலிருந்து மக்களை காப்பாற்றும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.


    • தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இளம் பெண் ஜெகதீஷை வற்புறுத்தினார்.
    • திருமணம் செய்து கொள்வதாக ஜெகதீஷ் காலம் கடத்தி வந்தார்.

    புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் சில திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். இவருக்கு காக்கிநாடவை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்கள் கழித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இளம் பெண் ஜெகதீஷை வற்புறுத்தினார். திருமணம் செய்து கொள்வதாக ஜெகதீஷ் காலம் கடத்தி வந்தார்.

    இந்த நிலையில் ஜெகதீஷ் வேறு ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்த இளம் பெண் ஜெகதீஷை ஒதுக்கி வைத்து விட்டு வேறு ஒரு வாலிபருடன் நெருக்கமாக பழகி வந்தார். இதனை அறிந்த ஜெகதீஷ் இளம் பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராரில் ஈடுபட்டார். கடந்த மாதம் இளம் பெண் வாலிபருடன் உல்லாசமாக இருந்தார்.


    ஜெகதீஷ் இதனை சமையலறை ஜன்னல் வழியாக தனது செல்போனில் போட்டோ வீடியோ எடுத்தார். சிறிது நேரம் கழித்து இளம் பெண் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டி தான் எடுத்த போட்டோக்களை அந்த பெண்ணிற்கு காட்டினார். அப்போது இளம் பெண்ணுடன் இருந்த வாலிபர் ஜெகதீசை விரட்டி அடித்து விட்டு போலீசில் புகார் செய்வதாக தெரிவித்தார்.

    2 நாட்கள் கழித்து ஜெகதீஷ் எடுத்த அரை நிர்வாண போட்டோக்களை இளம்பெண் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி வைத்தார். தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அரை நிர்வாண போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக ஜெகதீஷ் இளம் பெண்ணை மிரட்டினார். இதனால் விரக்தி அடைந்த இளம் பெண் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.



    இது குறித்து தகவல் அறிந்த பஞ்சகுடா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம் பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இளம்பெண் தற்கொலை செய்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இளம் பெண் செல்போன் எண்ணிற்கு கடைசியாக பேசியவர்கள் யார் என விசாரணை நடத்திய போது அவருடன் இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது ஜெகதீஷ் நிர்வாண படங்களை காட்டி விரட்டியதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் 2 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து ஜெகதீசை கைது செய்தனர். 

    • நடிகர் பாலா பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார்.

    சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


    இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார்.சமீபத்தில் நகைச்சுவை நடிகர் பாலா ஈரோடு மாவட்டம் குன்றி ஊராட்சி மலை கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பின் மூலம் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார்.

    இந்நிலையில், சென்னையில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் குடும்பங்களுக்கு நேரில் சென்று நடிகர் பாலா பண உதவி செய்துள்ளார். அதாவது, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கியுள்ளார்.


    இதுகுறித்து பாலா பேசியதாவது, "என்னை வாழவைத்த சென்னைக்கு என்னால் முடிந்த உதவி இது. என் கணக்கில் இருந்த சுமார் ரூ.2.15 லட்சத்தை எடுத்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.1000 கொடுத்து இருக்கிறேன்" என்றார். இவருக்கு மக்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    • கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
    • வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

    நடிகர் விஜய் சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் `மிச்சாங்' புயல் கனமழை காரணமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும், போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.

    வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

    இந்த வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்ய கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம்... துயர்துடைப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×